பருத்தி வர்த்தகம் உயர்வு!

அகமதாபாத் சந்தையில் பருத்தியின் அதிக வரத்து மற்றும் நிலையான விலை போன்றவற்றால் பருத்தி விற்பனை அதிகரித்துள்ளதாக இந்தியப் பருத்தி கழக (சி.சி.ஐ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதிப்பிடப்பட்டிருந்த பருத்தியில் 345 லட்சம் பேல்கள் பருத்தி ஏற்கனவே சந்தைக்கு வந்துள்ளது. பருத்தி வரத்து அதிகரிப்பு மற்றும் விலை காரணமாக சி.சி.ஐ மற்றும் லூயிஸ் ட்ரேஃபஸ் மற்றும் கிளென்கோர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாக வாங்குகின்றன. சி.சி.ஐ இதுவரை கிலோ ஒன்றுக்கு ரூ.170 என 6.2 லட்சம் அளவிலான பேல்களை வாங்கி உள்ளது. இதில் 3.67 லட்சம் அளவிலான பேல்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,270 எனவும், மீதம் உள்ள 2.53 லட்சம் அளவிலான பேல்கள் சி.சி.ஐயின் வர்த்தக விலையிலும் வாங்கப்பட்டுள்ளது.
“பருத்தி வரத்து தொடங்கிய முதல் இரண்டு மாதங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் பருத்தி வர்த்தகத்தை சி.சி.ஐ மேற்கொண்டிருந்தாலும், சந்தைக்குப் பருத்தி வரத்து அதிகரிக்கத் தொடங்கிய பின்னர் பருத்தியின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4000 ஆகச் சரிந்தது. அதேசமயத்தில் இதுவரையில் 22 லட்சம் பேல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 165 லட்சம் பேல்கள் பருத்தி சந்தைக்கு வந்துள்ளது” என்றார் அகமதாபாத்தைச் சேர்ந்த பருத்தி வர்த்தகர் அருண் தலால்.