மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: மன்னிப்புகளால் கழுவ முடியாத கறை!

சிறப்புக் கட்டுரை: மன்னிப்புகளால் கழுவ முடியாத கறை!

மதரா

குடியரசு தினத்துக்கு முன்தினம் தமிழர்களைப் பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உட்படுத்திய செய்தி ஒன்று வந்தது. இசைத் துறையில் மாபெரும் சாதனைகளைச் செய்துள்ள இளையராஜாவுக்கு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் அறிவிப்புதான் அந்தச் செய்தி.

இந்த மகிழ்ச்சியை மட்டுப்படுத்தித் தமிழர்களை மனம் வருந்தச் செய்த ஒரு நிகழ்வும் குடியரசு தினத்தன்று அரங்கேறியது. இளையராஜாவுக்கு விருதளித்ததன் மூலம் தலித்துகளைத் தன் பக்கம் இழுக்க மத்திய அரசு முயல்கிறது என்னும் விமர்சனத்தை முன்வைத்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

இந்தச் செய்திக்குப் பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அந்த நாளிதழ் அடுத்த நாளே (ஜனவரி 27) மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்பது நல்ல பண்பு என்பதில் ஐயமில்லை. ஒரு செயலுக்காக அதைச் செய்தவர் மன்னிப்புக் கேட்ட பிறகும் அதுகுறித்த விமர்சனத்தை முன்வைப்பது சரியல்ல என்றாலும், இந்த விவகாரத்தில் சில விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டியவை. எக்ஸ்பிரஸ் என்னும் இதழ் சார்ந்த செயல்பாடாக மட்டும் இத்தகைய பேச்சுக்களை நாம் எடுத்துக்கொண்டுவிட முடியாது. இத்தகைய விமர்சனங்களுக்கு நமது சமூகத்தில் அழுத்தமான பின்னணி உள்ளதால் மன்னிப்பைத் தாண்டியும் இந்தச் செயலை நாம் அலச வேண்டியுள்ளது.

யாரை இழிவுபடுத்தும் விமர்சனம் இது?

தனது துறையில் சாதித்து மேல்வரும் சாதனையாளர்களை அப்படியே கொண்டாடும் ஊடகங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வருபவரை மட்டும் அவரது சாதிப் பின்னணியோடு அணுகுவது புதிதல்ல.

இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷண் விருது இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வந்ததிலிருந்து ஏராளமான பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. மொழிக்கு அப்பாற்பட்டு மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து போயிருக்கிறது அவரது இசை. சுக துக்கங்களில், வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் அவரது பாடல்களை மட்டுமே சுவாசித்து வாழும் எண்ணற்ற நபர்களைக் கண்டுவருகிறோம். 2010ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது பெற்ற இளையராஜா இதுவரை தான் இசையமைத்த படங்களுக்காக ஐந்து முறை தேசிய விருதும் பெற்றுள்ளார். இப்போது வழங்கப்படவுள்ள பத்ம விபூஷண் விருது என்பது காலம் தாழ்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது என அரசியல், திரைத்துறை பிரபலங்கள் உட்பட சாமானிய மக்களும் கருதுகிறார்கள். ஆனால் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் 26.1.2018 அன்று வெளியிட்ட செய்தியில் இந்த விருதுக்கு வேறொரு காரணம் கற்பிக்கப்பட்டது.

நாளிதழின் முதல் பக்கத்தில், “Dalit outreach with Illayaraja's Padma” என்று தலைப்பில் இந்தச் செய்தி வெளியானது. குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி, மகாராஷ்டிராவில் பீமா கொரிகன் ஆகிய தலித் தலைவர்களின் எழுச்சியின் காரணமாக பாஜக அரசு தனது தலித் ஆதரவு நிலைப்பாட்டைக் காட்டிக் கொள்வதற்காகவே இளையராஜா இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்தச் செய்தி கூறியது.

38 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வரும் இளையராஜா 1,000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தமிழ் மக்களின் வாழ்வோடு பிணைந்த இசையை உலக அளவில் கொண்டுசேர்த்த பெருமை இளையராஜாவையே சாரும். இளையராஜாவின் இசை சாதனைகளை ஒப்பிடுகையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருது எந்த விதத்திலும் கூடுதல் பெருமையைச் சேர்க்காது. மாறாக ராஜாவுக்கு அளிக்கப்படுவதன் மூலம் பத்ம விபூஷண் விருது தனக்குப் பெருமையைத் தேடிக்கொண்டது என்ற கூற்றையும் தற்போது அதிகளவில் கேட்டு வருகிறோம். அப்படியிருக்க, அவர் தலித் என்பதால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது அவரது இசை மேதமையை, சாதனைகளை, புறந்தள்ளுகிற முயற்சியாகவே இருக்கிறது.

