வர்த்தக உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அழைப்பு!


உலக வர்த்தக அமைப்பு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர்களுக்கு இந்தியாவில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் தேவாஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்ற உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த இந்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு, உலகப் பொருளாதார மன்றம் ஏற்பாடு செய்திருந்த அமைச்சர்களுடனான விருந்து ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய சுரேஷ் பிரபு, “மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். உலக நாடுகளிலேயே பலதரப்பு வர்த்தக பந்தத்தை ஏற்படுத்துவதில் இந்தியா முதன்மையாக இருக்க விரும்புகிறது. பாதுகாப்புவாதம் உலகளவில் பெரிய பிரச்னையாக உள்ளது. அதற்கான தீர்வு காணுவதில் இந்தியா தீவிரமாக உள்ளது” என்றார்.
உலகப் பொருளாதார மன்ற உச்சி மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட வங்கியாளர்களையும், தலைமைச் செயலதிகாரிகளையும், நிதியாளர்களையும், முதலீட்டாளர்களையும் சுரேஷ் பிரபு சந்தித்துப் பேசியுள்ளார். முன்னதாகப் பிரதமர் நரேந்திர மோடி உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நாடு எதிர்கொள்ள வேண்டிய மூன்று சவால்கள் குறித்துப் பேசியிருந்தார். மேலும், நாட்டை முன்னேற்றும் ஊக்குவிப்புக் கொள்கைகள் குறித்தும் பட்டியலிட்டிருந்தார். அதிக முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம், வர்த்தக வளர்ச்சியைப் பெருக்கவும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கவும் இயலும்; உள்கட்டமைப்பு, உற்பத்தித் துறை, சேவைகள் துறை, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் கூடுதலாக முதலீடுகள் தேவைப்படுகிறது என்று பேசியிருந்தார்.