மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு!


இன்றைக்குள் பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால், மறியல் போராட்டங்களில் ஈடுபட அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தைக் காரணம் காட்டி, கடந்த 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. திடீரென அறிவிக்கப்பட்ட இந்தக் கட்டண உயர்வினால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களைக் கையிலெடுத்தனர். இதன் எதிரொலியாகப் பல இடங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.
கட்டண உயர்வை திரும்பப்பெற கோரி திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சேப்பாக்கம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கட்டண உயர்வை திரும்பப் பெற நாளை (இன்று) வரை கெடு விதிக்கிறோம். அரசு திரும்பப் பெறவில்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்” என்று கூறினார்.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை இன்றைக்குள் திரும்பப் பெறாவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபட மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் ஸ்டாலின் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.