மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

கள்ளத் துப்பாக்கி சந்தையா?

கள்ளத் துப்பாக்கி சந்தையா?

சென்னையிலும் திருச்சியிலும் 7 கள்ளத் துப்பாக்கிகள் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் கள்ளத் துப்பாக்கிச் சந்தையாக மாறுகிறதோ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.

அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து கடந்த 26ஆம் தேதி சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருவொற்றியூர் வந்த இருவரிடமிருந்து 5 கள்ளத் துப்பாக்கிகளும், ரூ.4 லட்சம் கள்ள நோட்டுக்களும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த கமல் (26), பெரம்பூர் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்த பிரதீப் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், திருச்சியில் ஒரு விடுதியில் பதுங்கியிருந்த இருவரிடமிருந்து 2 கள்ளத் துப்பாக்கிகளும், 10 துப்பாக்கிக் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த காவலர் பரமேஸ்வரன் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் கள்ளத் துப்பாக்கிச் சந்தையாக மாறுகிறதா என்று கேள்வி எழுப்பி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர், "சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் கள்ளத் துப்பாக்கிகள் தாராளமாக விற்கப்படுகின்றன என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சென்னை மற்றும் திருச்சியில் கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது எதேச்சையான நிகழ்வுகள் அல்ல. சென்னையிலும் திருச்சியிலும் கள்ளத் துப்பாக்கிகளுடன் சிலர் நடமாடுவது குறித்து அவர்களின் போட்டிக் குழுவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அப்படியானால் தமிழகத்தில் தொழில்முறையிலான துப்பாக்கிக் கடத்தல் மற்றும் விற்பனை கும்பல்கள் அதிக எண்ணிக்கையில் செயல்படுகின்றன என்றுதான் பொருள். தமிழகம் கள்ளத் துப்பாக்கிகளின் சந்தையாக மாறிவருவது தமிழகத்தின் அமைதிக்கும், சட்டம் ஒழுங்குக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரிந்து தான் கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தை ஆளும் கட்சி, இதற்கு முன் ஆண்ட கட்சிகளைச் சேர்ந்த சிலரும் இந்த கும்பல்களிடமிருந்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கியிருப்பதாகவும், அவர்களின் ஆதரவு இந்த கடத்தல் கும்பலுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இச்செய்தி உண்மையாக இருந்தால் தமிழகம் மிகப் பெரிய ஆபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகக் கருத வேண்டும்" என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும் துப்பாக்கிக் கலாச்சாரத்திறகு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், சிறிய குற்றங்களுக்குக்கூடக் கள்ளத் துப்பாக்கியைப் பயன்படுத்தும் நிலை உருவாகிவிடும் என்று கூறியுள்ள ராமதாஸ், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். .

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018