மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: பத்மாவத் சாதித்தது என்ன?

சிறப்புக் கட்டுரை: பத்மாவத் சாதித்தது என்ன?

அரவிந்தன்

சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் படம் ஒருவழியாக வெளியாகிவிட்டது. பெரும் எதிர்பார்ப்பையும் சகிப்புத்தன்மை அற்ற வக்கிரமான எதிர்ப்புகளையும் எதிர்கொண்ட இந்தப் படம் இப்போது நாட்டின் பல பகுதிகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்ப்பாளர்களுக்குச் சிறிதளவேனும் நியாய உணர்வும் மனசாட்சியும் இருக்குமானால் அவர்கள் இந்தப் படம் வெளிவந்த பிறகு அதைப் பார்த்துவிட்டுப் பாராட்டியிருக்க வேண்டும். தவறான அனுமானத்தின் அடிப்படையில் எதிர்த்ததற்காக மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

அவர்கள் எதை எதிர்பார்த்து இந்தப் படத்தை எதிர்த்தார்களோ அதற்கு நேர் எதிராக இந்தப் படம் செயல்பட்டிருக்கிறது. ராஜபுத்திரர்களின் “வீரம்”, ராஜபுத்திரப் பெண்களின் “கௌரவம்”, குறிப்பாகச் சித்தூர் ராணி பத்மினியின் “புனிதத் தன்மை” ஆகியவற்றுக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இந்த அம்சங்களைக் கவனமாகவே கையாண்டிருக்கிறார். சொல்லப்போனால், மிகவும் கவனமாகக் கையாண்டிருக்கிறார்.

பன்சாலி திறமையான இயக்குநர் மட்டுமல்ல. வணிகரீதியில் வெற்றிகரமான இயக்குநர். பெரு முதலீட்டில், பெரிய நட்சத்திரங்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் வைத்துக்கொண்டு படம் எடுப்பவர். நாடு முழுவதிலும் பெருவாரியான மக்கள் திரையரங்குக்கு வந்து தன் படத்தைப் பார்த்தால்தான் லாபம் பார்க்க முடியும் என்பது அவருக்குத் தெரியும். மக்களைக் கோபப்படுத்தும் விதத்திலோ மக்களுக்குப் பிடிக்காத விதத்திலோ படம் எடுக்க அவர் ஒருபோதும் துணிய மாட்டார்.

கலாபூர்வமான புதிய முயற்சிகளையோ, பரிசோதனைகளையோ மேற்கொள்ளும் படைப்பாளிகள் பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் அம்சங்களோடு முரண்படத் தயங்க மாட்டார்கள். ஆனால், பெரு வணிகக் களத்தில் பெரும் பணத்தோடும் பெரும் படையோடும் களம் இறங்கும் பன்சாலி போன்றவர்கள் ஒருபோதும் பொதுப் புத்திக்கு முரணாகச் செயல்பட மாட்டார்கள். இதைப் புரிந்துகொண்ட யாருமே பத்மாவத் திரைப்படம் ராஜபுத்திரர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்தில் இருக்கும் என நினைத்திருக்க மாட்டார்கள். அப்படி ஏதேனும் இருந்தால் அது கவனப் பிசகாக இடம்பெற்றதாகவே இருக்கும் என்பது பன்சாலிகளின் வெகுஜனக் கலைச் செயல்பாட்டைப் புரிந்துகொண்டவர்களுக்குத் தெரியும்.

படத்தின் முன்னோட்டத்தில் பார்வையாளர்களின் கவன ஈர்புக்காக வைக்கப்பட்டிருந்த சில காட்சித் துணுக்குகளைப் பார்த்து ஆவேசமடைந்த சிலர் கொதித்து எழுந்தார்கள். படம் வெளியே வந்த பிறகு தங்கள் ‘அச்சம்’ தேவையற்றது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். ஆனால், இன்றளவிலும் அவர்களிடமிருந்து தங்கள் முடிவு தவறானது என்பதைக் காட்டும் ஒரு சொல்கூட வெளிப்படவில்லை.

