வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கோரிக்கை!


2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட் வேண்டும் என்றும் வேளாண் பொருட்களின் விலையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2017-18 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு மத்திய அரசு ரூ.1,87,223 கோடி ஒதுக்கியது. இது அதற்கு முந்தைய நிதியாண்டு ஒதுக்கீட்டை விட 24 சதவிகிதம் அதிகமாகும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானம் 5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்த்தப்படும் எனவும், விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்கப்படும் எனவும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் 15 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுவதாகவும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் தற்கொலை, விவசாயத்தை விட்டு வெளியேறுவது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாட்டு விவசாயச் சங்க நிர்வாகி சிவ சூரியன் நியூஸ் 18 தொலைக்காட்சியிடம் பேசுகையில், “ இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் வேளாண் துறைக்கு நம்பிக்கையளிக்கும் செயல் திட்டங்களை அளிக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் வேளாண் துறையில் இருப்பதால் பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.
விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு பேசுகையில், “கடந்த 25 ஆண்டுகளில் வேளாண் துறைக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கென ஒதுக்கப்படும் நிதியும் அவர்களைச் சென்றடைவதில்லை. அதிக மகசூல் கிடைத்தும் விளைபொருளுக்கு அதிக விலை கிடைப்பதில்லை. எனவே உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்ய வேண்டும். நதிகளை இனைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். உற்பத்திக்கான செலவைக் விடக் கூடுதலாக 50 சதவிகிதம் அதிகமாகப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும்” என்றார்.