மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: இதைத்தானா இந்த அரசாங்கம் விரும்புகிறது?

சிறப்புக் கட்டுரை: இதைத்தானா இந்த அரசாங்கம் விரும்புகிறது?

அம்மு ஜோசப்

‘இந்தியா இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக நம்பலாமா?’ என்ற கேள்வியை மனசாட்சி கேட்டுக்கொண்டே இருக்கிறது. குடியரசு தின கொண்டாட்டங்கள். விடுமுறைகள், அவற்றில் ஈடுபட்டு வீட்டுக்குச் சென்றவர்கள் திரும்புதல் என இந்த தேசம் பரபரப்பாக இருந்த காரணங்கள் முடிந்துவிட்டன என்று நான் சொல்லும்போது, பத்மாவத் படத்துக்கு எதிராகப் போராடியவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்களே என நீங்கள் குறிப்பிடுவது தெரிகிறது. அங்குதான் வருகிறேன். இதற்கெல்லாம் யார் காரணம்?

இந்தியா எத்தனையோ போராட்டங்களைக் கண்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் எத்தனையோ போராட்டங்களுக்கு அடிபணிந்திருக்கிறது. ஆனால், இப்படியொரு தவறான போராட்டத்துக்கு மத்திய அரசாங்கமும், (நேரடியாகவே சொல்லலாம் - பாஜக) அதன் ஆட்சிக்குக் கீழிருக்கும் மாநில அரசாங்கங்களும் ஆதரவளித்ததை எந்தக் கல்லில் எழுதிவைத்து, யாரை அருகில் உட்கார வைப்பது?

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது ராஜபுத்திர அமைப்புகள் சாலைகளெங்கும் ஆக்கிரமித்தது போல சமூக ஆர்வலர்களும், பெண் உரிமை, பெண் சுதந்திரம், சம உரிமை, சுய மரியாதை ஆகியவற்றுக்காகப் போராடியவர்களும் சாலைகளை அடைந்தனர். அதன் காரணம் என்ன?

ஜெய்ப்பூரில் பிறந்து பத்தாவது வரை படித்த ரூப் கன்வார் செப்டம்பர் 4, 1987ஆம் ஆண்டு எரியும் நெருப்பில் இறங்கினார். அப்போது, அவரைச் சுற்றிப் பல ஆண்கள் கையில் உயர்த்திப் பிடித்த கத்திகளுடன் ரூப் கன்வாருக்கு மரியாதை செய்துகொண்டிருந்தனர். ஆத்மார்த்தமாக அவரைப் பல பெண்கள் வணங்கிக்கொண்டிருந்தனர் என்றெல்லாம் எழுதிக்கொண்டிருக்கும்போதே, அப்போது ரூப் கன்வார் உதவி கேட்டு எப்படி அழுதிருக்கக்கூடும் என்ற கற்பனையும், அதனால் உருவானதோர் ஓலக்குரலும்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

திருமணமாகி எட்டு மாதத்திலேயே, தனது கணவர் மால் சிங் இறந்துபோன சோகத்தைக் கண்டார் ரூப் கன்வார். மால் சிங்கின் தாய்க்கு இருந்ததுபோலவே, அவருக்கும் மன அழுத்தம் அதிகமாகி பித்துப்பிடித்திருந்தது. திருமணமான சில நாள்களிலேயே இது தெரியவந்ததால், பெரும்பாலும் மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்த மால் சிங், செப்டம்பர் 3ஆம் தேதி இறந்துபோனார். இளைய வயதிலேயே கைம்பெண்ணாக மாறிவிட்ட ரூப் கன்வார் எப்படி இந்தச் சமூகத்தில் வாழ்வார் என்றும், ஒரு மாதம்கூட ஒன்றாக வாழாத கணவரின்மீது அந்த 18 வயது பெண் கொண்டிருந்த பதிபக்தியின் காரணம் என்றும் அவரை உடன்கட்டை ஏற வைத்தனர் அந்த ஊர் மக்கள். தன் பெண் இறந்து போனதையே, நாளிதழைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டார் ரூப் கன்வாரின் தாய்.

அப்படிப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டு, வடஇந்தியா பற்றி எரிந்தது. அதிலும், சம்பவம் நடைபெற்ற ராஜஸ்தானிலுள்ள தியோர்டிலா ஊருக்குச் சென்று நடைபெற்ற சம்பவங்களை விசாரித்து ‘ரூப் கன்வார் விருப்பமின்றியே உடன்கட்டை ஏற்றப்பட்டார்’என்று எழுதப்பட்டவை மிகப்பெரிய அளவில் இந்தப் போராட்டத்தைக் கொண்டுசேர்த்தன. ரூப் கன்வார் உடன்கட்டை ஏறிய இடத்தில் சமாதி கட்டி, அவரை வணங்கக்கூடிய தெய்வமாக மாற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டு, ‘உடன்கட்டை ஏறுவதை ஊக்குவிப்பதும், பெருமைப்படுத்துவதும் எதிர்காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதை அதிகரிக்கும். எனவே, அப்படிப்பட்ட சம்பவங்கள் நாட்டின் எந்த இடத்திலும் நடைபெறக் கூடாது’ என்று சொல்லி அந்த இடம் பூட்டப்பட்டது.