ராஜபுத்திரர்களை மகிமைப்படுத்தும் படம்

பன்சாலி ராஜபுத்திரர்களை இழிவுபடுத்தவில்லை. மகிமைப்படுத்தியிருக்கிறார். வீரம், பெண்களின் தூய்மை முதலான எல்லா விஷயங்களிலும் ராஜபுத்திரர்கள் தங்களைப் பற்றி வைத்திருக்கும் நம்பிக்கைகளை அழுத்தமாக உறுதிசெய்யும் விதத்தில் படம் எடுத்திருக்கிறார். படத்தில் மேவார் மன்னன் ரத்தன் சிங்கின் வீரமும் நேர்மையும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. எதிரியை அவன் நடத்தும் விதம் உன்னதமானது. மேவார் நாட்டுப் பெண்கள் “கற்பை” உயிரினும் மேலாக நினைப்பவர்கள். தங்களைக் காக்க வேண்டிய ஆண்கள் போரில் மடிந்துவிட்டால் எதிரிகள் தங்களை அணுகுவதற்கு முன்பே நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வார்கள். இதையெல்லாம் இம்மி பிசகாமல் காட்சிகளாலும் வசனங்களாலும் சித்திரித்திருக்கிறார் பன்சாலி. உண்மையில் ராஜபுத்திரர்களின் வழி வந்தவர்கள் இந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும். பன்சாலிக்குப் பாராட்டுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.

‘காட்டுமிராண்டி’ கில்ஜி

மறுபுறம், முஸ்லிம் மன்னரான அலாவுதீன் கில்ஜியை அவர் சித்திரித்த விதமும் ராஜபுத்திரர்களின் வழித்தோன்றல்களைத் திருப்திப்படுத்தும் விதத்திலேயே இருக்கிறது. பன்சாலி காட்டும் கில்ஜி, போர் வெறி பிடித்தவன். காமுகன். ஈவிரக்கமற்றவன். நாசூக்கோ நாகரிகமோ அவனுக்குக் கிடையாது. அவன் சாப்பிடும் விதம் பொதுப் புத்தியின் பார்வையில் “காட்டுமிராண்டி” சாப்பிடுவது போலவே இருக்கும். விருந்துக்கு வந்த எதிரியை நயவஞ்சகமாகச் சிறைப்பிடிப்பவன். துவந்த யுத்தத்தில் தன்னை வென்ற எதிரியைத் தன் வீரர்களை விட்டு முதுகில் அம்பெய்து கொல்பவன்.

உண்மையில் கில்ஜி அப்படித்தான் இருந்தானா? வரலாற்றுத் தரவுகள் காட்டும் சித்திரம் வேறாக இருக்கிறது. கில்ஜி தனது சமகாலத்தில் நாகரிகத்தில் பலவிதங்களிலும் மேம்பட்டிருந்த பாரசீக நாட்டின் பல்வேறு அரசியல், பண்பாட்டுக் கூறுகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்தவன் என்று கருதப்படுகிறது. “கில்ஜி மிகச் சிறந்த ராஜதந்திரி. டெல்லி அரசின் நிதி நிலையை ஸ்திரப்படுத்தினார். எல்லையை விரிவுபடுத்தினார். மங்கோலியர்களின் படையெடுப்பிலிருந்து வட இந்தியாவைக் காப்பாற்றினார். அவர் சாதித்த பலவற்றை இப்போது வாழும் நிர்வாகிகளால்கூடச் செய்ய முடியாது” என்று அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் திவ்யா செரியன் தி இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில் (2017, நவம்பர் 17) குறிப்பிடுகிறார். இனி பொதுப் புத்தியில் கில்ஜியின் இந்தச் சித்திரமே நிற்கும். இந்தப் படத்துக்கு எழுதப்பட்ட விமர்சனம் ஒன்று கில்ஜியை ரண்வீர் நம் கண்முன் நிறுத்துவதாகச் சொல்கிறது. கில்ஜியை அந்த விமர்சகர் எங்கே பார்த்தார் என்று தெரியவில்லை. பன்சாலியின் கில்ஜிதான் நிஜமான கில்ஜி என்று பலரும் நினைக்கத் தலைப்படுவார்கள் என்பதற்கான அடையாளம் இது.

