மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

பெரும்பூனையின் பசியும் எலிகளின் துயரங்களும்!

பெரும்பூனையின் பசியும் எலிகளின் துயரங்களும்!

சரவணன் சந்திரன்

இப்போதிருக்கிற கொதிநிலை அரசியல் சூழலை மேலிருந்து ஒரு பருந்துப் பார்வையில் பார்க்க விரும்புகிறேன். எந்தவிதமான சார்புகளும் இல்லாமல் நடைமுறை யதார்த்தத்தைப் பார்ப்பது என்று அதற்கு அர்த்தம். ஊடாடும் அன்றாட வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளை மையமாக வைத்துச் சுழல்வதைவிட, கலாசாரம், மதம் சம்பந்தமான உரையாடல்களையே உருவாக்க விரும்புகிறது பாஜக. ஒரு காலகட்டத்தின் கொந்தளிப்பான மனநிலையை அப்படியே தலைகுப்புற மடைமாற்ற நினைக்கிறது. ஒட்டுமொத்த சமூகத்திடமும் மறைமுகமாகத் தங்கள் கொள்கைகள் சம்பந்தமான உரையாடலை மட்டுமே மேற்கொள்கிறது. மூடிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு, காதுகளை அகலத் திறந்துவைத்து சத்தம் உட்புக அனுமதிக்கிற போக்கையும் உணர முடிகிறது.

எதையும் பகடி செய்யும் வடிவேல்தனமான மொழியில் சொல்வதென்றாலும், ஒரு பெருங்கூட்டமே காறித் துப்பிக்கொண்டிருந்தாலும் அக்கட்சி கன கச்சிதமாகத் தன் வேலையில் கவனமாக இருக்கிறது. நீங்கள் கல்லைத் தூக்கிப்போட்டு விளையாடும்போதுகூட அந்தப் பக்கம் நாலு விழும். இந்தப் பக்கம் ஒண்ணு விழும். அது, தனக்கான சாதகங்களைச் சிறுகச் சிறுகச் சேர்த்துக்கொள்ளும் அரசியல். எல்லோருமே இதைச் செய்துதான் அரசியல் அரங்கில் மேலெழுந்து வந்திருக்கிறார்கள். ஆனால், நம்பிக்கைகளை விதைத்து வளர்பவர்களுக்கு மத்தியில், இவர்கள் தங்களை முன்னிறுத்தும் விதமே அச்சமாக இருக்கிறது.

பாஜகவின் தவறுகள்

சின்ன ஒரு தெரு இருந்தாலும் அதை நாலாக உடைத்துப் பெருக்கும் முயற்சியிலேயே எதையும் செய்கின்றனர். வளர்ச்சி அரசியல் செய்வதாய்ச் சொல்லிக்கொண்டு இப்போது அவர்கள் செய்யும் செயல்கள் அவர்களுக்கு ஒருபோதும் வெற்றியைத் தராது. பாஜக ஆதரவு மனநிலை உள்ள கிராமத்தில் உள்ள எல்லா வகைகளும் அடங்கிய மனிதர்கள் சிலரிடம் பேசிப் பார்த்தேன். அதன் தலைவர்கள் ஆற்றும் உரைகளைக்கண்டு அவர்களே முகம் சுளிக்கிறார்கள். இந்தக் கூட்டத்திடம் மட்டுமல்லாமல், பாஜகவின் தவறுகள் மற்ற மக்களிடமும் நன்றாகப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அதை அவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையை, அது எதிரியாகக் கருதும் கூட்டம் மிகச் சரியாகவே செய்கிறது.

தொடர்ச்சியாய் இயற்கைப் பேரிடர்கள், தலைவர்களின் மறைவு, உடல் சார்ந்த பின்னடைவுகள் குறித்த கவலைகள், பொருளாதார மந்தநிலை, எல்லாத் துறைகளிலும் நிலவும் பதற்றங்கள் என ஒரு கூட்டம் வேறு சிந்தனைகளில் இருக்கிறது. உடனடியாக ஏதாவது மாற்றம் வர வேண்டும் என்கிற சிந்தனைகளைக்கூட ஒரு சின்னக் கூட்டமே முன்னெடுத்தும் வருகிறது. இந்த இடம்தான் மாற்று அரசியலை முன்வைப்பதற்கான வெளி. அதைச் சரியாக நிரப்பியவர்கள் என வரலாற்றில் நிறைய பேரைச் சொல்ல முடியும்.

