மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

சண்டே ஸ்பெஷல்: பெண்கள் விரும்பும் கிறிஸ்டல் நகைகள்!

சண்டே ஸ்பெஷல்: பெண்கள் விரும்பும் கிறிஸ்டல் நகைகள்!

மணிக் கொடி

எடை குறைவான பேஷன் நகைகளை அணிவதற்குத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவர்களுக்கு கிறிஸ்டல் ஆபரணங்கள் பொருத்தமான தேர்வாக இருக்கும். அணியும் ஆடை ரகங்களுக்கு ஏற்ப அணிகலங்களை அணிந்து அழகுபார்ப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்கள் பெண்கள். அவர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும்வண்ணம் பேஷன் நகைகள் விதவிதமான அலங்கார வேலைப்பாடுகளுடன் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. கிறிஸ்டல் நகைகள் விலை குறைவு. அதேவேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாகக் காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கிறிஸ்டல் நகைகளை அணியவே விரும்புகின்றனர். பெண்கள் வீட்டில் இருந்தபடிச் செய்ய ஏற்ற தொழில் கிறிஸ்டல் நகை தயாரிப்பு. இதில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.

உற்பத்திச் செலவு (ஒரு நாளைக்கு)

ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு கிறிஸ்டல் நகை 50 தயாரிக்கலாம். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 தயாரிக்க முடியும். சிறிய அளவு நகைக்கு ரூ.90 முதல் ரூ.110 வரை செலவாகும். நடுத்த அளவுக்கு ரூ.150 முதல் ரூ.160 வரையும், பெரிய அளவுக்கு ரூ.200ம் செலவாகும். சிறிய அளவிலான 50 கிறிஸ்டல் நகைகள் தயாரிக்க உற்பத்திச் செலவு ரூ.5,500. நடுத்தர அளவு 15 நகை தயாரிக்க ரூ.2,600, பெரிய அளவு 20 நகை தயாரிக்க ரூ.4,000 தேவைப்படும். அனைத்து வகைகளையும் கலந்து தயாரிக்க சராசரியாக ரூ.5 ஆயிரம் போதும்.

வருவாய் (ஒரு நாளைக்கு):

ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கிறிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன் மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500. இதில் லாபம் ரூ.1,500. இதை உழைப்புக் கூலியாகவும் எடுத்துக்கொள்ளலாம். கூட்டாகச் சேர்ந்து தயாரித்தால் லாபம் இரு மடங்காக அதிகரிக்கும். ஒரு நாள் தயாரித்ததை விற்ற பின், அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அடுத்த உற்பத்தியைத் தொடங்கலாம். இது வீட்டில் இருந்தவாறு தொழில் செய்பவர்களுக்குப் பொருந்தும். விற்பனை அளவுக்கேற்ப உற்பத்தியை அதிகரித்தால் வருவாய் கூடும்.

சந்தை வாய்ப்பு:

சேலை மட்டுமல்லாமல் சுடிதார், சல்வார் உள்ளிட்ட நவீன ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிறிஸ்டல் நகைகள் தயாரிக்கலாம். இவற்றை இளம்பெண்கள் விரும்பி வாங்குவார்கள். குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300க்குள் கிடைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பொலிவு குன்றாமல் காட்சியளிக்கும். கலைநயத்தோடு இருப்பதால் வயதானவர்களும் விரும்பி வாங்குவார்கள். தோழிகளுக்குப் பரிசளிக்கவும் பெண்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர். கிறிஸ்டல் செயின் மட்டுமல்லாமல், கிறிஸ்டல் தோடு, கிறிஸ்டல் கொலுசு ஆகியவற்றையும் எளிதில் தயாரிக்கலாம். தனிப்பட்ட முறையில் விற்பது மட்டுமல்லாமல் பேன்சி ஸ்டோர்கள், கவரிங் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.

தயாரிப்பது எப்படி?

கிறிஸ்டல் நகை தயாரிப்பு என்பது தங்க, வெள்ளி நகைகளைப் போல் உருக்கி, தட்டி செய்வதல்ல. ரெடிமேடாக உள்ள பல வண்ண கிறிஸ்டல் மற்றும் இணைப்புப் பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கோர்ப்பதுதான். சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள் அணிவதற்கேற்ப குறைந்த நீளம் (ஒரு அடி), நடுத்தர நீளம் (ஒன்றரை அடி), அதிக நீளம் (2 அடி) ஆகிய அளவுகளில் கிறிஸ்டல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கிறிஸ்டல் வயர் கம்பியை கட்டரைக் கொண்டு தேவையான அளவுகளில் வெட்டிக்கொள்ள வேண்டும். 2 பேர் கூட்டாகச் செய்தால், முதலில் டாலரைக் கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிறிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும். அதே பாணியில் தொடர்ந்து கோர்த்துவர வேண்டும். இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கைக் கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சுப் போட வேண்டும். இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிறிஸ்டல் நகை ரெடி.

தேவையான பொருட்கள்

இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிறிஸ்டல் சிறியது முதல் பெரியது வரையில் 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ஆகிய எண்களில் கிடைக்கும். எண் 2 கிறிஸ்டல் 90 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.65. எண் 4 ரூ.75, எண் 6 ரூ.95, எண் 8 முதல் 18 வரை ரூ.100. சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.52, கோல்டு பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.19. கியர் வயர், கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். 100 மீட்டர் கொண்ட ஒரு ரோல் ரூ.65. கியர் லாக் 100 எண்ணிக்கையுள்ள ஒரு பாக்கெட் ரூ.52. ஊக்கு ஒரு செட் ரூ.7, காந்த ஊக்கு ஒன்று ரூ.10, ஸ்க்ரூ செட் ரூ.7 முதல் ரூ.10. கட்டர், பிளேயர் ஆகியவை தலா ரூ.100. நகரங்களில் உள்ள பேன்சி ஸ்டோர்களில் இந்தப் பொருட்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சம்பாதிப்பதோடு நமக்குத் தேவையான நகைகளையும் நாமே வடிவமைத்துக்கொள்ளலாம்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018