மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

குடியரசுத் தலைவர் உரையைக் கவனிக்காத ராகுல்

குடியரசுத் தலைவர் உரையைக் கவனிக்காத ராகுல்

நாடாளுமன்றத்தில் இரு அவையினரின் கூட்டுக் கூட்டத்தில், இன்று (ஜனவரி 29) முதன்முறையாக உரையாற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அப்போது, முன்வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சக காங்கிரஸ் எம்பிக்களுடன் பேசிக்கொண்டிருந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்தகுமார் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

முதன்முறையாக நாடாளுமன்றத்தில் ராம்நாத் கோவிந்த் பேசியதால், அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். குடியரசுத் தலைவர் பேசுவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னதாக நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

குடியரசுத் தலைவர் உரையின்போது, அருகிலிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ராகுல் பேசிக்கொண்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டுமல்லாமல், மற்ற காங்கிரஸ் தலைவர்களுடனும் அளாவளாவியுள்ளார். சக உறுப்பினர்கள் கைதட்டும்போதுகூட, ராகுலின் கவனம் ராம்நாத் மீது பதியவில்லை என்று கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் உரை முடிந்ததும், உடனே மைய மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார் ராகுல். அவருடன் சேர்ந்து, சில காங்கிரஸ் எம்பிக்களும் வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கு மாறாக, ராகுலின் தாயாரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் நடவடிக்கைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. குடியரசுத் தலைவர் பேச்சு தொடங்குவதற்கு இருபது நிமிடங்கள் முன்னதாக, அவர் மைய மண்டபத்துக்கு வந்தார். அவரது உரை முடிந்ததும், சோனியா தன் முன்னிருந்த மேஜையைத் தட்டினார்; அப்போதும், ராகுல் எந்த வித உணர்வையும் வெளிப்படுத்தவில்லை.

ராகுலின் செயல்பாடுகள் எப்படிப்பட்ட தாக்கங்களை உண்டாக்கும் என்பது பட்ஜெட் கூட்டத் தொடரின் மீதமுள்ள நாட்களில் தெரியவரும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 29 ஜன 2018