மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

அஞ்சலி: நிகனோர் பர்ரா - கவிதையை அதன் வேர்களுக்குத் திருப்பிய கலைஞன்!

அஞ்சலி: நிகனோர் பர்ரா - கவிதையை அதன் வேர்களுக்குத் திருப்பிய கலைஞன்!

பெருந்தேவி

நரகத்துக்குச் செல்ல விதிக்கப்பட்டவனைப் போல

பர்ரா சிரிக்கிறான்

கவிஞர்கள் எப்போதுதான் சிரிக்கவில்லை?

அவன் சிரிக்கிறேன் என்று அறிவிக்கவாவது செய்கிறான்.

லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களில் ஆகச் சிறந்த ஒருவராகக் கருதப்படும் நிகனோர் பர்ரா கடந்த செவ்வாய் (23 ஜனவரி 2018) அன்று சிலே நாட்டில் சான்தியகோவில் மறைந்தார். நூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்து தன் எழுத்தால், கவிதையால் கலைக்கு வளம் சேர்த்தவர் பர்ரா. சிலேயின் தெற்குப் பகுதியில் சான் ஃபேபியன் நகரில் 1914ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளிக் கல்விக்குப் பிறகு சிலே பல்கலையில் பொறியியல் கற்றபின் இயற்பியல் மற்றும் பிரபஞ்சவியலை பிரவுன் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகளில் பயின்றிருக்கிறார். கணித ஆசிரியராகவும் இயற்பியல் துறையில் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இரண்டு திருமணங்கள், சில திருமணம் தாண்டிய உறவுகள், குழந்தைகள், பேரக் குழந்தைகள், இத்தனையும் கண்டிருக்கிறார். “விசித்திரமான” சில குணாம்சங்கள் கொண்டவர். ஏற்கெனவே உபயோகிக்கப்பட்ட ஆடைகளை வாங்கும் பழக்கம் அதில் ஒன்று. பலமுறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அளிக்கப்பட்ட மற்ற அங்கீகாரங்களில் ஸ்பானிய மொழி இலக்கியத்துக்கான உயர் விருதான செர்வான்டிஸ் விருது (2011) முக்கியமானது.

இலக்கிய உலகைப் புரட்டிப் போட்ட கவிதைகள்

கலை ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் பர்ரா. தன் பதினோரு வயதிலேயே ஸ்பேனிய, சிலே, அரகானா இந்தியர்கள் ஆகியோர்களின் வரலாறுகளை மீட்டெடுக்கும் காவியத் தொகுதிகள் மூன்றை எழுதத் திட்டமிட்டுச் செயல்பட்டவர் எனத் தெரிவிக்கிறார் எடித் கிராஸ்மேன் (The Antipoetry of Nicanor Parra, by Edith Grossman, New York: New York University Press, 1975). அத்தகைய இமாலயச் சாதனையை அவரால் அந்த இளம் வயதில் செய்து முடிக்க முடியவில்லை, என்றாலும் வேறு பல கவிதை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவரது முதல் கவிதைத் தொகுப்பு, Cancionero Sin Nombre (தலைப்பில்லாத பாடல் புத்தகம்) 1937இல் வெளிவந்தது (பின்னர் இத்தொகுப்பு விடலைத்தனமானது என்று பர்ராவால் மறுதலிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்). முதல் தொகுப்பு வந்த பின்னர், அமெரிக்க எழுத்தாளர் வால்ட் விட்மேனின் “தங்குதடையற்ற மொழி” பர்ராவின் கவனத்தைச் சற்றே கவர்ந்தது. என்றாலும், அவர் கவிதைகள் எடுத்துக்கொள்ளும் பொருள்கள், உத்திகள், உணர்ச்சிகள் போன்றவற்றில் காஃப்காவின் மேலதிகப் பாதிப்பை வாசகர்கள் இனங்காண முடியும்.

