மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

ஐ.பி.எல்: எதிர்பாராத ஏலம்!

ஐ.பி.எல்: எதிர்பாராத ஏலம்!

ஐ.பி.எல் தொடரின் 11ஆவது சீசனுக்கான வீரர்கள் தேர்வு நேற்று (ஜனவரி 27) பெங்களூருவில் நடைபெற்றது. முதல் நாளில் மட்டும் 110 வீரர்கள் ஏலம் விடப்பட்டு அதில் 78 வீரர்கள் மட்டும் அணிகளால் பெறப்பட்டுள்ளனர். ஏலம் பெறப்படாத 32 வீரர்களில் முன்னணி வீரர்கள் சிலரும் உள்ளனர் என்பதுதான் ரசிகர்கள் மனதில் கேள்வியை எழுப்பியுள்ளது.

ஐ.பி.எல் தொடர் கடந்த 10 வருடங்களாக ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்று வந்துள்ளது. இந்த வருடம் (2018) ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கும் ஐ.பி.எல் தொடருக்காக இரண்டு நாள்கள் (ஜனவரி 27, 28) வீரர்கள் ஏலம் விடப்படுகிறது. அதில் முதல் நாளான நேற்று முன்னணி வீரர்கள் பலர் ஏலம் பெறப்படாமல் போனது குறித்தும், எதிர்பாராத வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்தும் இதற்கு முன்னரே மின்னம்பலத்தில் பதிவிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக சர்வதேச அணியில் பங்கேற்காத அன்கேப்டு (uncapped) வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்தும், முதல் நாள் ஏலத்தின் முடிவில் அணிகளின் நிலை குறித்தும் இங்கு காண்போம்.

நேற்றைய ஏலத்தில் மொத்தமாக 78 வீரர்கள் ரூ.321.1 கோடிக்கு அனைத்து அணிகளாலும் ஏலம் பெறப்பட்டனர். அதில் 16 வீரர்கள் (RTM) ரைட் டூ மேட்ச் கார்டு மூலம் முன்பிருந்த அணிகளால் மீண்டும் பெறப்பட்டனர். அதில் குறிப்பாக பஞ்சாப் அணி ஏலம் பெற்ற முக்கியமான ஐந்து வீரர்கள் அந்தந்த அணிகளுக்கு RTM மூலம் திரும்பப் பெறப்பட்டனர். நேற்றைய ஏலத்தில் கொல்கத்தா அணி ரூ.51.40 கோடியை மொத்தமாகச் செலவிட்டதுதான் அதிகமான தொகையாகும், அதேபோல் சென்னை அணி ரூ.30 கோடி மட்டும் பயன்படுத்தியதே குறைவான தொகையாகும். முதல் நாளில் ஆல்ரவுண்டர் பேன் ஸ்ட்ரோக்ஸ் ரூ.12.50 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் பெறப்பட்டுள்ளார். இதுவே ஒரு வீரரின் அதிக தொகையாகும். நேற்றைய ஏலத்தில் அதிகபட்சமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 வீரர்களையும், குறைந்தபட்சமாக மும்பை இந்தியன்ஸ் ஆறு வீரர்களையும் ஏலம் எடுத்துள்ளன.

இந்திய வீரர்களும் இளம் வீரர்களும்

நேற்றைய போட்டியில் வெளிநாட்டு வீரர்களைக் காட்டிலும் இந்திய வீரர்கள் மீதான போட்டி அனைத்து அணிகளிடமும் அதிகம் காணப்பட்டது. அதனால் லோகேஷ் ராகுல் (ரூ.11 கோடி), மனீஸ் பாண்டே (ரூ.11 கோடி), கேதார் ஜாதவ் (ரூ.7.8 கோடி), தினேஷ் கார்த்திக் (ரூ.7.4 கோடி), சஞ்சு சாம்சன் (ரூ.8 கோடி), ராபின் உத்தப்பா (ரூ.6.4 கோடி) மற்றும் சாஹல் (ரூ.6 கோடி) என அதிக விலைக்கு இந்திய வீரர்கள் ஏலம் பெறப்பட்டனர். அதுமட்டுமின்றி தற்போது நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடிவரும் இந்திய வீரர்கள் இந்த ஏலத்தில் பெறப்பட்டது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றுதான். அதிலும் இந்திய ஜூனியர் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழ்ந்துவரும் சுப்மன் கில் கொல்கத்தா அணியால் ரூ.1.8 கோடிக்கும், தொடக்க வீரரும் இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா டெல்லி அணியால் ரூ.1.2 கோடிக்கும், வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நகர்கொடி கொல்கத்தா அணியால் ரூ.3.2 கோடிக்கும் ஏலம் பெறப்பட்டனர்.

