இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் ஆந்திரா!


ஆந்திராவில் அடுத்த ஆறு முதல் எட்டு வருடங்களுக்கு ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் (இசட்.பி.என்.எஃப்) திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக ஆந்திர அரசு (ஜனவரி 26) தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ஆந்திரப் பிரதேச அரசு இசட்.பி.என்.எஃப் திட்டத்தின் கீழ் 60 லட்சம் விவசாய நிலங்களை இணைக்க இலக்கு வைத்துள்ளது. லட்சக்கணக்கான கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, இயற்கை வேளாண் சங்கிலியை அதிகரிப்பது, இயற்கை வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, விநியோகம் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் இயற்கை வேளாண் பொருள்கள் விற்பனையை அதிகரிப்பது எனப் பல இலக்குகளை இத்திட்டத்தின் மூலம் ஆந்திர அரசு கொண்டுள்ளது” என்றார்.
நிலையான இந்தியாவுக்கான நிதி வசதி (எஸ்.ஐ.எஃப்.எஃப்) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டு முயற்சி, உலக வேளாண் மையம், பி.என்.பி. பாரிபாஸ் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படவுள்ளதாக ஆந்திர அரசு கூறியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரையில் 13 மாவட்டங்களில் உள்ள 1,38,000 விவசாயிகளுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் இதுவரையில் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்தை ஆந்திர அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.