மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

எடப்பாடிக்கு ஸ்டாலின் பதில்!

எடப்பாடிக்கு  ஸ்டாலின் பதில்!

"அதிமுக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு 197 கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் போக்குவரத்து துறையை விட்டு சென்றது" என்று முதல்வருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

பேருந்துக் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பாக கடந்த 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் அரசுக்கு எதிராக அனுமதி இல்லாத போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்திருந்தார். தமிழக அரசு நேற்று கிலோமீட்டருக்கு 10 பைசா குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதனை பாஜக வரவேற்றது. ஆனால், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தமிழக அரசின் கட்டணக் குறைப்பைக் கண்துடைப்பு நாடகம் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜனவரி 29) உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து திமுக போராட்டம் நடத்துவது மக்கள் நலன் கருதி அல்ல, இது ஒரு அரசியல் ரீதியான போராட்டமே. 2011இல் அதிமுக ஆட்சி அமைந்தபோது, போக்குவரத்துத் துறை கடும் நஷ்டத்திலும் கடனிலும் இருந்தது. அதற்கு முந்தைய திமுக அரசின் செயல்பாடுகள்தான் காரணம்" என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசும்போது, "போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான 112 சொத்துகளை திமுக ஆட்சியில் அடமானம் வைத்திருந்தனர். இவ்வளவு நிதி நெருக்கடியையும் சவால்களையும் தாங்கிக்கொண்டு கடந்த 6 ஆண்டுகளாகப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாகம் செய்துகொண்டிருந்தோம்" என்று கூறினார். மேலும், இந்தச் சூழலை நன்கு அறிந்த திமுக, வேண்டுமென்றே அரசியல் லாபத்திற்காக போராட்டம் நடத்துகிறது. போக்குவரத்து ஊழியர்களை தூண்டிவிட்டதும், தற்போது போராட்டம் நடத்துவதும் திமுகதான் " என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 29) அறிவிக்கப்பட்டபடி திமுக சார்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. கொளத்தூர் காமராஜர் சிலை அருகே ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கைதுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் , "197 கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் 2006ம் ஆண்டு அதிமுக விட்டுச் சென்றது. மக்களுக்கான சேவைத் துறை என்பதால்தான் பேருந்துக் கட்டணத்தைச் சல்லிக்காசுகூடத் திமுக உயர்த்தவில்லை. யாருக்கு இதயத்தில் ஈரம் உள்ளது,என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். கட்டண உயர்வு செய்யாமலேயே திமுக ஆட்சியில் பேருந்து டிக்கெட் கட்டண வசூல் உயர்ந்தது" என்றும் முதல்வருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பேசுகையில், "பேருந்துக் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் தொடரும், மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டித் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறையில் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் திமுக நிலைப்பாடு" என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஸ்டாலின் மாலை விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு பேசிய ஸ்டாலின், பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறாவிடில் எடப்பாடி அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். போராட்டத்தில் 5 லட்சம் பேர் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 29 ஜன 2018