மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சரத்பாபு (ஃபுட் கிங்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சரத்பாபு (ஃபுட் கிங்)

லட்சக்கணக்கில் ஊதியம் கிடைக்கும் பணிகள் கிடைத்தும் சுயமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு சாதித்துக் காட்டிய பட்டதாரி இளைஞர் சரத்பாபு குறித்த சக்சஸ் ஸ்டோரியை இந்த வாரம் காண்போம்.

அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) பட்டம் படித்து முடித்துள்ள இளைஞர் சரத்பாபு. படித்து முடித்தவுடன் நல்ல ஊதியத்தில் சில வேலைகள் கிடைத்தாலும் சொந்தத் தொழில்தான் செய்வேன் என்ற முனைப்பில் கிடைத்த வேலைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அதன்பிறகு ஃபுட் கிங் என்ற உணவு சேவை நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமான தொழில்முனைவோராகச் செயல்பட்டு வருகிறார்.

இவர் சென்னைக்கு அருகிலுள்ள மடிப்பாக்கத்தில் 1979ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் நாள் பிறந்தார். இவருக்கு இரண்டு தங்கைகளும், இரண்டு அண்ணன்களும் உள்ளனர். தாயின் கடுமையான உழைப்பு ஐந்து பேருக்கும் உணவளித்தது. இவருடைய தாய் தினசரி காலையில் இட்லி கடை நடத்தி வந்தார். அதேசமயம் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திலும், அரசின் முதியோர் கல்வித் திட்டத்திலும் பணியாற்றி வந்தார். “தாயின் அர்ப்பணிப்புதான் எங்கள் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமென்று சரத்பாபு” ஒருமுறை ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இவர் சென்னையிலுள்ள மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியும், பி.ஐ.டி.எஸ்ஸில் வேதியியல் துறையில் பொறியியல் பட்டமும் பெற்றார். பிறகு அகமதாபாத் ஐ.ஐ.எம் கல்லூரியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். கல்லூரி முடித்த பிறகு மூன்றாண்டுகள் போலாரிஸ் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். அதே நேரத்தில் சி.ஏ.டி. தேர்வுக்கும் தயாராகி வந்தார். ஒருமுறை சி.ஏ.டி. தேர்வு எழுதியிருந்த போதிலும், அந்த நேரத்தில் வினாத்தாள் வெளியாகியிருந்ததாகச் சர்ச்சையை உருவாகியிருந்தது.

இதையடுத்து தனது கனவின்படி 2006ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி ஃபுட் கிங் நிறுவனத்தைத் தொடங்கினார். படிப்பறிவற்ற மற்றும் அரைகுறை படிப்பறிவுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தின் அடிப்படையில் ஃபுட் கிங் நிறுவனத்தை தொடங்கினார். தொடக்கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆர்டர் பிடித்து அந்நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. படிக்கும் காலங்களில் தாயின் இட்லி கடையில் உதவிய அனுபவங்கள் இங்கு அவருக்குப் பெரிதும் உதவியது.

நியாயமான விலையில், சுவையான மற்றும் தரமான உணவு வகைகளை சரத்பாபுவின் ஃபுட் கிங் நிறுவனம் வழங்கியது. இதனால் ஆர்டர்கள் அதிகரித்தது. வர்த்தகமும் குறுகிய காலத்தில் பெருகியது. இன்று பி.ஐ.டி.எஸ், பிலானி, ஐ.ஐ.எம். அகமதாபாத்., பி.ஐ.டி.எஸ். கோவா, பி.ஐ.டி.எஸ். ஹைதராபாத், எஸ்.ஆர்.எம். சென்னை மற்றும் பல கல்லூரிகளுக்கு உணவுச் சேவைகளை ஃபுட் கிங் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் விற்றுமுதல் தற்போது பல கோடிகளை எட்டியுள்ளது.

சரத்பாபுவைப் பொறுத்தவரையில் உண்பவர்களின் திருப்தியே முக்கியம் எனக் கருதி செயல்படுபவர். தொடக்கத்தில் வெறும் 2000 ரூபாய் முதலீட்டில் ஃபுட் கிங் நிறுவனத்தின் பயணம் தொடங்கியது. இன்று பலகோடி வருவாயில் வீறு நடைபோடுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இவருடைய தொழில் விரிவடைந்துள்ளது. இந்தியா முழுவதும் 500 கிளைகளைத் திறக்க வேண்டும் என்பதும், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதும் இவருடைய முக்கிய இலக்காகும்.

தொழில்முனைவோராகச் சாதித்துக் காட்டியுள்ள சரத்பிரபுவுக்கு அரசியல் ஆர்வமும் உண்டு. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிருந்த இவர் 15,000 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதன்பிறகு தேமுதிகவில் இணைந்து சிறிது காலம் செயல்பட்ட இவர் பின்பு அக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட இவர் 7,472 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். அதே ஆண்டில் சென்னை மேயர் பதவிக்கும் போட்டியிட்டிருந்தார். ஆனாலும் தொழிலில் கண்ட வளர்ச்சியைப் போல அரசியலில் இவரால் பெரும் வளர்ச்சியை அடைய இயலவில்லை.

தொழிற்துறையில் இவர் கண்ட வளர்ச்சிகளால் பெப்சி-எம்டிவி இணைந்து 2008ஆம் ஆண்டு வழங்கிய யூத் ஐகான் (இளைஞர்களின் அடையாளம்) விருதையும், 2010ஆம் ஆண்டில் ஆர்.ஐ.டி.எஸ். வழங்கிய சென்னையின் இளைஞர்களுக்கான அடையாளம் என்ற விருதையும், அதுமட்டுமின்றி சி.என்.என்-ஐ.பி.என். 2011ஆம் ஆண்டு வழங்கிய இந்தியாவின் இளைய தலைவர் விருதையும் பெற்றார். சில விருதுகளும் இவரைக் கவுரவித்து வழங்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் பசி இல்லாத இந்தியா என்ற அமைப்பையும் தொடங்கினார். அக்டோபர் 10ஆம் நாளைப் பசி ஒழிப்பு நாளாகவும் அறிவித்துச் செயல்பட்டு வருகிறார். 2015ஆம் ஆண்டில் ரம்யா கிருஷ்ணராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இளம் வயதில் தொழில்முனைவோராக மட்டுமின்றி அரசியல், சமூகம் எனப் பன்முகம் கொண்ட மனிதராகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் சரத்பிரபு.

பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

சென்ற வார சண்டே சக்சஸ் ஸ்டோரி: லாவண்யா (நல்லி சில்க்ஸ்)

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

ஞாயிறு 28 ஜன 2018