மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

அரசு பேருந்தில் விஜயகாந்த்

அரசு பேருந்தில் விஜயகாந்த்

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தேமுதிக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விஜயகாந்த் அரசுப் பேருந்தில் சென்று கலந்துகொண்டார்.

பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி கடந்த 19ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். பலத்த எதிர்ப்பையடுத்து பேருந்துக் கட்டணத்தை சற்று குறைத்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை ஏற்க மறுத்துவிட்டன. இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், கட்டணத்தை குறைத்துவிட்டதாக தமிழக அரசு நாடகம் ஆடுவதாகவும், திட்டமிட்டபடி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று (ஜனவரி 29) தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாவரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், ஆலந்தூரிலிருந்து பல்லாவரம் வரை சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்தார். அவருடன் வந்த தொண்டர்களுக்கும் சேர்த்து அவரே 500 ரூபாயைக் கொடுத்து டிக்கெட் எடுத்தார். பேருந்தில் பயணித்த பொதுமக்களிடம் கட்டண உயர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். விஜயகாந்திடம் கட்டண உயர்வினால் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பொதுமக்கள் கூறினர்.

பின்னர் பல்லாவரம் பேருந்து நிலையத்துக்கு அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட விஜயகாந்த், "பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே மறியல் நடத்தாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். ஆட்சியை நடத்த வக்கில்லை என்றால், ஆட்சியை விட்டு செல்ல வேண்டியதுதானே. லஞ்சம் மட்டும் கோடிக்கணக்கில் வாங்கிக் கொண்டு, கட்டண உயர்வை மட்டும் 10, 20 பைசாவாக குறைத்துள்ளீர்கள். நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாளர்களாக உள்ளனர். இந்த கண்டன ஆர்பாட்டம் என்பது இத்துடன் முடியாது. தொடர்ந்து பல இடங்களில் நடைபெறும்" என்றார். தான் பேருந்தில் பயணம் செய்தபோது எடுத்த டிக்கெட்டையும் மேடையில் காண்பித்தார்.

மேலும் விழுப்புரத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கையிற்றை கழுத்தில் மாட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து மறியலில் ஈடுபட்டு கைதான ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018