மீண்டும் இளையராஜா - வைரமுத்து கூட்டணி?


இளையராஜா - வைரமுத்து கூட்டணியை இணைக்கும் முயற்சியில் இயக்குநர் சீனு ராமசாமி இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று மூலம் கதாநாயகனான விஜய் சேதுபதி, அதைத் தொடர்ந்து தர்ம துரை திரைப்படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணியில் மாமனிதன் என்ற பெயரில் படம் உருவாக இருக்கிறது. இதில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவருடனும் இணைந்து இளையராஜா இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் மூலம் 31 ஆண்டுகளாகப் பிரிந்திருக்கும் இளையராஜா, வைரமுத்து கூட்டணியை இணைக்கும் முயற்சியில் இயக்குநர் சீனு ராமசாமி இறங்கியுள்ளார்.
இதுகுறித்து சீனு ராமசாமி தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “மாமனிதன் படத்தின் வேலைகளை ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். இந்தப் படம் மனிதவாழ்வின் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தும் படமாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறார். அதோடு அப்பா, மகன்கள் என மூவரும் இணைந்து இசையமைக்கிறார்கள். நான் பெரிதும் மதிக்கும் மும்மூர்த்திகள் இந்தப் படத்தில் இணைவது ஆச்சர்ய பரிசாகவே இருந்தது. இந்த ஆண்டில் மூன்று திரைக்கதை புத்தகங்களை முடித்து படமாக்கத் திட்டமிட்டிருந்தேன். இந்த இரு படங்களை அடுத்து மூன்றாவதாக இந்த ஆண்டின் இறுதியில் ஒரு படத்தை இயக்கவும் வாய்ப்பு உள்ளது. அதில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார் .