ஆனால், தமிழக பாஜக அந்த விதத்தில் வெற்றி பெறவில்லை. அதற்கான சமிக்ஞைகளைச் சின்ன அளவில்கூடக் காட்டவில்லை என்று தோன்றுகிறது. உள்ளார்ந்த துயரத்துடன் இருக்கும் ஒரு சமூகத்திடம் ஆதரவோடு இருப்பதை விடுத்து, அதிகார மொழியில் தன் செயல் திட்டங்களை அந்தச் சமூகம் விரும்பாத நிலையிலும், அதன்மீது திணிக்கும் முயற்சியில் இருக்கிறது. மாநில நலன் என்று நினைக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் எதிராக இருக்கிறது. ஆண்டாள் என்கிற சர்ச்சை தேவையே இல்லாத ஒன்று. உண்மையில் தமிழ்நாடு முழுக்க ஒன்று திரண்ட ஆண்டாள் வழிபாடு இல்லவே இல்லை.

அவர்கள் எதிர்பார்க்கும் கூட்டம் எட்டுக்கு எட்டு சைஸ் எல்லை மாடசாமி கோயிலில் சுப்ரபாதம் போடுகிற அளவுக்கே நெருங்கி வந்திருக்கிறது. கெடா வெட்டில் கைவைத்துப் பாருங்கள். ஆடித் தீர்த்துவிடுவார்கள். தனித்துவமான வழிபாடல் முறைகளைக் கொண்டவர்கள் அவர்கள். அவர்களை ஒற்றைப் புள்ளியில் இணைக்க முடியாது. அது காலம் பிடிக்கும் மாவேலை. அதனால்தான் அவர்களின் மதம் சார்ந்த உரையாடல்கள், இந்தச் சமூகத்தில் அவர்களுக்கு ஆதரவுகொண்ட சமூகத்திடம்கூட எதிர் மனநிலையிலேயே உள்வாங்கிக் கொள்ளப்படுகிறது.

மாறும் மக்களின் மனநிலை

நாலைந்து வருடங்களுக்கு முன்பு பிஜேபிக்குத்தான் வாக்களிப்பேன் என்று சொன்ன தோழி ஒருத்தர் இப்போது கொஞ்சம் யோசிக்கிறார் என்றால், எதிர்க்கூட்டத்தின் நிலையை யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் இறங்கி நட்போடு உரையாடாமல் இழவு வீட்டில் நகை நட்டுகளைக் காட்டிச் சத்தம்போடும் புதிய பணக்காரர்களைப் போல தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துவருகிறது. வளர நினைக்கிற ஒரு கட்சிக்கு ஒருபோதும் இது அழகில்லை.

வளர நினைப்பவர்கள் ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த வருத்தங்களோடு உரையாட வேண்டும். வருத்தங்களையும் துயரங்களையும் ஊதிப் பெருக்கக் கூடாது. அவர்களுக்கு இந்த விஷயத்தில் அரசியல் செய்யத் தெரியவில்லை. வீணாக எல்லா தரப்பினருடனும் போய் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார்கள். முட்டாள்தனங்களையும் ஆர்வக்கோளாறுகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் அதை ஓர் அரசியல் பார்முலா எனவும் சொல்லலாம். பயன் கிடைக்கிறதா என்று கேட்டால், முன்னால் சொன்ன கல் உதாரணத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பக்கமும் சில கற்கள் விழத்தான் செய்யும். அது ஒரு சிறிய அரசியல் கணக்கீடு. அதனால்தான் அதன் ஆர்வம் முழுக்கவும் அது முன்னிறுத்தும் மதம் சார்ந்த அரசியல் சொல்லாடல்களை முதன்மையாக நிறுத்த முயல்வதிலேயே இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள அதன் எதிர்த்தரப்பு தவறுகிறது.

