வரதட்சணை : தபால் மூலம் முத்தலாக்!


வரதட்சணை கொடுமையால் பிரிந்து சென்ற மனைவிக்குத் தபால் மூலம் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தானேயில் உள்ள சாந்திநகர் காவல் நிலையத்தில் 20 வயது பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “தனக்குக் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. . திருமணம் முடிந்த சில நாட்களிலேயே என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை வரதட்சணை கேட்டு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர். அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் நான் என் கணவர் வீட்டிலிருந்து வெளியேறி, தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறேன்.
இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திய எனது கணவர் 100 ரூபாய் முத்திரைத்தாள் மூலம் எனக்கு முத்தலாக் கூறி விவகாரத்து வழங்குவதாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.
எனவே வரதட்சணை கேட்டும் முத்தலாக் சொல்லியும் கொடுமைப்படுத்திய என் கணவர், குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் எஸ்.எம்.எஸ்.-சிலும், வாட்ஸப்பிலும், ஃபேஸ்புக்கிலும் தங்கள் கணவர்களால் முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யப்படுவதால் முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் முத்தலாக் முறைக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பாராளுமன்ற மக்களவையில் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில் முத்தலாக் மூலம் விவாகரத்து சொல்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.