மேற்கண்ட சம்பவங்களால் ராஜபுத்திரர்களின் பெருமைகளில் ஒன்றாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ‘உடன்கட்டை’ஏறும் பழக்கம் தடைபட்டுப்போக, அதை எப்படி மேற்கொண்டு சரிசெய்வது என்பதைத் தீர்மானித்து முடிவெடுக்க ‘ஸ்ரீ தர்ம ரக்ஷா சமிதி’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. உடன்கட்டை ஏறுவது கண்டிப்பாக நடைமுறையில் இருக்க வேண்டும் என அரசாங்கத்துடன் இந்த அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. சமூக ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை வலிமையாகக் காட்டினார்கள். கடைசியில், எதிர்ப்பு தாளமுடியாமல் இந்த அமைப்பு கலைக்கப்பட்டதுடன், உடன்கட்டை ஏறும் வழக்கமும் கடைப்பிடிக்கப்பட யாருக்கும் அறிவுறுத்தப்படாமல் போனது.

வரலாற்றின் பக்கங்கள் அதிகம் என்பதாலோ என்னவோ, அன்று உடன்கட்டைக்கு ஆதரவாகக் களமிறங்கியவர்களில் முக்கியஸ்தர்களில் ஒருவரான கல்யாண் சிங் கல்வியின் மகன் லோகேந்திர சிங் கல்வி தான் பத்மாவத் படத்துக்கு எதிராக மக்களைத் திரட்டிக்கொண்டிருப்பவர் என்பது கவனிக்கப்படாமல் போய்விட்டது. பத்மாவதி ராணியைத் தவறாக சித்திரித்துவிட்டார்கள் என்று அவர்கள் பதற்றப்பட்டது மேற்கண்ட காரணத்தினால்தான்.

தற்போதைய மக்களுக்கு ஏற்ப, பத்மாவதி ராணியை உடன்கட்டை ஏறவிடாமல், கில்ஜியுடன் சேர்த்து வைத்து டூயட் பாட வைத்துவிடுவார்களோ என்ற பயத்தில்தான் படத்தைக் காத்திரமாக எதிர்த்தார்கள். ஆனால், பன்சாலி வீரத் திருமகளை நெருப்புக்கு பலிகொடுத்திருக்கிறார் என்பதைப் படத்தில் பார்க்கும்போது அவர்கள் கண்ணீர் வடித்திருப்பார்கள். பல நூற்றாண்டுகளாக உடன்கட்டை ஏற வைத்த தங்களது மரபை அழித்துவிட்டார்களே என்று ஆத்திரப்பட்டிருப்பார்கள். அந்த வகையில் பன்சாலி ராஜபுத்திரர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியது உண்மைதான். எனவே, கில்ஜியை கொடூரமாகச் சித்திரித்ததற்கு, ராஜபுத்திரர்கள் நியாயமாக பன்சாலியைப் பாராட்ட வேண்டும் என்ற மலிவான கூற்றை நாம் கையிலெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் உடன்கட்டைக்கே திரும்பச் செல்வோம்.

எப்போதோ நடைபெற்ற உடன்கட்டை தடையை இப்போது ஏன் நாம் விவாதிக்க வேண்டும் என்ற கேள்வி, ப.ரி.மூ காலத்தில் எதிராகவும், ப.ரி.பி காலத்தில் ஆதரவாகவும் மாறியவர்களுக்கு உருவாகும். (ப.ரி.மூ-பத்மாவத் ரிலீஸுக்கு முன், ப.ரி.பி - பத்மாவத் ரிலீஸுக்குப் பின்)

பத்மாவத் திரைப்படத்துக்கு ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிர்வினையாக சித்தூர் பகுதியில் கிட்டத்தட்ட 200 பெண்கள் கையில் வாளுடன் மிகப் பெரிய பேரணி நடத்தினார்கள். பேரணியின் முடிவில் ‘படத்தைத் தடை செய்யுங்கள் அல்லது நாங்கள் எங்களையே கொலை செய்துகொள்ள அனுமதியுங்கள்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ராஜபுத்திர கர்னி சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள். மேலும், படம் ரிலீஸானால் அமைப்பிலுள்ளவர்களில் 1800 பேர் ‘ஜோஹர்’ செய்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

