மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

மறியல்: ஸ்டாலின், வைகோ, திருமா கைது!

மறியல்: ஸ்டாலின், வைகோ, திருமா கைது!

கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப் பெறக்கோரி பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

போக்குவரத்துக் கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், திமுகவும் ஒருநாள் வரை கெடு விதித்தது. இதனால் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை ஒரு ரூபாய் குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், திட்டமிட்டபடி இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் பேருந்துக் கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறக் கோரி இன்று (ஜனவரி 29) தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் திமுக, மதிமுக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் பங்கெடுத்தன.

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து பேரணி சென்று காமராஜர் சிலை அருகே பேருந்தை மறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பேருந்துக் கட்டணத்தை முழுமையாகக் குறைக்க வேண்டும் என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "மிகப்பெரிய மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டம் இன்றுடன் முடிவடைவதாக இருக்காது. கட்டண உயர்வைக் குறைத்திருப்பதாக கபட நாடகம் ஆடியுள்ளனர். அரசு முழுமையாக கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் இதைவிட தீவிரமாக அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்கவுள்ளோம். பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள், பொதுமக்கள் சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்கவும், வழக்குகளை திரும்பப் பெறவும் வேண்டும்" என்று கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அப்பகுதியிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து மறியலில் ஈடுபட்ட வைகோவின் செய்தியாளர் சந்திப்பை ஸ்டாலின் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் மா.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் பனகல் மாளிகை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "100 சதவிகிதம் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு பொதுமக்களை வாட்டி வதைத்துவிட்டது. தற்போது 10 பைசா குறைத்திருப்பது ஏமாற்று வேலை. இந்த அரசு மக்கள் விரோத அரசு, இது அகற்றப்பட வேண்டும். அரசு பேருந்துகளில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசு முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மறியலில் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் பல்வேறு கட்சிகளும் கலந்துகொண்டனர். அங்கு திருநாவுக்கரசர் கூறுகையில், "அரசுக்குப் பணம் வேண்டுமென்பதற்காக மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து பணத்தை எடுப்பது நியாயமில்லை. மேலும் கட்டண உயர்வினால் எதிர்பார்த்த வருமானமும் இல்லை. பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது" என்றார்.

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், சிபிஐ எம் முன்னாள் எம்எல்ஏ ஆர். ராமமூர்த்தி ஆகியோர் மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, விசிக, காங்கிரஸ், சிபிஐ எம், மமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலையில் எ.வ.வேலு தலைமையிலும், திருச்சியில் கே.என்.நேரு தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. நெல்லையில் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல்வகாப் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல தமிழகம் முழுவதுமுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி மறியல் போராட்டம் நடத்தினர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 29 ஜன 2018