பர்ராவின் முதல் தொகுப்பு வந்து பல ஆண்டுகளுக்குப் பின் ‘கவிதைகளும் எதிர்க் கவிதைகளூம்’ தொகுப்பு. 1954இல் வெளியானது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே புரட்டிப் போட்டது என்றெழுதுகிறார் கிராஸ்மேன். புகழ்பெற்ற கவியான பாப்லோ நெரூதா இந்தத் தொகுப்புக்காக அவரை ”பெருமூச்சைத் தோற்கடித்தவர், மேலும் பெருமூச்சு விடுபவரின் தலை வெட்டப்படுவதை மேற்பார்வை பார்க்கக்கூடியவர்” என்று அவதானித்துப் பாராட்டினார். புரிபடாத இருண்மையோடு கூடிய அகவயக் கவிதையை மறுப்பதாகவும், வெகுசன வழக்காறுகளைச் சார்ந்த பேச்சை கவிதையில் கொண்டு வருகிற ஊக்கத்தோடும் அந்தத் தொகுப்பு இருந்தது. அதற்குப் பிறகு, ‘கொள்கை விளக்க அறிக்கை’ (1963), காட்சிக் கவிதைகளாக அமைந்த ‘Artefactos’ (1972), ‘காவலரைக் குழப்பும் நகைச்சுவைத் துணுக்குகள்’ (1983), ‘வழுக்கைத் தலையோடு சண்டையிட கவிதைகள்’ (1993), ‘இரவுணவுக்குப் பின்னான அறிவித்தல்கள்’ (2006) உள்ளிட்ட ஆக்கங்கள் வெளிவந்தன.

ஸ்பானிய மொழியில் ஷேக்ஸ்பியரின் கிங் லியரை 1992இல் மொழிபெயர்த்திருக்கிறார். சிலேயில் புழங்கும் வெகுஜன மொழியையொட்டிப் புதுமையாக மொழிபெயர்த்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஸ்பானிய மொழியிலிருந்து இன்னும் இந்த நூல் ஆங்கிலத்துக்கு வரவில்லை. அமெரிக்கக் கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க்கின் நண்பராக இருந்தவர் பர்ரா. எழுத்தாளர் ராபர்ட்டோ பொலோனா போன்றவர்களின் எழுத்தில் தாக்கம் செலுத்தியவரும்கூட.

கவிதை குறித்த பார்வைகள்

முதல் தொகுப்புக்குப் பின்னால் பர்ராவிடம் உருவாகிவந்த கவிதை குறித்த பார்வைகளைப் பற்றிக் கூறும் கிராஸ்மேன், நெரூதா, ஹைடாப்ரோ போன்ற கவிகளின் உருவகச் செறிவுகள் மலிந்த கவிதை எழுத்தை பர்ரா கடுமையாக மறுத்ததை எழுதுகிறார். பர்ராவின் கவிதை மொழியிலேயே நாம் இதைக் கண்டுகொள்ள முடியும். மூடுண்ட, பூடக அல்லது புதிர்த்தன்மையிலான கவிதை மொழி, பிரபஞ்ச இயக்கத்தோடு தொடர்புறத் துடிக்கும் கவிதை மொழி பர்ராவைக் கவரவில்லை. போலவே, கவிதையில் அலங்காரப் படிமங்களைத் தள்ளிவைத்தவர் அவர். மாறாக, நடைமுறை வாழ்வை எடுத்துரைக்கும் கவிதையை, எளிய மக்களும் வாசிக்கக்கூடிய கவிதையை முன்னெடுக்க நினைத்தார். அன்றாடத்தோடு இணைத்துக்கொள்ளாத கவிதையைத் தோல்வி என்றே அவர் அடையாளம் கண்டார்.

