மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சிக்கு உதவுமா பட்ஜெட்?

சிறப்புக் கட்டுரை: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சிக்கு உதவுமா பட்ஜெட்?

பாஸ்கர் திரிபாதி

பருவநிலை மாற்ற ஒப்பந்தங்கள் மற்றும் உள்நாட்டு மாசுபாடு குறித்த கவலைகள் ஆகியவற்றின் காரணமாக இந்தியா சர்வதேச அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை வேகமாக அதிகரித்து வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மும்மடங்கு அதிகரிக்கும்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் வரிமாற்றம், உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் சீன சோலார் பொருள்களுக்கு இறக்குமதி குவிப்பு வரி அமல்படுத்தியது மற்றும் இறக்குமதி வரி நிர்ணயித்தது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் இலக்கை அடைவதிலிருந்து இந்தியா தடம் மாறியுள்ளது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பிப்ரவரி 1ஆம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறது. நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீர் மின் உற்பத்தி மற்றும் பயோ மின் உற்பத்தி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது.

2016ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் உற்பத்திக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் உரிய நிதி ஒதுக்கத் தவறி வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் 29 சதவிகிதத்துக்கு மிகாமல் வரி இருந்ததால் கடந்த ஆறு வருடங்களாக இத்துறையில் முதலீடுகள் அதிகரித்துவந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கான வரிவிகிதங்கள் அதிகரித்தது. சீனா, தைவான் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சோலார் உற்பத்திப் பொருள்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது. வரிவிகிதம் உயர்த்தப்பட்டதால் சோலார் மின்சாரம் உற்பத்திக்கான செலவும் அதிகரித்தது. அதேநேரத்தில் சோலார் மின் கொள்முதல் கட்டணமும் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால் சோலார் துறையில் தனியார் முதலீடுகள் தயக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. கிராமப்புற ஏழை மக்களுக்குக் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளும் குறைந்து கவலையை ஏற்படுத்துகிறது. புதிதாக வேலைவாய்ப்புகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதும் அதிகரிக்கவில்லை.

இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் 2015ன் படி முழுவதும் நிறைவேற்றிட வேண்டும். அதன்படி 2022ஆம் ஆண்டுக்குள் 175 கிகாவாட் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக உற்பத்தி செய்வதே இதன் இலக்காகும். இந்தியா தற்போது 92 சதவிகித மின்சாரத்தை நிலக்கரி போன்ற அனல்மின் நிலையங்கள் மூலமாகவே பெற்றுவருகிறது. நிலக்கரி போன்ற அனல்மின் நிலையங்கள் மூலமாக மின் உற்பத்தி செய்யும்போது பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவில் வெளியேறுகின்றன. இவை உலக வெப்பமயமாதலை அதிகரிக்கின்றன. 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் இலக்கில் 100 கிகாவாட் சோலார் மூலமும், 60 கிகாவாட் காற்றாலை மூலமாகவும் உற்பத்தியாகும். 2017ஆம் ஆண்டு நவம்பர் மாத கணக்குப்படி இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் 62 கிகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு 2014-15ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 2017-18ஆம் நிதியாண்டில் 38.9 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