பன்சாலியோ கில்ஜியை மசாலா பட வில்லனைக் காட்டிலும் கேவலமாகச் சித்திரிக்கிறார். நாகரிகமும் நேர்மையும் அற்ற மனிதராகச் சித்திரிக்கிறார். அதற்கான வரலாற்றுத் தரவுகள் எதையும் பிரதிக்கு உள்ளேயோ, வெளியிலோ அவர் முன்வைக்கவில்லை.

கவித்துவக் கற்பனை

பத்மாவதி பற்றிய சித்திரிப்பிலும் அவர் வரலாற்றை நாடவில்லை. மாலிக் முகம்மது ஜாயஸி என்ற சூஃபி கவிஞர் கி.பி. 1540இல் பத்மாவதி பற்றிய கதையைக் களமாகக்கொண்டு கவிதை எழுதினார். இதுவே பத்மாவதி பற்றிய பிம்பத்தை மக்கள் மனதில் விதைத்தது. கவியின் கற்பனையான அந்தப் பாத்திரம் வரலாற்றில் வாழ்ந்த காவிய நாயகியின் படிமத்தைப் பெற்றது. காவியங்களுக்கே உரித்தான விதத்தில் பத்மாவதியின் கதை பல கதைகளில் பல விதங்களில் சித்திரிக்கப்பட்டது.

பத்மாவதி என்ற பெண் இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது. கில்ஜி பெண்ணாசை காரணமாகத்தான் சித்தூர் கோட்டையைக் கைப்பற்றச் சென்றான் என்பதற்கும் ஆதாரம் இல்லை. ஆனால், பத்மாவதி தியாகத் திருவுருவாகவும் அழகின் வடிவமாகவும் பெண்மையின் “கௌரவ”ச் சின்னமாகவும் மக்கள் மனதில் இடம்பெற்றுவிட்டாள். 19ஆவது நூற்றாண்டில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ராஜபுதனத்து அரசியல் பிரதிநிதியாக இருந்த கர்னல் ஜேம்ஸ் டோட் என்பவரிடம் அந்தப் பிரதேசம் தொடர்பான வரலாற்றை எழுதும் பணி ஒப்படைக்கப்பட்டது. ராஜஸ்தானில் வழங்கிவந்த பத்மாவதி கதையை அவர்தான் வரலாற்றில் சேர்த்தார் என்று திவ்யா செரியன் தெரிவிக்கிறார்.

பன்சாலியின் வணிக அரசியல்

பத்மாவதி வரலாற்றில் இருந்தாரோ இல்லையோ, அவர் ராஜபுத்திரர்களின் கௌரவச் சின்னமாக அவர்கள் மனங்களில் இடம்பெற்றுவிட்டார். இந்நிலையில் பத்மாவதியைப் பற்றிக் கேள்வி கேட்பதோ அவரது செயல் குறித்து விமர்சிப்பதோ வெகுஜன தளத்தில் சாத்தியமே இல்லை. எனவே பன்சாலி பத்மாவதியைப் புனித பிம்பமாகச் சித்திரித்திருப்பதில் எந்த வியப்பும் இல்லை. பல கோடிகள் பணயம் வைக்கப்பட்டுள்ள ஒரு படத்தில் பொதுப்புத்திக்கு எதிரான அம்சங்களை அவர் சேர்க்காமல் இருந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. முஸ்லிம் மன்னனை வரலாற்றுத் தரவுகளுக்கு முரணாக மோசமாகச் சித்திரித்ததிலும் ஆச்சர்யம் இல்லை. இதுதான் பன்சாலியின் அரசியல். துல்லியமாகச் சொல்வதானால் வணிகப் பிரக்ஞை கொண்ட அரசியல். பொதுப் புத்தி பிம்பங்களைத் திறமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வணிக சூட்சுமம்.