படித்தவர்களை மட்டுமே சென்றடைவதை இலக்காகக் கொண்ட ஐரோப்பிய “மறுமலர்ச்சி அழகியலின்’ அடிப்படையில் கவிதை அமைந்திருப்பதே அந்தத் தோல்விக்குக் காரணம் என நினைத்தார். இதை மாற்றும் வகையில் ஸ்பானிய மத்திய காலகட்ட அழகியல், கதைப்பாடல்கள், நாகரிகத்தை விட்டொதுக்கிய தன்னியல்பான எழுத்துகள் போன்றவற்றை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பினார். அன்றாட யதார்த்தம், செயல்கள், பொருள்கள், அரசியல் இவற்றைக் கவிதைக்குள் கொண்டுவந்தார். விளம்பர வாக்கியங்கள், கூட்ட நடைமுறைகள், இரவுணவுக்குப் பின்னான பேச்சுகள், தன் தனிப்பட்ட வாழ்க்கை, விளையாட்டுகள், தொலைபேசி போன்ற உபகரணங்கள், அறிவியல் தொழில்நுட்பம், உள்ளூர் இலக்கியச் சூழல் போன்ற பலவற்றையும் அவர் கவிதைகளில் பார்க்கிறோம். அவரது முதல் தொகுப்பிலேயே அன்றாட வாழ்வை எதிர்கொள்ளும் தன்னெழுச்சியான கவிதைப் பாதைக்கான தடமிருந்தது. என்றாலும், மேலே குறிப்பிட்ட “கவிதைகள் மற்றும் எதிர்க்கவிதைகள்” தொகுப்பிலிருந்து அன்றாட யதார்த்தம் அவர் படைப்பின் அடிநாதமாகவே ஆனது.

ஒரு கவிஞராக பர்ராவின் முதல் இலக்கு உருவகத்திலிருந்து கவிதையை விடுவிப்பதாக இருந்தது என எடித் கிராஸ்மேன் கூறுகிறார். கவிதையில் உருவக ஆதிக்கத்தை “முந்தைய கவிதை மொழியின் மோசடி” என்று கடுமையாக விமர்சிக்கிறார் பர்ரா. மேலும், கவிதை அரியதான அல்லது exotic ஆன ஒன்றைப் பேசுவதாக இல்லாமல் சாதாரண விஷயங்களில், அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்பது அவர் பார்வை. தவிர, பாடுபொருள் மட்டுமன்றி மொழியைப் பயன்படுத்தும் விதமும் அன்றாடத்தில் கால் பதித்திருக்க வேண்டும் என நினைத்தார். அவரது ‘கொள்கை விளக்க அறிக்கை’ என்ற கவிதை இதைத் தெரிவிக்கிறது:

நாங்கள் அன்றாட வார்த்தைகளில் பேசுகிறோம்

மறைபொருட் குறிகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை

கவிஞர் என்பவரை மக்களுக்கு மேம்பட்ட இடத்தில் இருப்பவராகவோ தனிப்பட்ட சக்தி வாய்ந்த அபூர்வம் என்றோ அவர் கருதவில்லை. “கடவுளையொத்த கவிஞரை நாங்கள் மறுத்துரைக்கிறோம்” என்கிறது அதே கவிதை. மேலும் கூறுகிறது:

கவிஞர் ரசவாதியல்ல

கவிஞர் எல்லா மனிதர்களையும் போல ஒரு மனிதர்

தன் சுவரை எழுப்ப செங்கல் அடுக்குபவர் அவர்

ஜன்னல்களையும் கதவுகளையும் செய்பவர்

பர்ராவைப் பொறுத்தவரை இலக்கிய மொழி மக்கள் மொழியிலிருந்து வேறுபட்டது அல்ல. ஆனால் அதே நேரத்தில் கம்யூனிஸ்ட்களின் புரட்சிகர மொழியையும் அவர் கவிதை மொழியாக முன்மொழியவில்லை என்பது நோக்கத்தக்கது. சிலே சார்ந்த கம்யூனிஸ்ட் கவிஞர்களைப் பற்றி எழுதுகையில் “அவர்கள் மக்கள் கவிஞர்கள் அல்ல / அவர்கள் தலைமேல் வைத்துக்

கொண்டாடப்பட்ட /பூர்ஷ்வாக் கவிஞர்களின்றி வேறில்லை” என்று எழுதுகிறார். தொடர்ந்து, அவர்கள் கவிதையை “விபரீதம்” என்று சாடுகிறார்.