சுப்மன் கில் - ப்ரித்வி ஷா

எதிர்பார்த்த தொகைக்கு மேல் ஏலம் பெறப்பட்ட வீரர்கள்

இவர்கள் மட்டுமின்றி மயங்க் அகர்வால் (ரூ.1 கோடி) பஞ்சாப் அணியாலும், சூர்யகுமார் யாதவ் (ரூ.3.2 கோடி) மும்பை அணியாலும், ராகுல் திருப்பதி (ரூ.3.4 கோடி) ராஜஸ்தான் அணியாலும் ஏலம் பெறப்பட்டனர். தீபக் ஹூடாவை (ரூ.3.6 கோடி) ஹைதராபாத் அணி RTM மூலம் தக்கவைத்துக் கொண்டது. இந்தமுறை யாரும் எதிர்பார்க்காத தொகைக்கு குர்னல் பாண்டியா ஏலம் பெறப்பட்டார். பெரும்பாலான அணிகள் அவரைப் பெற ஆர்வம்காட்டியதால் அவரின் ஆரம்ப தொகையைவிட 22 மடங்கு அதிகமாக ஏலம் பெறப்பட்டார். ரூ.8.8 கோடிக்கு அவரை பெங்களூரு அணி ஏலம் பெற்ற பின்னர் மும்பை அணி RTM பயன்படுத்தி மீண்டும் தங்களின் அணியுடன் இணைத்துக்கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள ஐ.பி.எல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் பெறப்பட்ட அன்கேப்டு வீரர் இவர் ஆவார். இவருக்கு முன்னர் கடந்த கடந்த 2016ஆம் ஆண்டு பவன் நெகியை ரூ.8.5 கோடிக்கு டெல்லி அணி ஏலம் பெற்றதே அதிகமான தொகையாக இருந்து வந்தது. ஆனால், இந்த முறை அதைவிட அதிக தொகைக்கு இவர் ஏலம் பெறப்பட்டுள்ளார். பல்வேறு வீரர்கள் குறைந்த ஆரம்ப விலையில் இருந்து இதேபோல் அதிக தொகை கொடுத்து பெறப்பட்டுள்ளனர்.

இனி முதல் நாள் ஏலத்தின் முடிவில் எந்தந்த அணிகள் எத்தனை வீரர்களைப் பெற்றுள்ளது. இன்னும் எவ்வளவு தொகையை கைவசம் வைத்துள்ளனர். அந்த அணியின் இரண்டாம் நாள் தேர்வு குறித்து காண்போம்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

சென்னை அணி மொத்த ஏலத்தொகை ரூ.80 கோடியில் முன்னணி வீரர்கள் மூவரை தக்கவைத்துக் கொள்ள ரூ.33 கோடியை செலவிட்டிருந்ததால் ஏலத்தில் அவர்கள் மீதம் ரூ.47 கோடி மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. அதிலும் ரூ.30 கோடியை நேற்றைய ஏலத்தில் பயன்படுத்திவிட்டதால் இன்னும் ரூ.17 கோடி மட்டுமே சென்னை அணி இரண்டாம் நாள் ஏலத்தில் பயன்படுத்த முடியும். இதுவரை 11 வீரர்களைத் தேர்வு செய்துள்ள சென்னை அணி பேட்டிங்கில் மிகவும் வலுவான அணியாக இருந்தாலும் பந்து வீச்சில் இன்னும் சரியான வீரர்களைத் தேர்வு செய்யவில்லை. இன்றைய ஏலத்தில் பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்வதே சென்னை அணியின் முதல் குறிக்கோளாக இருக்கும். அதுமட்டுமன்றி தொடக்க வீரராக ஏதேனும் இளம் வீரரை தேர்வு செய்வதற்கும் அதிகம் வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் ஒவ்வொரு அணியும் 16 வீரர்களைக் கொண்டிருக்க வேண்டும். எனவே சென்னை அணிக்கு இன்னும் ஐந்து வீரர்கள் தேவை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இதுவரை 14 வீரர்களைப் பெற்றுள்ள பெங்களூரு அணியில் இன்னும் இரண்டு வீரர்கள் இருந்தால் போதுமானது. அணியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக அமைந்துள்ளனர். ஆனால், சர்வதேச பந்து வீச்சாளர்கள் இன்னும் பெரிதளவில் இடம்பெறவில்லை. எனவே, இன்றைய ஏலத்தில் பெங்களூரு அணியும் பந்து வீச்சாளர்களைப் பெற முயற்சி செய்யும். பெங்களூரு அணிக்கு இன்னும் ஒரு RTM கார்டு வசதி இருப்பதால் அதை பந்து வீச்சாளர்கள் மீது உபயோகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி டேர்டெவில்ஸ்

