மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

சிறப்புத் தொடர்: தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 31

சிறப்புத் தொடர்: தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 31

ஷெரில் ஸாண்ட்பெர்க்

தகவல், தொழில்நுட்பம், இணையம் அதிவேகமாக வளர்ந்துவரும் இன்றைய மற்றும் பின்னாளில் வரக்கூடிய காலங்களுக்குத் தகுந்த துறைகளாக இம்மூன்று துறைகளும் வளர்வதை நாம் கவனித்துக்கொண்டே வருகிறோம். மாறிவரும் தொழில் துறை வளர்ச்சிகளைப் போலவே, நிர்வாகிகள், அவர்களின் திறன், அணுகும் விதம் போன்ற விஷயங்களும் முன்னேறிக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், உலகெங்கிலும் உள்ள மக்களுடைய ஒருமித்த குரலாக இயங்குவது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் நிறுவனத்தினுடைய இந்த அபார வளர்ச்சிக்கு மார்க் ஸுக்கர்பெர்க், ஒரு காரணம் என்றால், நிர்வாகச் செயல் திட்டங்களைச் சரியாக இயக்கும் ஷெரில் ஸாண்ட்பெர்க் மற்றுமொரு காரணம் என்றே சொல்லலாம். நிறுவனத்தின் உயர்ந்த பதவியை வகிக்கும் பெண் என்ற முறையில், ஷெரிலின் பங்கு ஃபேஸ்புக்கைத் தாண்டியும் விரிவடைந்துள்ளது. இந்த வாரம் இவருடைய உத்வேக பயணத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

மியாமி முதல் ஹார்வர்டு வரை

ஷெரில் காரா ஸாண்ட்பெர்க், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஆகஸ்ட் மாதம் 1969ஆம் ஆண்டில் பிறந்தார். தனது இரண்டாவது வயதில், வடக்கு மியாமி என்ற அமெரிக்காவின் தெற்கு கடலோரப் பகுதியில் பெற்றோருடன் குடியேறினார். கண் மருத்துவராகப் பணிபுரிந்த தந்தை, பிரெஞ்சு பேராசிரியராகப் பொறுப்பிலிருந்த தாயார் என்ற படிப்பறிவு, பொது அறிவு அதிகம்கொண்ட குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்த ஷெரிலுக்குப் படிப்பதில் ஆர்வம் அதிகமாக சிறு வயதிலிருந்தே இருந்தது. அதற்கேற்ப, பாடங்களில் கவனம் செலுத்தி, வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் முன்மாதிரி மாணவியாகவும், பள்ளி மாணவர்கள் தலைவியாகவும் ஷெரில் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. ஷெரிலின் பெற்றோர் தெற்கு ஃப்ளோரிடா மாகாணத்தில் சோவியத் யூதர்களுக்கான குழு ஒன்றைச் சேர்த்து அமைத்தனர். பனிப்போர் நிறைவுற்ற அந்தச் சமயத்தில், யூதர்களுக்கும் ரஷ்ய மக்களுக்கும் எதிராக பகிரப்பட்ட கருத்துகளாலும் செய்திகளாலும் பாதிக்கப்பட்ட பல யூதர்கள் அந்தக் குழுவில் இணைந்தனர். அவர்களுக்கான ஒரு பாதுகாப்பான இடமாக அந்தக் குழு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. தலைதூக்கும் பிரச்னைக்குத் தீர்வு காணும்விதமாக ஷெரிலின் பெற்றோர் செயல்பட்ட அதே பழக்கம், பின்னாளில் ஷெரிலிடம் அதிகமாகக் காணப்பட்டது.