இரண்டாம் அல்லது மூன்றாம் தாரமாகத் தங்கள் திருமண வாழ்வை அமைத்துக்கொள்வது குறித்துக் கவலைப்படாத பெண்கள், தங்கள் “கற்பை” காப்பாற்றிக்கொள்வதற்காகக் கூட்டமாகச் சென்று நெருப்பில் விழுவது பற்றி பன்சாலிக்கு எந்த விமர்சனமும் இல்லை. இருந்தாலும் அதை அவர் மறைமுகமாகக்கூடச் சொல்ல மாட்டார். காரணம், பொதுப் புத்தியோடு முரண்படுவதைத் தவிர்க்கும் வணிக சூட்சுமம்.

அரசியலைத் தாண்டி…

பிரமிக்கவைக்கும் காட்சிகளும் நேர்த்தியான நடிப்பும் கொண்ட இந்தப் படத்தின் திரைக்கதை அவ்வளவு சிறப்பானதல்ல. அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் பார்வையாளர்கள் எளிதில் யூகிக்கக்கூடியவையாகவே இருக்கின்றன. ரத்தன் சிங்கின் காதல், ராஜ குருவின் துரோகம், பத்மாவதியின் செயல்பாடுகள் ஆகியவை பெரிதாக ஈர்க்கும் வகையில் சித்திரிக்கப்படவில்லை. கில்ஜியின் வில்லத்தனத்தையும் பத்மாவதியின் அழகையும் “கற்பு” விஷயத்தில் ராஜபுத்திரர்களின் அணுகுமுறையையும் படம் வலுவாகச் சித்திரிக்கிறது. போர்க் காட்சிகள் அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒளிப்பதிவும் முப்பரிமாணத் தொழில்நுட்பமும் அரங்க அமைப்புகளும் சேர்ந்து காட்சிகளைக் கண் முன் நிஜமாகவே நடப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்துவதில் வெற்றிபெறுகின்றன. பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வுக்கு வலு சேர்க்கிறது. குதிரைகள் திரையில் ஓடும்போது அவற்றின் குளம்பொலிகளின் அதிர்வு பார்வையாளர்களின் செவிகளை அதிரச் செய்கின்றன.

பத்மாவத் படம் வெகுஜன ரசனைக்கான சங்கதிகளும் அழகியல் கூறுகளும் கொண்ட, அலாதியான காட்சி அனுபவத்தைத் தரும் படம் என்பதில் ஐயமில்லை. தீபிகா, ரண்வீர் ஆகியோரின் நடிப்பும் படம் செலுத்தும் தாக்கத்துக்குத் துணையாக நிற்கிறது. பெரும் போர்கள் ஏற்படுவதற்குக் காரணமே பத்மாவதியின் அழகு என்பதே கதை. அத்தகைய பாத்திரத்தில் தீபிகா அற்புதமாகப் பொருந்துகிறார். பன்சாலி காட்ட விரும்பும் கில்ஜியை ரண்வீரின் தோற்றமும் உடல் மொழியும் நடிப்பும் துல்லியமாகச் சித்திரிக்கின்றன. திரைக்கதையின் பலவீனங்களும் யூகிக்ககூடிய திருப்பங்களும் ஏற்படுத்தும் ஏமாற்றத்தை மறக்கச்செய்யும் அளவுக்குப் படத்தின் சாதகமான அம்சங்கள் வலிமையாக உள்ளன.

எதிர்ப்பின் அலைகள் அடங்கிவரும் இன்றைய சூழலில் இறுதி வெற்றி பன்சாலிக்கே என்பது தெளிவாகிறது. இந்த வெற்றி வணிக ரீதியானது மட்டுமல்ல. பொதுப் புத்திக்கு இசைவான படிமங்களை வரலாற்று பாவனைகளுடன் முன்வைக்கும் கலையில் தன் தேர்ச்சியை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருப்பதிலும் அவருக்கு வெற்றிதான்.

வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் அலாவுதீன் கில்ஜியின் காலகட்டத்தை இந்தப் படத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் வேறு உருப்படியான வேலை எதேனும் இருந்தால் அதைச் செய்யலாம். அவருடைய கருத்துச் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்தவர்கள் எத்தகைய கருத்தாக இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்துக்காகப் போராடுவதில் தங்களுக்குள்ள பற்றுறுதி மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருப்பதை எண்ணித் திருப்தி அடையலாம்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 28 ஜன 2018