15 வீரர்களைப் பெற்றுள்ள டெல்லி அணி பெரும்பாலும் பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர் என அனைத்து தேவைகளையும் சரிவர பூர்த்தி செய்துவிட்டது. இருப்பினும் இன்னும் ரூ.12.3 கோடி மீதமுள்ள நிலையில் முக்கிய வீரர் ஒருவரை டெல்லி அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. அது யார் என்பது இன்று ஏலத்தில் தெரிய வரும். இன்னும் ஒரு வீரர் மட்டுமே தேவை என்பதால் டெல்லி அணி பொறுமையாகச் சிந்தித்து வீரரைத் தேர்வு செய்யும்.

மும்பை இந்தியன்ஸ்

இதுவரை ஒன்பது வீரர்களை மட்டுமே அணியில் சேர்த்துள்ள மும்பை அணி அதற்குள் ரூ.65 கோடியை உபயோகப்படுத்தி உள்ளது. இன்னும் ரூ.15 கோடிக்குள் ஏழு வீரர்களை மும்பை அணி தேர்வு செய்ய வேண்டும். அதிலும் பேட்ஸ்மேன்கள் தேவையான நிலையில் மும்பை அணி என்ன செய்ய உள்ளது என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

12 வீரர்களை ரூ.72.40 கோடிக்குப் பெற்றுள்ள கொல்கத்தா அணி, இன்னும் ரூ.7.6 கோடிக்குள் நான்கு வீரர்களைப் பெற வேண்டும். பெரும்பாலும் கொல்கத்தா அணி இளம் ஆல்ரவுண்டர்களைத் தேர்வு செய்ய முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஒன்பது வீரர்களை பெற்றுள்ள ராஜஸ்தான் அணி பேட்டிங் வரிசையை மிகவும் வலுவானதாக அமைத்துள்ளது. இன்னும் ரூ.23.5 கோடி மீதமுள்ள நிலையில் சிறந்த பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யவே ராஜஸ்தான் அணி முயற்சி செய்யும். அதுமட்டுமின்றி ராஜஸ்தான் அணிக்கு இன்னும் இரண்டு RTM கார்டு வசதியும் உள்ளது.

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்

எந்த வருடமும் இல்லாத அளவுக்குச் சிறப்பான அணி தேர்வை பஞ்சாப் அணி மேற்கொண்டுள்ளது. சிறப்பான பேட்ஸ்மேன்களைத் தொடர்ச்சியாக ஏலம் பெற்ற பஞ்சாப் அணி வழக்கம்போல் பந்து வீச்சாளர்களைத் தவற விட்டுவிட்டது. அதிலும் இந்த முறை பஞ்சாப் அணி தேர்வு செய்த ஐந்து வீரர்கள் அவர்கள் அணிக்கு RTM மூலம் மீண்டும் அழைக்கப்பட்டது பெரும் ஏமாற்றம்தான். இன்னும் ரூ.21.9 கோடி மீதமுள்ள நிலையில் பஞ்சாப் இன்னும் ஆறு வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதிலும் ஒரு RTM வசதி இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கடந்த இரண்டு ஐ,பி.எல் தொடரிலும் ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக பல்வேறு வெற்றிகளைப் பெற்றது. அதற்குக் காரணம் அதன் சிறப்பான பந்து வீச்சு. அதனால் இந்த முறையும் சிறந்த பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துவரும் ஹைதராபாத் அணி இதுவரை 16 வீரர்களை தேர்வு செய்துவிட்டது. மீதமுள்ள ரூ.8 கோடி கோடியில் சிறந்த பேட்ஸ்மேன்களைப் பெற பெரிதும் முயற்சி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 28 ஜன 2018