படிப்பில் சிறந்து விளங்கியதற்குப் பரிசாக, ஷெரில் 1987ஆம் ஆண்டில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இணைந்து இளநிலை பொருளாதாரம் படித்தார். ஸ்காலர்ஷிப் மற்றும் பல உதவித்தொகைகளுடன் படிப்பை முடித்தது மட்டுமின்றி, ஆண்டு இறுதியில் சிறந்த மாணவி என்ற கெளரவத்தையும் ஷெரில் பெற்றார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்த சமயத்தில் பொருளாதாரம், அரசியல் துறைகளில் பங்கு வகித்த பெண்களுக்கான குழு (Women in Economics and Government) ஒன்றை நிறுவினார். பெண்களின் பங்களிப்பையும் உழைப்பையும் மதித்துப் பாராட்ட வேண்டும் என்று அன்று கடினமாக உழைத்த ஷெரில் எடுத்துவைத்த முதல் முயற்சியாக அவர் நிறுவிய அந்தப் பல்கலைக்கழகக் குழு பார்க்கப்படுகிறது. இதே சமயத்தில், ஷெரில் தன்னுடைய மானசீகக் குருவான லாரி சம்மர்ஸ் என்ற பேராசிரியரைச் சந்தித்தார். ஆய்வுப் பாடத்தில் சம்மர்ஸ் உதவிபுரிந்தது மட்டுமல்லாது, படிப்பை முடித்த பின் உலக வங்கியில் தான் பணிபுரிந்த சில முக்கிய திட்டங்களுக்குத் தன்னுடைய உதவியாளராக ஷெரிலை நியமித்தார். ஹார்வர்டு படிப்பு, உலக வாங்கி அனுபவம் என்று ஷெரிலின் பணி நல்லதொரு தொடக்கத்தைச் சந்தித்தது என்றே சொல்லலாம்.

அரசாங்கத் துறையும் சிலிகான் வேலியும்

உலக வங்கியில் சிறிது காலம் ஆய்வு உதவியாளராக லாரி சம்மர்ஸுடன் பணிபுரிந்த ஷெரில், 1993ஆம் ஆண்டில் மீண்டும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்தார். படிப்பை முடித்த பின், மீண்டும் லாரி சம்மர்ஸுடன் சேர்ந்து பணிபுரிந்தார். கிளிண்டன் தலைமையில் இருந்த அன்றைய அரசில் பொருளாளராகப் பொறுப்பு வகித்த லாரி சம்மர்ஸின் அலுவலகத்தில் முதன்மை அலுவலகராகப் பொறுப்பு வகித்தார் ஷெரில். ஓர் அரசாங்கத்தின் நடப்பு, அதற்குத் தேவையான வருமானம், நாட்டின் பொருளாதாரம் போன்ற அத்தியாவசிய அனுபவங்களையும் அறிவையும் ஷெரில் இந்தப் பணியின் மூலம் சம்பாதித்துக்கொண்டார். சரியான அனுபவங்களைத் தரக்கூடிய பணியாக இருந்தாலும், 2000ஆம் ஆண்டில் கிளிண்டன் அரசு வீழ்ந்தமையால், ஷெரில் அடுத்து அடியெடுத்து வைத்தது டெக் நகரமான சிலிகான் வேலியில்.

2000 – 2001ஆம் ஆண்டில் ஸ்டார்ட்அப் அந்தஸ்து கொண்ட கூகுள் நிறுவனத்தில் தலைமைத் தொழில் ஆணையராகப் பொறுப்பேற்றார் ஷெரில். ஏழு ஆண்டுகள் கூகுளில் பணியாற்றிய சமயத்தில், பல்வேறு வளர்ச்சிகளை கூகுள் அடைந்தது. சிறந்த தொழில் துறைத் திட்டங்கள், பொருளை உபயோகிக்கும் வாடிக்கையாளருடைய கண்ணோட்டத்திலிருந்து யுக்திகளைக் கையாளுவது போன்ற ஷெரிலின் தனித்திறமை கூகுளின் உயர்வுக்கு முக்கியக் காரணமாக விளங்கியது என்றே சொல்லலாம். உலகளாவிய தொழில் திட்டங்களின் இணைத் தலைவர் என்ற உயர்ந்த பொறுப்பை வகித்தபோது, ஷெரில் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கத் திட்டமிட்டார். 2009 – 2010ஆம் ஆண்டில் சிறிதாக முளைவிட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தில் சிஓஓ (COO) என்ற பதவியில் அமர்ந்தார். வளர வேண்டிய நிறுவனத்துக்குச் சரியான திட்டமிடல் மற்றும் கொண்டுசெல்லும் வல்லமை பெற்றிருந்த ஷெரிலுக்கு ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிய மிகவும் செளகரியமாகவும் ஆர்வமாகவும் இருந்தது. உலகப் பொருளாதாரத்திலும், வாடிக்கையாளருக்குத் தேவையான சேவையை அளிப்பதிலும் இன்று ஃபேஸ்புக் முதலிடத்தைப் பெற்றிருப்பதில் ஷெரிலுக்கும் பங்குண்டு. இருப்பினும், ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய சமயத்தில், சில முக்கிய, வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டிய விஷயங்களை ஷெரில் கவனிக்கத் தொடங்கினார்.

