கோவை டூ பெங்களூர்: டபுள் டெக்கர் ரயில்!

கோவையிலிருந்து பெங்களூருவுக்கு டபுள் டெக்கர் ரயில் விரைவில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை-பெங்களூரு இடையே இரவு நேர ரயில், சேலம்-கரூர் பயணிகள் ரயில் திருச்சி வரை நீட்டிப்பு, சென்னை எழும்பூர் விரைவு ரயில் நாமக்கல் வழியாக கரூர், ஈரோடு வரை நீட்டிப்பு, சேலம் கோட்டத்திலிருந்து புதிய ரயில் சேவை,தொடங்க வேண்டும் என சேலம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளில் அடிப்படையில் தற்போது கோவை - பெங்களூரு இடையே, டபுள் டெக்கர் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அந்த அறிவிப்பின் முதல் கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் கோவை - ஜோலார்பேட்டை இடையே எலெக்ட்ரானிக் லோகோமோடிவ் உடன் இரண்டு டபுள் டெக்கர் பெட்டிகள் இணைக்கப்பட்டு, 80 கி.மீ. வேகத்தில் சேலம் - கோவை இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 8 டபுள் டெக்கர் பெட்டிகள், 2 லக்கேஜ் கம் பிரேக்வேன் என 10 பெட்டிகள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
இரண்டாவது கட்டமாக, டிசம்பர் மாதம் கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதற்கான அறிக்கை தெற்கு ரயில்வேக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கோவை - பெங்களூரு இடையே டபுள் டெக்கர் ரயில் இயக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டுவருகிறது. பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. விரைவில் டபுள் டெக்கர் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.