எதிர்த்தரப்பின் தவறுகள்

எதிர்த்தரப்பும் மக்களின் உள்ளார்ந்த வலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்காமல், வேறு உரையாடல்கள் பக்கமாக முகம்கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. ஓகி புயலின் கோரத் தாண்டவம் இதே தொனியில் பேசப்பட்டிருக்க வேண்டுமா, இல்லையா? துயரம் தோய்ந்த சமூகம் அதைத்தான் எதிர்பார்க்கிறது. இப்போது போய்க்கொண்டிருக்கும் சர்ச்சைகளைப் பெரும்பான்மைச் சமூகம் காதில்கூடப் போட்டுக்கொள்ளவில்லை. சென்னையிலிருந்து கிளம்பிச் செங்கல்பட்டு தாண்டினாலே வேறு உலகம் கண்ணில் விரிகிறது. பிரச்னைகளால் சூழப்பட்டிருக்கிற அச்சமூகத்துக்கு இந்தச் சர்ச்சைகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தமிழக மக்கள் உண்மையிலேயே தேர்தலை எதிர்நோக்கவில்லை. அதற்கான ஒட்டுமொத்த மனநிலை அதை நோக்கித் திரண்டும் வரவில்லை. மூச்சு முட்டுகிற சத்தத்தைத்தான் பயணங்களில் எளிய மனிதர்களிடம் கேட்க முடிகிறது. தேர்தல் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலையே எங்கும் இருக்கிறது. கட்சிகள் சார்ந்த மக்களின் மனநிலையை இதில் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் சம்மட்டி அடியாய் மக்கள் மத்தியில் இறங்கிக்கொண்டிருக்கின்றன. எதிர்கால அரசியல் ஆட்டம் ஆளும்கட்சியான அவர்களுக்கில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. மற்ற கட்சிகள் முட்டிமோதுகின்றன. இங்கும் நண்டு கதையே சுவாரசியமாக நடக்கிறது. ஒருத்தர் மேலேறினால் இன்னொருத்தர் இழுத்துக் கடாசிவிடுகிறார். ஆயிரம் குழப்பங்கள் எதிர்க்கும் கூட்டத்தினரிடையே வரிசை கட்டுகின்றன. வளர்வதற்கு முன்பே தலையிலேயே தட்டிவைக்க வேண்டுமென்கிற எத்தனங்களாகக்கூட இப்போதைய சமூக ஊடக எதிர்வினைகளைக் கருதலாம். ஆனால், அது ஒட்டுமொத்த சமூகத்திடம் எதிரொலிக்கவில்லை. அதன் கவலைகள் வேறு. மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்ற ஒரே கட்சி என்று சந்தையில் எதையும் இப்போது கூவி விற்க முடியவில்லை. கட்சி சார்ந்த நடவடிக்கைகள் இவை. இனி அவர்கள்தான் சிந்தித்துச் செயல்பட வேண்டும். நன்றாக ஆடினால் கோப்பை நிச்சயம். அது வேறு ஒரு கணக்கு. வலுத்தவர் ஜெயிப்பார் என்பது உலக அரசியல் நடைமுறை. ஜெயிக்கிற வாய்ப்பிருப்பவர்கள் தங்களைத் தாங்களே சீரமைத்துக்கொள்ள வேண்டிய கால தேவையில் இருக்கிறார்கள்.

சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் பாஜகவின் எதிர்த்தரப்பினர் எங்கே தோற்கிறார்கள்? மதம் சார்ந்த விஷயங்களில் தவறான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். சிறு தெய்வங்களை அவர்கள் கையில் இறுக்கிப் பிடிக்க வேண்டும். பெரும்பான்மையினர் கடவுள் பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் என்பதை எவ்வளவு காலம்தான் இல்லையென்று சொல்லிக்கொண்டே இருக்கப் போகிறோம்? அதனால்தான் சிறு தெய்வங்களைக் கட்டிக் காத்துக்கொள்ளுங்கள் என்பதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன். தீவிர அரசியல் செயல்பாடாகவே இதை நடைமுறைப்படுத்துங்கள் என்பேன். அதற்காக நிறைய மனத் தடைகளைக் கடந்துவர வேண்டிய சங்கடங்களும் இருக்கின்றன. அதை வரலாற்று ரீதியிலும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், காலத்தின் கட்டாயம் இதுதான்.

சார்புகளற்ற என்று சொல்லிவிட்டு, ஆங்காங்கே என் அரசியல் சார்பு வெளிப்பட்டுவிட்டதே என்றுகூடச் சொல்லலாம். அது இருக்கத்தான் செய்யும். அப்படி நான் இல்லவே இல்லை என்று சொல்லிக்கொண்டு நிறைய பேர் வருவார்கள் இனி. அதற்கான களம்தான் இது. சரியானவர்களை இனம் காண்பது உங்களது பொறுப்பு.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சரவணன் சந்திரன், ஊடகவியலாளர், எழுத்தாளர். நான்கு நாவல்களை எழுதியிருக்கிறார். பயணமும் வேளாண்மையும் இவரது செயல்பாடுகளின் மையம். தொடர்புக்கு: [email protected])

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018