பெண்களுக்கான முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு

வேலைக்குச் செல்லும் பெண்கள் அவர்கள் சந்திக்கும் அலுவலகம் சம்பந்தப்பட்ட சிக்கலைத் தாண்டி தங்களுக்கான அங்கீகாரத்தைப் பதித்துக்கொள்ள வேண்டிய முயற்சிகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஷெரில் செயல்பட்டார். பல்வேறு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் பெண்கள் இல்லாதது, அந்தந்த நிறுவனங்களில் பெண் பணியாளர்கள் செலுத்தும் உழைப்பைக் கண்டுகொள்ளாது இருக்கும் மனப்பக்குவத்தை மாற்றும் முயற்சியில் ஷெரில் இறங்கினார். “மாற்றத்துக்கான இந்தத் தேவை இப்போது அதிகரித்துள்ளது. இந்தத் தேவையை என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்துதான் நான் தெரிந்துகொண்டேன். தெரிந்துகொண்டதை மற்றவர்களுக்கு உரக்கச் சொல்லுவதையே சரியான செயலாக நான் பார்க்கிறேன்” என்று தனது கருத்தை டேட் டாக் என்கிற மேடையில் உரைத்தார் ஷெரில். இதே மேடையில் அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுடைய அன்றாடச் சிக்கல்களையும் வாழ்க்கை சார்ந்த பிரச்னைகளையும் பற்றி சில புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். இந்த டேட் டாக் மேடையே, இவருடைய இந்தச் செயல்பாட்டுக்கு முதல்படியாக விளங்கியது.

“ஃபேஸ்புக்கில் பணியாற்றிய சமயத்தில், செயல்பாடு மற்றும் திட்டமிடல் துறையில் மட்டுமல்லாது அக்கவுன்டன்ட்ஸ் மற்றும் தொகை ஈட்டும் கூடுதல் பொறுப்பையும் வகித்தேன். ஒரு நிறுவனத்தில் சென்று திட்டங்களை விளக்கிய பின், ஐந்து நிமிட இடைவேளை இருந்தது. பெண்களுக்கான கழிப்பிடம் எங்கே என்று கேட்டதற்குப் பலர் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தனர். அதிகளவில் வருவாயும் லாபமும் ஈட்டிய அந்த நிறுவனத்தில் வேலைசெய்யும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தமையால், பெண்களுக்கான கழிப்பிடம்கூட இல்லாமல் இருந்தது. ஆண் பெண் இருவருக்கும் சம அளவில் தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டிய கட்டாயம் மற்றும் தேவை இப்போது அதிகளவில் இருக்கிறது” என்று தன்னுடைய அனுபவம் கலந்த கருத்தை ‘லீன் இன்'’ (Lean In) என்ற புத்தகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இவருடைய முதல் புத்தகமான இந்தப் புத்தகத்தில், அலுவலகத்தில் பெண்கள், தங்களுடைய பதவியையும், அதற்கான சரியான உழைப்பையும் எப்படி செயல்படுத்த வேண்டும், அன்றாட வாழ்க்கையில் பணிக்கும் வீட்டுக்குமிடையே எவ்வாறு ஒரு சம நிலையை ஏற்படுத்துவது போன்ற பல நுண்ணிய விஷயங்களைப் பற்றிய சரியான அறிவுரைகளும் கூறியுள்ளார். இந்தக் குறிப்பிட்ட காரணத்துக்காகவே லீனின் புத்தகம் மிகவும் பிரசித்தம்.

