மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

தோல்வியில் முடிந்த கட்டண உயர்வு!

தோல்வியில் முடிந்த கட்டண உயர்வு!

தமிழக அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியது தோல்வியில் முடிந்துள்ளதாகவும், மக்கள் ரயில், தனியார் பேருந்துகளை நாடத் தொடங்கியுள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (ஜனவரி 27) அவர் விடுத்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் பினாமி அரசு அறிவித்த பேருந்து கட்டண உயர்வு பயன்களைவிட, பாதிப்புகளை அதிமாக்கியிருக்கிறது. பேருந்து கட்டண உயர்வு காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் தினமும் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படும் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகளில் தினமும் சராசரியாக 2.10 கோடிப் பேர் பயணம் செய்துவந்தனர். கட்டண உயர்வின் காரணமாக 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதை கைவிட்டுவிட்டனர்” என்று கூறியுள்ள அவர், “தனியார் பேருந்துகள், ரயில்கள், ஷேர் ஆட்டோக்கள் ஆகியவற்றில் பயணம் செய்யத் தொடங்கி இருப்பதுதான் இதற்குக் காரணம்” என்றும் தெரிவித்துள்ளார்.

கட்டண உயர்வுக்குப் பிறகு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.38 கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.28 கோடி மட்டும்தான் வசூலாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்டண உயர்வு 10 விழுக்காட்டுக்குள் இருந்தால் அதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், 100 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தப்பட்டால் பணக்காரர்களால்கூட ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாது. அதுதான் இப்போது நடைபெற்றிருக்கிறது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

“ சென்னை புறநகர் ரயில்களில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கிண்டி வரை 5 ரூபாயும், தாம்பரம் வரை 10 ரூபாயும், செங்கல்பட்டு வரை அதிகபட்சமாக 20 ரூபாயும் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சாதாரணப் பேருந்துகளில் பயணம் செய்ய இதைவிட மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு ரூ.25, ரூ.30 மட்டுமே ரயில் கட்டணம். சீசன் டிக்கெட் எடுத்தால் ஒரு நாளைக்கு திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு ரூ.5.50 மட்டும்தான் கட்டணம். ஆனால், சாதாரணப் பேருந்துகளில் திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு ரூ.110 கட்டணம். இந்த அளவுக்குக் கட்டண விகிதம் அதிகமாக இருந்தால் பயணிகள் பேருந்தில் பயணிக்க எவ்வாறு முன்வருவார்கள்” என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், “புறநகர் ரயில்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டால் மாநகரப் பேருந்துகளின் வருமானம் மேலும் பல மடங்கு குறைந்து விடக்கூடும்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“மற்றொருபுறம் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வது சாகசமாகவும், பெருந்துன்பமாகவும் உள்ளது. மழை நேரங்களில் குடை பிடித்துக்கொண்டும், காற்று காலங்களில் பேருந்தின் மேற்கூரை எப்போது பிய்த்துக்கொண்டு பறக்குமோ என்ற பதற்றத்தில்தான் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது” எனவும் அச்சம் தெரிவித்துள்ளார்.

எனவே, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், “ அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைச் சீரமைத்தும், காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை வாங்கியும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018