மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

விமர்சனம்: மன்னர் வகையறா!

விமர்சனம்: மன்னர் வகையறா!

குடும்பப் பகைக்கு மத்தியில் தன் உயிரையும் காதலையும் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் ஒருவனின் கதையே ‘மன்னர் வகையறா’.

என்னதான் சாதி ஒழிப்பைப் பற்றி பேசினாலும் இந்த மண்ணில் சாதி வலுவானதாகவே இருக்கிறது என்பதைப் பூசி மெழுகாமல் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன். சொல்லியிருப்பதை நியாயப்படுத்தவும் செய்கிறார். எங்கிருந்தோ வரும் ஷெட்டி, ரெட்டி, மேனன் எல்லாம் சாதி போட்டுக்கொள்ளும்போது இந்த மண்ணில் நாங்கள் சாதியைப் பெயருக்குப் பின் போட்டுக்கொள்ளக் கூடாதா என்று கேள்வி எழுப்புகிறார்.

இதை வைத்து, மன்னர் வகையறா சாதியை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது என எண்ண வேண்டாம். காமெடி, ஆக் ஷன், காதல் என நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்துள்ள குடும்பப் படம் இது. குடும்பக் கதைக்குள்தான் இப்படிச் சாதிக் குரலையும் இயக்குநர் எதிரொலிக்கச் செய்கிறார்.

காலம் காலமாகத் தமிழ் சினிமா அடித்துத் துவைத்து காயப்போட்ட பழைய பெருமைமிக்க குடும்பக் கதைதான் மன்னர் வகையறா. இருந்தாலும் தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வினால் சாயம் போகாமல் புதிதாகக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன். திரைக்கதைக்குத் தேவையானவற்றையே காட்சிகளாகவும் தந்துள்ளார்.

சாதி உணர்வு, அடிதடி, வெட்டுக்குத்து ஆகியவற்றையெல்லாம் மதுரையைக் களமாகக்கொண்ட சினிமாவில் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதை உடைத்துப் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி பக்கம் மடைமாற்ற முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். அதே சமயத்தில் பூபதி பாண்டியனின் பலம் நகைச்சுவை. அதுவே இந்தப் படத்தில் பல இடங்களில் அடிபட்டுப் போகிறது. ஒரு சில இடங்களில் அவர் காட்டும் சென்டிமென்ட்களும் எடுபடவில்லை.

களவாணி போன்ற நகைச்சுவையைப் பின்னணியாக கொண்ட படங்களிலேயே மிகுதியும் நடித்துவரும் விமல் ஒரு முழு நீளக் குடும்பக் கதையில் ஆக் ஷன் கலந்து நடித்திருக்கிறார். நடிகர் விமலுக்கு இதில் தயாரிப்பாளர் என்கிற கூடுதல் சுமை வேறு. விமல் காமெடி, ஆனந்தியுடனான காதல் என படம் முழுக்க இளமைத் துள்ளலுடன் தோற்றமளிக்கிறார். கலகலப்பான காட்சிகளிலும் சென்டிமென்ட்டிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட விமலுக்கு, இந்தப் படத்தில் வரும் மாஸ் காட்சிகளும் அதிரடி சண்டைகளும் எட்டாக் கனியாகவே இருக்கின்றன. நிறைய இடங்களில் இவரின் உதட்டசைவு வசனங்களுக்குச் சம்பந்தமில்லாமல் இருப்பது நன்றாகவே தெரிகிறது.

மற்ற படங்களில் இருந்து சற்றே விலகி நிற்கிறார் ஆனந்தி. துரு துரு கேரக்டரில் அழகாகப் பொருந்தியுள்ள ஆனந்திக்கு நகைச்சுவை டைமிங்கும் நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. ஆனாலும், சில இடங்களில் மட்டும் ஓவர் ஆக்டிங் துண்டாகத் தெரிகிறது.

பிரபு, சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், கார்த்திக் குமார், சாந்தினி தமிழரசன், வம்சி கிருஷ்ணா எல்லோருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

ரோபோ ஷங்கரும் சிங்கம் புலியும் படம் முழுக்க வந்தாலும் அவர்கள் நகைச்சுவை கொஞ்சம்கூட எடுபடவில்லை. அதிலும் ரோபோ சங்கர் பேசும் பல வசனங்கள் உறுத்துவதாலும், அவர் பேசுகிற இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுளிக்க வைப்பதாலும் அவரது நல்ல நடிப்பு நமக்குள் ஒட்ட மறுக்கிறது. இவர்கள் இருவரை விட இரண்டு காட்சிகளில் வந்தாலும் தன்னை நிரூபித்துச் செல்கிறார் யோகி பாபு.

பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாமே பளிச்சென்று வண்ணமயமாகவே உள்ளன. ஜாக்ஸ் பிஜாய் இசையில் முதல் பாடல் தவிர்த்து ஏனைய பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதத்தில் உள்ளன. சில இடங்களின் இரைச்சலைத் தவிர்த்துப் பார்த்தால் பின்னணி இசையிலும் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். திரைக்கதைக்கு விறுவிறுப்பையும், எதிர்பார்ப்பையும் கொடுத்துப் படத்தை கச்சிதமாகச் கொண்டு சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளரான கோபி கிருஷ்ணா.

படம் முழுக்க வரும் உறவுமுறைகளில் போதிய அழுத்தம் இல்லாததால் அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையோடு நம்மால் ஒன்ற முடியவில்லை காட்சிகளில் இன்னும் சுவாரஸ்யத்தையும், அழுத்தமான பதிவுகளையும் சேர்த்திருக்கலாம்.

எவ்வளவுதான் நவீன அம்சங்கள் வந்தாலும் குடும்ப அமைப்புகள் மாறாது என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறது இந்த மன்னர் வகையறா. குடும்ப அமைப்பை ஆதரிக்கும் ஒரு கதையில் சாதி உணர்வையும் சாதிப் பெருமிதத்தையும் தூக்கிப் பிடிப்பதன் மூலம், குடும்ப அமைப்பின் இன்றியமையாத பகுதிதான் சாதியும் என்று இயக்குநர் சொல்வதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஷெட்டி, மேனன் ஆகிய அடையாளங்களைக் கேள்விக்குட்படுத்த வேண்டும் என இயக்குநர் நினைக்கவில்லை. மாறாக, அவற்றை முன்வைத்துச் சாதி உணர்வை நியாயப்படுத்திவிட முடியும் என்று நினைக்கிறார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 29 ஜன 2018