மின் மிகை மாநிலம்: முதல்வர்!


உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் மின் மிகை மாநிலமாகத் திகழுவதாகப் பெருமிதத்துடன் கூறினார்.
எரிசக்தித் துறை சார்பில் உடன்குடி அனல் மின் நிலையம் நிலை-1 அடிக்கல் நாட்டு விழா மற்றும் களப்பணி உதவியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜனவரி 29) நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு காணொளிக் காட்சி மூலம் உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், “இந்தியாவிலேயே தமிழ்நாடு தொழில் துறையில் முதன்மையான இடத்தில் உள்ளது. மாநிலத்தில் தொழில் துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது மின்சாரம் ஆகும். தடையற்ற மின்சாரம் இருந்தால்தான் தொழில்களை சிரமமின்றி நடத்த முடியும். தொழில்கள் சிரமமின்றி நடத்த முடியும் என்ற நிலை இருந்தால்தான் தொழிற்சாலைகள் பெருகும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவார்கள். அதன் மூலம் தனிநபர் வருமானம் பெருகும், நாடும் வளம் பெறும்.
தமிழகத்தில் பல்வேறு மின் திட்டங்களை நமது அரசு செயல்படுத்தியதன் காரணமாக தமிழ்நாடு மின் தேவையில் தன்னிறைவு அடைந்தது மட்டுமல்லாமல் மின் மிகை மாநிலமாகவும் திகழ்கிறது. எதிர்வரும் காலங்களில் மாநிலத்தின் எரிசக்தித் தேவை வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு மின் திட்டங்களை விரைந்து செயலாக்கத்திற்குக் கொண்டுவரத் தொடர்ந்து ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளை உடைய உடன்குடி அனல் மின் திட்டம் நிலை-1க்கான பணி ஆணை பாரத மிகுமின் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020-2021ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், செயலாக்கத்திற்கு வரவிருக்கும் பல்வேறு மின் திட்டங்களைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள மின் தொடர் கட்டமைப்பு, தொடர்ந்து விரிவாக்கப்பட்டுவருகிறது. அதன் விளைவாக, 2016-2017ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மாநிலத்தில் உயர் அழுத்த மின் பாதை அமைப்பதில் இந்தியாவிலேயே முதல் இடத்தையும், துணை மின் நிலையங்களின் மின்திறனை அதிகப்படுத்துவதில் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. புயல் வந்தாலும் சரி, வெள்ளம் வந்தாலும் சரி, வேகமாக, துரிதமாகப் பணியாற்றி மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய அமைப்பு மின்சாரத் துறைதான். இந்தியாவிலேயே அதிக அளவு மின் உற்பத்தி செய்கின்ற மாநிலம் என்ற பெருமையைத் தமிழகம் பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் தங்கமணி உட்படப் பலர் கலந்துகொண்டனர்.