சிலர் விஷயத்தில் மட்டும் நினைவுக்கு வரும் சாதி

ராஜாவின் இசையைக் கேட்டு ரசித்துவரும் எந்த ரசிகரும் அவரை அவர் சார்ந்த மதத்தையோ, சாதியையோ தொடர்புபடுத்தி யோசிக்காதபோது அவர் தலித் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் காரணம் என்ன? ராஜாவுக்கு விருது என்றதும் அவருடைய இசை நினைவுக்கு வராமல் அவருடைய சாதி நினைவுக்கு வந்தது ஏன்? பாஜகவின் தலித் ஆதரவு வியூகமாக இதைச் சித்திரிப்பது பாஜகவின் மீதான விமர்சனம் அல்ல. இளையராஜாவை இழிவுபடுத்தும் செயல். நீ எவ்வளவு திறமையானவனாக இருந்தாலும், நீ எவ்வளவு சாதனை புரிந்தாலும் உன் சாதியை நான் மறக்க மாட்டேன் என்பதைச் சொல்லும் கூற்றாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த விருது தற்போது இளையராஜாவுக்கு மட்டும் அறிவிக்கப்படவில்லை. மகாராஷ்டிராவைச் சேர்ந்த குலாம் முஸ்தபா கான், கேரளாவைச் சார்ந்த பி.பரமேஸ்வரன் ஆகியோருக்கும் சேர்த்தே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் விருது பெறும்போதெல்லாம் அவர்களது சாதனைகள் கண்முன் வந்தன. இளையராஜா என்று வரும்போது மட்டும் அவரது சாதி கண்ணில் தெரிந்தால் பிரச்னை யார் கண்ணில் உள்ளது என்பது தெளிவாகிறது.

செய்திக்கும் கருத்துக்கும் இடையிலான வித்தியாசம்

எந்தவொரு நிகழ்வையும் ஒரே கோணத்தில்தான் பார்க்க வேண்டும் என்பதில்லை, யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களும் இல்லை. ஆனால், சாதனையைப் பார்க்காமல் சாதியைப் பார்ப்பது ஏன் என்பதுதான் கேள்வி. தவிர, இந்தப் பார்வை தனிப்பட்ட ஒருவர் எழுதிய கட்டுரையாக இல்லாமல் “Express News Service" என்று செய்திப் பிரிவு எழுதிய செய்தியாகவே வந்துள்ளது. ஒரு செய்திக்குள் தனது யூகங்களையோ, விமர்சனங்களையோ, நிகழ்வுகளின் மீதான விமர்சனப் பார்வைகளையோ முன்வைப்பது சொல்வது இதழியல் நெறி அல்ல. தனிப்பட்ட ஒரு நபர் தன் கட்டுரையில் கருத்துக் கூறலாம். ஆனால், செய்தியே ஒரு கருத்தாக மாறினால் செய்தி என்பதன் வரையறை என்ன என்னும் கேள்வி எழுகிறது. செய்திக் கட்டுரையில் வெளிப்படும் கருத்துகள் உரிய நிரூபணங்களுடன், ஆதாரங்களுடன் (சம்பவங்கள், புள்ளிவிவரங்கள், உரிய நபர்களின் கூற்றுகள்...) முன்வைக்கப்பட வேண்டும். தனிநபர்களின் பெயர்களில் வெளிப்படும் கருத்துகள் தர்க்கபூர்வமாக முன்வைக்கப்பட வேண்டும். 85 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தித்தாளை நடத்திவரும் இந்த நிறுவனத்துக்கு இது தெரியாதா?

இது விதிவிலக்கு அல்ல

இத்தகைய பார்வை விதிவிலக்காக அல்லாமல் விதியாகவே வெளிப்படுகிறது என்பதுதான் இதிலுள்ள விபரீதம். தமிழ் நாளிதழான தினமணி கபாலி படம் வெளிவந்தபோது பா.ரஞ்சித்தின் மீது இதேபோன்ற விமர்சனத்தைக் கொஞ்சம் நாசூக்காகக் கூறியது. பா.ரஞ்சித்தை ‘லோ பட்ஜெட்’ அடித்தட்டு சிந்தனையுள்ள இயக்குநர் என்றும் ரஜினியை வைத்து அவரைப் படம் இயக்கச் சொன்னது குருவி தலையில் பனங்காயை வைத்த கதையாக இருந்தது என்றும் விமர்சித்தது. அந்தக் கட்டுரையிலும் எழுதியவர் பெயர் இல்லை.தினமணியின் குரலாகவே அது வெளிவந்திருந்தது. உள்ளது. ரஞ்சித்தின் எல்லையை யார் தீர்மானிப்பது?

சமூகத்தில் புரையோடியிருக்கும் சாதிய, மதவாத அழுக்குகளைத் துடைத்து எடுக்க வேண்டிய பணி ஊடகங்களின் கையில் இருக்கும்போது அந்த ஊடகங்களே மேலும் அழுக்குகளை ஏற்படுத்துவது வருத்தத்துக்குரியது. பொது நீதி சார்ந்தும் இதழியல் அறம் சார்ந்தும் தவிர்க்கப்பட வேண்டிய, கண்டிக்கப்பட வேண்டிய போக்கு இது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018