மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

இந்தியாவில் சமத்துவமின்மை அதிகம்!

இந்தியாவில் சமத்துவமின்மை அதிகம்!

உலகின் அனைத்து நாடுகளிலும் சமத்துவமின்மை இருந்தாலும் இந்தியாவில் அதிகமாகவே உள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், விஜயவாடா நகரில் உள்ள சித்தார்த் கல்லூரியில் நேற்று (ஜனவரி 28) ‘அரசியலமைப்புச் சட்ட கொள்கைகளும் சிவில் சமூகத்தின் பங்கும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஜே. செலமேஸ்வர் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர், “உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் சமூகத்தில் சமத்துவமின்மை பல்வேறு வடிவங்களில், பல்வேறு காரணங்களால் இருக்கிறது. மதம், சாதி, மொழி, மண்டலம், வரலாற்று ரீதியான காரணங்களால்கூட இந்த சமத்துவமின்மை நிலவுகிறது.

ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமத்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், நம்நாட்டில் சமூகத்தில் சமத்துவமின்மை அதிகமாக நிலவுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவில் கூட சமத்துவமின்மை இருக்கிறது, ஜனநாயகம் இருக்கின்ற இடங்களில் சமத்துவமின்மையும் நிலவுகிறது. ஆனால், இந்த சமத்துவமின்மையைப் போக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 14 முதல் 18 வரை அனைத்து தரப்பினரின் வாழ்விலும் சமத்துவத்தை உறுதிசெய்ய அரசுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும், அரசியலமைப்புச் சட்டம் என்பது சில கட்டுரைகளின் தொகுப்போ அல்லது ஒரு நூலோ அல்ல; ஒரு நாட்டின் வழிகாட்டி நெறிமுறையாகும்; ஒரு சமூகம் வாழ்க்கையைத் தேர்வு செய்வதற்கான வழிமுறையாகும் என்று குறிப்பிட்ட அவர், “நீதிபதி பதவிக்கான கடமையை ஆற்றும்போது தனிப்பட்ட நம்பிக்கைகளும் விருப்பு வெறுப்புகளும் அருகில் வரக் கூடாது என்று நான் திடமாக நம்புகிறேன். நான் நீதிபதியாகப் பதவியேற்ற மறுதினமே எனது அரசியல் தொடர்புகள் குறித்து வெளிப்படையாக அறிவித்துவிட்டேன். எத்தனை பெரிய மனிதர்கள் அவ்வாறு செய்தனர் என்பது எனக்குத் தெரியாது” என்று தன் மீது சுமத்தப்பட்ட அரசியல் சார்பு குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்தார்.

“நீதிபதி பதவியில் இருந்து நான் இன்னும் 4 மாதங்களில் ஓய்வுபெற உள்ளேன். அதன் பிறகு எந்தப் பதவியையும் எதிர்பார்த்து எந்த அரசிடமும் கெஞ்ச மாட்டேன்” என்றும் அவர் தெரிவித்தார். ஓய்வு பெற்ற பின் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் தான் வசிக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 29 ஜன 2018