தமிழர்களுக்காகத் தனிச் சட்டம் இயற்ற முடியாது!


எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்காகத் தனிச் சட்டம் இயற்ற முடியாது என்று இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (ஜனவரி 27) தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லை தாண்டி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களுக்கு ரூபாய் 40 லட்சம் முதல் 15 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் விதமாகச் சட்டம் இயற்றியது.
இதனைத் தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு கட்சிகளும் எதிர்த்து வந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "இலங்கை அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சட்டத்தில் மாற்றம் கொண்டு வரக் கோரி இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும்" என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கைக் கடல் தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, "இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமிழக மீனவர்களுக்காகப் புதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட மாட்டாது" என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசும்போது, "இலங்கையில் கொண்டு வந்துள்ள புதிய மீன்பிடிச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவதை விடுத்து, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருப்பதே சிறப்பானதாக இருக்கும்" என்றும் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.