குறிப்பிட்ட சமூக யதார்த்தம் என்பதையொட்டி பர்ராவின் கவனம் இருந்தது என எழுதுகிறார் கிராஸ்மேன். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் 1970ஆம் ஆண்டு அவர் பங்கெடுத்த கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில், சமுதாயத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்கும் கவிஞனை மண்ணிலிருந்து பிடுங்கப்பட்ட மரத்தோடு அவர் ஒப்பிடுகிறார். அத்தகைய மரம் வாடிப்போகும், இறக்கும் என்கிறார் பர்ரா.

பறவைகள் பாடட்டும், மனிதன் பேசட்டும்

‘உணர்ச்சிப் பாடல்’ (lyrical poetry) வகை சார்ந்த கவிதைக்கு எதிர்நிலையில், அதற்குச் சவாலாக எதிர்க் கவிதை என்பதை அவர் முன்வைத்தார். நெரூதாவின் கவிதைகளுக்கான எதிர்மறை வினையாக பர்ராவின் கவிதைகள் வாசிக்கப்பட்டன. நெரூதாவைப் பாடகர் என்று (விமர்சனத்தோடுதான்) அழைக்கிறார் பர்ரா: “பறவைகள் பாடட்டும், மனிதன் பேசட்டும்” என்பது அவரது புகழ்பெற்ற கூற்று. உணர்ச்சிப் பாடல்களுக்கும் ரொமாண்டிசிஸக் கவிதைகளுக்கும் கவித்துவம் ததும்பும் கவிதைகளுக்கும் அந்நியமாக பர்ராவின் கவிதைகள் இருந்தன. அவருடைய கவிதைகள் முன்னெப்போதுமில்லாத புதுமையோடும் தொனியோடும் இருந்தன. அவை வெளிவந்தபோது எந்த அளவுக்கு அவருடைய சககாலக் கவிஞர்களைப் பதற்றப்படுத்தின என்பதைக் கூறுவதாகவே அவரது ஒரு கவிதை உள்ளது:

ரோலர் கோஸ்டர்

அரை நூற்றாண்டாக

சீரியஸ் முட்டாள்களின் சொர்க்கமாகக்

கவிதை இருந்தது

நான் வந்து

என் ரோலர் கோஸ்டரைக் கட்டியமைக்கும் வரை

விரும்பினால் மேலே செல்லுங்கள்

கீழே நீங்கள் வரும்போது மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும்

ரத்தம் கொட்டிக்கொண்டு வந்தால் அது என் தவறல்ல

எதிர்க் கவிதை என்பதை ஏற்கெனவே நடைமுறையாக உள்ள, மேலாண்மை பெற்றுள்ள இலக்கிய மரபிலிருந்து விளைந்ததாக இல்லாமல் அந்தந்த மனித சூழ்நிலைகளுக்குத் தக்க எதிர்வினையாக வைக்கப்பட்ட கவிதையாக பர்ரா கருதினார். இத்தகைய வரையறை எதிர்க்கவிதை என்ற ஒன்று கவிதையின் குறிப்பிட்ட இன்னொரு வகைமாதிரியாக முடங்குவதிலிருந்து மீட்டெடுக்கிறது. கவிதையின் சாத்தியங்களை விரிவாக்குகிறது. கவிதையை அதன் வேர்களுக்குத் திருப்ப முனைகிறது எதிர்க்கவிதை என்பதைப் பர்ரா தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ‘எதிர்க்கவிதையை வாசித்தல் பற்றிய குறிப்புகள்’ என்கிற அவர் கவிதையின் முதல் ‘குறிப்பு’, “எதிர்க்கவிதையில் கவிதையே நாடப்படுகிறது, சொற்சாதுரியம் அல்ல” என்று உரைக்கிறது. சொற்சாதுரியத்தைக் கவிதை என்று நம்புகிற பொதுப் போக்குக்கு மறுப்பு இந்தக் குறிப்பு. எதிர்க் கவிதையைக் கவிதைக்கு எதிரானதாக ஒருபோதும் பர்ரா கருதியதில்லை.

