அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்!


சென்னை அண்ணா அறிவாலயத்தில், இன்று (ஜனவரி 28) காலை அவசரமாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்குத் தலைமை வகித்தார்.
தமிழக அரசு, ஜனவரி 19ஆம் தேதியன்று அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவித்தது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் பொதுமக்களும் மாணவர்களும் ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று (ஜனவரி 27) மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழகத்தில் பழைய பேருந்து கட்டண உயர்வு குறித்து விவாதிப்பதற்காக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமார், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வீரபாண்டியன், சவுந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில், பழைய பேருந்து கட்டணத்தையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கட்சித்தலைவர்கள் விவாதித்தனர். பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அது முழுமையானதாக இல்லை என்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, பேருந்து கட்டணத்தை முழுவதுமாகத் திரும்பப் பெறாவிடில் தமிழகமெங்கும் சிறை நிரப்பும் போராட்டத்தை முன்னெடுப்பதாக, இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.