ஹெல்த் ஹேமா: பூப்பூவாய் பூத்திருக்கு...

பொதுவாகக் காய்களையும் கனிகளையும் உட்கொள்ளும் நாம், காய்கனி உருவாவதற்குக் காரணமான பூக்களை உணவில் சேர்த்துக்கொள்வதில்லை.
அப்படி நாம் ஒதுக்கிவிட்ட பூக்களுக்கு உள்ள மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்; பயனடைவோம்.
முருங்கைப்பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும். உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும். அதிகமான பித்தத்தைப் போக்கும்.
வாழைப்பூ கை கால் எரிச்சல், இருமல், வயிற்றுக் கடுப்பு, வெள்ளை ஒழுக்குப் போன்ற பிரச்னைகளை நிவர்த்தி செய்யும்.
மாதுளம்பூ பித்த வாந்தியை நிறுத்தும் தன்மை கொண்டது. வயிற்றுக்கடுப்பு, ரத்த மூலம், உஷ்ணம் ஆகியவற்றைச் சீர் செய்யும். இது தவிர, மாதுளம் பழத்தோல் சீதபேதி, வாய்ப்புண், ரத்த பேதி போன்றவற்றுக்கு மருந்தாகும்.
அகத்திப்பூ வெயில் காரணமாக ஏற்படும் பித்தத்தை அகற்றும். உடல் அழற்சியை விலக்கும்.
வேப்பம்பூ நீடித்த ஏப்பம், வாந்தி, குடற்பூச்சிகள் ஆகியவற்றை அகற்றும்.
புளியம்பூவைச் சமையலுக்குப் பயன்படுத்தினால் பித்தம் அகலும். நாவின் சுவையின்மை நீங்கும்.
வெங்காயப்பூ குன்ம நோய்களைப் போக்கும். குடல் தொடர்பான பல பிணிகளை நீக்கும்.