பங்கேற்பு நோட்டுகளில் முதலீடு உயர்வு!


டிசம்பர் மாதத்தில் பங்கேற்பு நோட்டுகள் மூலமாக இந்திய மூலதனச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் முந்தைய ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச உயர்வைச் சந்தித்துள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்காக பங்கேற்பு நோட்டுகள் (Participatory notes) வெளியிடப்படுகின்றன. இந்தியப் பங்குச் சந்தையில் நேரடியாகப் பதிவு செய்யாமல் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காக இந்த பங்கேற்பு நோட்டுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் பங்கேற்பு நோட்டுகள் மீது மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. அதாவது 2017ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் ரூ.1,28,639 கோடியாக இருந்த பங்கேற்பு நோட்டுகள் மீதான முதலீடுகள் 2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ரூ.1,52,243 கோடியாக உயர்ந்துள்ளதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.