நாட்டையே கலங்கவைத்த பிரச்சினையில் கதிர்

இளம் நடிகர்களில் கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்துவரும் கதிர், அடுத்ததாக நாட்டைக் கலங்க வைத்த பிரச்சினை கொண்ட கதையம்சத்தில் நடிக்கவிருக்கிறார்.
மதயானைக் கூட்டம், கிருமி, விக்ரம் வேதா ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த கதிர், திருநங்கையாக நடித்திருக்கும் ‘சிகை’ திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் ஆக்ஷன் ஹீரோவாகத் தன்னை நிரூபிக்கும் வகையில் சத்ரு படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு சமூகப் பிரச்சினையைப் பேசும் படம் ஒன்றில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று (ஜனவரி 28) சென்னை பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எம்.புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். இவர் ‘மன்னார் வளைகுடா’வை இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குநர். ‘உறுதி கொள்’ பாண்டி அருணாச்சலம், சரவணன் ஜெகதீசன் இணைந்து ஒளிப்பதிவு செய்கின்றனர். ‘விசிறி’ நவீன் சங்கர் இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் ரஞ்சித் கண்ணா பேசுகையில், “இது கிராமத்திலிருந்து நகரத்திற்குச் செல்கிற கதை. கிராமத்திலிருக்கும் வாலிபனான நாயகன் ஒரு பெரிய பிரச்சினைக்காக சென்னைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. நாயகன் அந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொண்டான், முடிவு என்ன என்பதே கதை. அது என்ன பிரச்சினை எனக் கேட்பீர்கள். சமீபத்தில் நாட்டையே கலங்கவைத்த பிரச்சினைதான் அது.
இப்படத்தின் கதையை உருவாக்கி அதற்கான சரியான நாயகனைத் தேடியபோது வெகு பொருத்தமாகக் கிடைத்தவர்தான் கதிர். கதை பிடித்து அவர் சம்மதித்தவுடன் எங்களுக்கு முழு திருப்தி. கதிருக்கு மதயானைக் கூட்டம், கிருமி படங்களுக்குப் பிறகு இப்படம் பெயர் சொல்லும் ஒன்றாக இருக்கும்.