2017ஆம் ஆண்டு நவம்பர் வரையில் இந்தியாவின் மொத்த மின்னுற்பத்தியான 331 கிகாவாட்டில் 18 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரமாகும். 2014ஆம் ஆண்டில் இதன் அளவு 13 சதவிகிதமாக இருந்தது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இந்தியா இதன் இலக்கை அடையவேயில்லை. 2017-18ஆம் நிதியாண்டில் 4.8 கிகாவாட் மின்சாரம் மட்டுமே கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அடைய வேண்டிய இலக்கோ 14 கிகாவாட்டாகும். இது டிசம்பர் 27ஆம் தேதி வெளியான பிரஸ் தகவல் பணியகத்தின் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் 3 கிகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்தால் மட்டுமே மார்ச் 2018க்குள் இலக்கை அடைய இயலும். 2016-17ஆம் நிதியாண்டில் இந்தியா கூடுதலாக உற்பத்தி செய்ய நிர்ணயிக்கப்பட்ட 16.66 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் 11.31 கிகாவாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்திருந்தது. அதாவது இலக்கை விட 32 சதவிகிதம் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு நவம்பர் வரையில் 44.8 சதவிகித மின்சாரம் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா இதே வேகத்தில் சோலார் மின் உற்பத்தி செய்தால் 2064ஆம் ஆண்டில்தான் 2022ஆம் ஆண்டுக்கான இலக்கை அடையும். உள்நாட்டு சோலார் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சீனா, தைவான் மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பொருள்களுக்கு 70 சதவிகித இறக்குமதி வரி விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தன. ஆனால், நாட்டின் தேவையில் 90 சதவிகித சோலார் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் ஓராண்டு சோலார் செல் உற்பத்தியே 3 கிகாவாட் மட்டும்தான். ஆனால், இந்தியாவின் தேவையோ 20 கிகாவாட்டாக உள்ளது. இந்தியாவில் ஒரு வாட்டுக்கான சோலார் தட்டுக்கள் செலவு 62 ரூபாயாகவும், சீனாவில் ஒரு வாட்டுக்கான சோலார் தட்டுக்கள் செலவு 25 ரூபாயாகவும் உள்ளது.

அதிகமான விலை, உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியன நிலவும் சூழலில் புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் கட்டணம் மட்டும் குறைந்துள்ளது. சோலார் மின் கட்டணமும் யூனிட் ஒன்றுக்கு 2.44 ரூபாயாகவும், காற்றாலை மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு 2.64 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் யூனிட் ஒன்றுக்கு 3.20 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய தூயசக்தி மற்றும் சுற்றுச்சூழல் நிதியம் (என்.சி.இ.இ.எஃப்) தூய ஆற்றல் வரியாகக் கடந்த ஆறு வருடங்களில் ரூ.53,967.23 கோடி வசூலித்துள்ளது என்று டிசம்பரில் வெளியான மத்திய பொது கணக்காய்வகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், மார்ச் மாதத்துக்குள் கூடுதலாக ரூ.29,000 கோடி வசூலாகுமென்றும் இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியா 240 மில்லியன் குடும்பங்களுக்கு இடைவிடாத மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு மின்சாரத் துறையில் ஒதுக்கும் மானியம் முக்கிய காரணியாக உள்ளது. ஜூலை 29ஆம் தேதி இந்தியா ஸ்பெண்ட் வெளியிட்டிருந்த அறிக்கையில், “இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் 92 சதவிகிதம் எரிபொருள்கள் மூலமாகத்தான் கிடைக்கிறது. இவை காற்று மாசுபாட்டுக்கு வழி வகுக்கின்றன. இதன் மூலம் மனிதர்களுக்கு நோய்த்தாக்குதலும், மரணமும் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளது.

இந்த ஆய்வறிக்கைகள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன. இந்தியாவின் மின்சாரத் துறைக்கான மானியத்தில் பெரும்பங்கு எரிபொருள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கே ஒதுக்கப்படுகிறது. 2015-16ஆம் நிதியாண்டில் இந்தியாவின் 1.35 லட்சம் கோடி மின்சாரத் துறை மானியத்தில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறைக்கு 6.9 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை உற்பத்தி அடுத்த ஐந்தாண்டுகளில் மும்மடங்கு அதிகரிக்கும். இதன்மூலம் 3,30,000 வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆனால், திறமையான திட்டங்கள் இல்லாமல் இது ஒருபோதும் சாத்தியமாகாது.

பல பயிற்சி மையங்கள் நகரங்களில் மட்டும்தான் உள்ளன. கிராமப்புறங்களில் இதில் மிகுந்த வேறுபாடு நிலவுகிறது. வீட்டு வேலைகள், குழந்தைகளைப் பாதுகாத்தல், சமூக விதிகள் ஆகியவை பெண்கள் இப்பணிக்கான பயிற்சிக்கு வருவதைத் தடைபோடுகிறது. இந்தச் சவால்களையும் சேர்த்தே நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண பட்ஜெட் ஒதுக்கீட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

நன்றி: இந்தியா ஸ்பெண்ட்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 29 ஜன 2018