போரில் தோல்வியுற்றால் எதிரி நாட்டினரிடம் அகப்பட்டுக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில், தீ மூட்டி பெண்கள் அனைவரும் ஒரே சமயத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்வது ‘ஜோஹர்’ எனப்படும். பத்மாவத் படத்தில் ராணி பத்மாவதிக்கு நேரும் நிலை இதுதான். ரூப் கன்வாருக்கு ஏற்பட்ட நிலையும் இதுதான். அரசாங்கம் தடை செய்திருக்கும் உடன்கட்டையும் இதுதான். புதிய விதத்தில் அரசாங்கத்தைப் பணிய வைக்க மிரட்டப்படுவதும் இதை வைத்துத்தான்.

ஒரு தனிப்பட்ட அமைப்பு சார்ந்து நடைபெறும் ஒரு போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாட்டை ஆளும் அரசினால் முடியாதா என்ற கேள்வி எழலாம். எழ வேண்டும். அப்போதுதான் ராணுவத்தை வைத்தே இவர்கள் மிரட்டியதெல்லாம் வெளிவரும். கர்னி சேனா அமைப்பின் தலைவர் மஹிபல் சிங் மக்ராணா இந்திய ராணுவத்தில் இருக்கும் ராஜபுத்திர, சீக்கிய மற்றும் ஜட் இனத்தைச் சேர்ந்த வீரர்களிடம் ‘ஒரு நாள் மட்டும் ஆயுதங்களைத் தொடாமல்’ போராட்டம் செய்யச் சொன்னார். “ஆண்டு முழுவதும் நாட்டுக்காகப் போராடுகிறீர்கள். ஒருநாள் மட்டுமாவது உங்களது தங்கை மற்றும் குழந்தைகளுக்காகப் போராடுங்கள்” என்று கோரிக்கை வைத்தார். இதுதான் சத்திரிய மரபு என்றும் விளக்கம் கொடுத்தார். இது புதிதாக நடப்பது அல்ல. ரூப் கன்வார் வழக்கு 1987ஆம் வருடம் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, “உடன்கட்டை ஏறுவதைத் தடை செய்ய அரசாங்கம் நினைத்தால், இந்திய ராணுவத்தின் 80 சதவிகித ஆயுதம் தாங்கிய படையைத் தனக்கு எதிராகத் திருப்பிக்கொள்வதாக அர்த்தம்” என அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதத்தில் சொல்லப்பட்டதை, ரூப் கன்வாருக்கு ஏற்பட்ட சம்பவத்தை ஐந்து பெண் பத்திரிகையாளர்கள் தொகுத்துள்ள Trial by Fire புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆக, உண்மையில்லாத ஒரு தகவலால் இத்தனை பெரிய கலவரத்தையும், பொது சொத்துக்குச் சேதத்தையும், மக்களுக்கு உயிர் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றனர் குறிப்பிட்ட அமைப்பினர். கர்னி சேனாவின் குர்கியான் மாநிலத் தலைவர் தாருக் குஷல்பால், பள்ளிப் பேருந்தைக் கொளுத்திய சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினால் கைது செய்யப்பட்டிருக்கிறார். குழந்தைகள் செல்லும் பேருந்து என்றும் பாராமல் நடத்தப்பட்ட இந்த வெறியாட்டத்துக்காக, 27.01.2017 அன்று தாருக் கைது செய்யப்பட்டதற்கு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பஞ்சாயத்து கூட்டிக் காவல் நிலையத்துக்கு எதிராகத் தீர்மானம் எடுத்திருக்கின்றனர்.

இந்திய நாட்டின் ஜனநாயகத்தின்படி, கருத்து சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கு வழிவிட்டிருந்தால் இத்தனை நாள்கள் நடத்திய போராட்டங்கள், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, தனி மனிதர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என எதற்குமே தேவை இருந்திருக்காது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இப்போதே, காதலர் தினத்தை எதிர்த்து நடத்தவிருக்கும் பேரணிகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், பத்மாவத் போராட்டத்தின்போது பெண்கள் பேரணி, ராணுவப் பெரும்பான்மை ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இவர்களது இந்த தைரியம் தான், இத்தனை சம்பவங்களுக்கும் மௌனம் சாதித்துவிட்டு, இப்போது ஓடி ஓடிக் கைது செய்து கொண்டிருக்கிறதோ அரசாங்கம் என்று எண்ண வைக்கிறது. இதுவே உண்மையானால் இனம், மதம், மொழி கடந்து வாழும் மனிதர்களின் எதிர்காலம் இந்தியாவில் என்ன? இதைத்தான் விரும்புகிறதா இந்த அரசு?

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 29 ஜன 2018