பெண்கள் முன்னேற்றம் பற்றி புத்தகம் எழுதுவது, மேடையில் பேசுவது என்ற செயலில் மட்டும் இல்லாது, சில நடைமுறைகளையும் அதற்காக ஏற்படுத்தியுள்ளார் ஷெரில். Bossy என்று சில தலையாய பண்புகள் கொண்ட பெண்களைச் சக ஊழியர்கள் அழைப்பது அலுவலகப் பழக்கமாக உலகெங்கும் இருந்துவருகிறது. ஆனால், உண்மையில் இந்த வார்த்தையைக் கொண்டு அவர்களைக் குறிப்பிடுவது, அவர்களுடைய அடிப்படை குணத்தையும், பண்பையும் முற்றிலுமாக மறைத்து அவர்களுடைய அலுவலகப் பணியில் இடையூறுகளைச் சப்தமில்லாமல் செய்துவருகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பழக்கத்தை நிறுத்தும் முயற்சியாக, பாப் பாடகி பியான்ஸே போன்ற பிரபல நபர்களைக்கொண்டு ஒரு விழிப்புணர்வுத் திட்டத்தைச் செயல்படுத்தினார். அது மட்டுமல்லாது, பொதுவான புகைப்படங்களைக் கொண்டுள்ள கெட்டி இமேஜஸ் (Getty Images) என்ற நிறுவனத்துடன் இணைந்து, அலுவலகத்தில் பணிபுரியும் வயதான பெண்கள், வீட்டிலிருந்தே வேலைசெய்யும் பெண்கள் போன்ற தலைப்புகளில் புது புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார். வேலை செய்யும் பெண் என்று இருந்த பொதுவான கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் கச்சிதமான முயற்சியாக இந்தப் புகைப்படங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தனது கணவரின் இறப்பைத் தாண்டி, அடுத்த கட்ட செயலில் ஈடுபட முடியாத சோகத்தில் ஷெரில் தள்ளப்பட்டார். அப்போது அவர் சொந்த வாழ்க்கையிலும், அலுவலக வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாத துக்கத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவுகளாக வெளியிட்டதன் மூலம், உலகெங்கிலுமிருந்து பலர் ஷெரிலுக்கு பக்கபலமாக இருக்கும் விதத்தில் கமெண்ட் செய்தனர். இந்த துக்கம் மற்றும் அதிலிருந்து மீண்டு வருவது பற்றிய புத்தகமாக ‘ஆப்ஷன் பி’ (Option B) என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார். இவருடைய அபார திறமை, பெண்களுடைய சிக்கல் மற்றும் முன்னேற்றத்துக்கு குரல் கொடுத்து, தகுந்த செயல்களைச் செய்வது போன்ற பல விஷயங்களுக்காகவே கடந்த எட்டாண்டுகளாகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் மற்றும் டைம்ஸ் இதழ்களில் சிறந்த 100 பெண்கள் என்ற பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.

பெண்கள் வேலைக்குச் சென்று, குடும்பத்தில் சரிசமமாக ஈடுபடும் காலம் இது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான நிலையை தக்கவைத்துக்கொள்ள தெரியாமல், சமுதாயச் சூழலில் சிக்கியுள்ளார்கள். ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து வேலை செய்தாலும், இடையே கண்ணுக்குத் தெரியாத சுவர் எல்லா அலுவலகத்திலும் உள்ளது. பலரும் பேசாத இந்தச் சுவரைப் பற்றி பேசியது மட்டுமல்லாது, அதை உடைத்தெறிய உந்துதலாக, வளரும் பெண் தலைமுறையினருக்குச் சிறந்த ஆலோசனைகளைத் தெரிவிப்பதிலும் ஷெரிலுக்குப் பங்கும் பொறுப்பும் அதிகம். அந்தப் பொறுப்பை தாமாகவே எடுத்துக்கொண்டு சிறப்புறச் செய்வதில்தான், ஷெரில் ஸாண்ட்பெர்க் அனைவருக்கும் நல்லதோர் உதாரணமாக விளங்குகிறார்.

கட்டுரையாளர்: நித்யா ராமதாஸ்

இவர் குமுதம் சிநேகிதி மாதமிருமுறை இதழில் முழு நேர நிருபராகப் பணியாற்றியவர். புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழில் பயிற்சி நிருபராக இருந்தவர். லைஃப் ஸ்டைல், ஃபேஷன், கலை மற்றும் மியூசிக் சார்ந்த கட்டுரைகளை எழுதிவதில் தேர்ந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 29 ஜன 2018