பொதுவாக பர்ராவின் எதிர்க் கவிதைகள் மெல்லிய கிண்டலுக்கும் நகைச்சுவையை உணரவைக்கும் எடுத்துரைப்புக்கும் ஆழ்ந்த முரண்நகைக்கும் இயற்சொல்லாடலுக்கும் (prosaic discourse) புகழ்பெற்றவை. ஆனால் எதிர்க்கவிதையின் இயல்மொழி ஒரு முகமூடி மட்டுமே. தர்க்கமின்மையும் அவநம்பிக்கையும் சித்தாந்த விபத்துகளும் உலகளாவிய அரசியல் அபாயங்களும் சூழ்ந்திருக்கும் தற்கால வாழ்க்கை யதார்த்தம் பற்றிய தீவிர விசாரணை அவர் கவிதைகளில் உண்டு. நகைச்சுவையை விலக்கிவைத்து இருள்தன்மை கூடி நிற்கும் கவிதைகளும் அவரிடத்தில் உண்டு.

நான் மொழிபெயர்த்த இரு கவிதைகளை இங்கே தருகிறேன்.

வாசிப்புக்கான நோபல் பரிசு

வாசிப்புக்கான நோபல் பரிசை

எனக்குத் தர வேண்டும்

ஒரு ஆதரிச வாசகன் நான்

கையில் கிடைக்கும் எல்லாவற்றையும்

வாசித்துவிடுகிறேன்

தெருப்பெயர்களை

நியான் குறிகளை

குளியலறைச் சுவர்களை

புதிய விலைப் பட்டியல்களை

காவல் துறை செய்திகளை

குதிரை ரேஸ் கணிப்புகளை

வாகன எண் பலகைகளை

என்னைப் பொறுத்தவரை

வார்த்தை என்பது புனிதமானது

நடுவர் குழு உறுப்பினர்களே

ஒரு வாசகனாகப் பொய் சொல்லி

எனக்கென்ன கிடைத்து விடப்போகிறது

மனம் தளராமல் இருக்கிறேன்

நான் எல்லாவற்றையும் வாசிக்கிறேன்

விளம்பரங்களைக்கூட விட்டுவைப்பதில்லை

ஆனால் இந்த நாட்களில் நான் அதிகம் படிப்பதில்லை

எனக்கு அவ்வளவு நேரமில்லை

ஆனால் அடேயப்பா! எவ்வளவு படித்திருக்கிறேன்

அதனால்தான் வாசிப்புக்காக

எனக்கு நோபல் பரிசு தர வேண்டும்

என்று உங்களைக் கேட்கிறேன்

கூடாத விரைவில்

இப்போது நேரம் என்ன?

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பவன்

சில நொடிகள் விழித்து -

மரணப் படுக்கையைச் சுற்றி நடந்த மந்திர ஜாலத்தால்

சுதாரித்துக்கொண்டது போல -

இப்போது நேரமென்ன என்று

உறவினர்களிடம்

அவர்கள் மயிர்க்கூச்செரியக் கேட்கும்போது

என்னமோ தப்பாக இருக்கிறதென அர்த்தம்

என்னமோ தப்பாக இருக்கிறதென அர்த்தம்

என்னமோ தப்பாக இருக்கிறதென அர்த்தம்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018