மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

பொடி உப்பைத் தவிர்ப்போம்; கல் உப்பைப் பயன்படுத்துவோம் – இந்த விஷயத்தை சிம்பிளா சொல்லாமல், தம் கட்டி இழுத்து பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸா டைப் பண்ணி, கவர்மென்ட், கார்ப்பரேட்டுன்னு இழுத்து... எங்க ராசா இருக்கீங்க.

இப்பல்லாம் ரொம்ப லெந்த்தா டைப் பண்ணினா படிக்க மாட்டாங்க. நேரா கடைசி ரெண்டு வரிய படிச்சுபுட்டு கெளம்பிருவாங்க. இன்னும் எந்த உலகத்துல இருக்கீங்க பாஸ்.

ஐந்தே நிமிடங்களில் சாகக்கூடியது ஒரு கையளவு அயோடின் உப்பு.

மூன்று நிமிடங்கள் உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள்.

ஒரு கூட்டம், ‘இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது. ஆனால், மூளை இல்லை’ என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.

அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது.

டாக்டர் இர்வின் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்.

மேலும், அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர்.

பரங்கிப்பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தபோது ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன்.

சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்: “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள். காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள்.

வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன. இப்போது அவர்களுடைய பாரம்பர்ய உணவுக் கலாசாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம்.

நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீட்சா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.

பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.

சென்னையில் நம் நாட்டின் சப்வே பிராஞ்ச்சில் பீட்சாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழ்நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன.

பாரம்பர்ய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன.

வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை.

உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றனர். ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக்கொள்வோம்.

அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேரை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றி விடுவோம்.

“அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” – ஒரு பண முதலை கேட்டது. ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம்.

இனி பத்து வயது சிறுவர்கள்கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும்.

அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதயநோயாளிகளாகவே இருப்பர்.

அவர்கள் அனைவரும் ரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன, அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம். அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?”

“உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு” ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.

இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது. எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத் தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்துக்கு வந்துவிட்டன.

கல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது. சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெருகிவிட்டன.

அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.

இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள்.

மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்:

“பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்? ஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”.

“ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள் இல்லையில்லை... வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?”

“நாம் வாங்கும் பொடி உப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.”

“2020இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார். ஆனால், மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள். அதற்கு அவர்கள் கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.”

“ஒரு முப்பதாண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா? இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின்பண்டங்களைத் தின்றதன் விளைவுதான். போதாக்குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.”

“கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன.

இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதயநோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறுநீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.

நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராக இருப்பதால்தான் வெளிநாட்டுப் பண முதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன.

வெல்ஃபேர் கவர்ன்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால், உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது.

போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.” சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தார்கள். அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன. இரும்புத் தொப்பி அணிந்த போலீஸார் அவர்களை அள்ளி வேனில் திணித்துக்கொண்டு விரைந்தனர். இதை எல்லா தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள்.

ஆனால், எதிலும் ஒளிபரப்பவில்லை. இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களைத் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. மக்களாகிய நாம்தான் திருந்த வேண்டும். பொடி உப்பைத் தவிர்ப்போம்... கல் உப்பைப் பயன்படுத்துவோம்.

உஸ்ஸ்ஸ்ஸ்... முடியலல்ல... எனக்கும்தான்.

உண்மையை உரக்கச்சொல்வோம்ன்னுல்லாம் சொல்றீங்க. ரைட்டுதான். உண்மையோ பொய்யோ... உரக்க சொல்றீங்களோ உட்கார்ந்துகிட்டு சொல்றீங்களோ... கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்க.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018