மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: துயரத்திலிருந்து பிறந்த பேரன்பு!

சிறப்புக் கட்டுரை: துயரத்திலிருந்து பிறந்த பேரன்பு!

முத்துப்பாண்டி யோகானந்த்

வழக்கமாக கலை, விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பிரபலமான ஒருவருக்குப் பத்ம விருது கிடைத்தால், ஊடக வெளிச்சம் அவர் மீது குவிவது இயல்பு. ஆனால் சுபாஷினி மிஸ்திரி போன்ற பெண்ணுக்குக் கிடைத்துள்ள விருது சாதாரண சாதனைகளுக்குள் அடங்காது. எனவே சாதாரணப் பாராட்டும் அதற்குப் போதாது. ஒரு சாதாரணப் பெண்ணாகப் பிறந்து பல அரிய சாதனைகளால் சிகரம் தொட்டவர் சுபாஷினி மிஸ்திரி.

வறுமை பிடுங்கித் தின்னும் இளமைப் பருவம். மருத்துவம் பார்க்கக் காசில்லாமல் கணவனைப் பறிகொடுத்த துயரம் ஆகியவற்றை அனுபவித்த ஒரு சாதாரணப் பெண் என்ன செய்வார்? பெரும்பாலும் இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை உடைந்து நொறுங்கும். அல்லது யாருடைய உதவியாலோ தன்னுடைய முயற்சியாலோ மெல்ல மீண்டு வருவார். ஆனால் சுபாஷினி செய்தது வேறு. அதுதான் அவரை இன்று இந்த உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதியன்று கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அந்த வகையில் நேற்று (ஜனவரி 26) மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷினி மிஸ்திரி அவர்களுக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவ்விருதிற்கென சுபாஷினி எதையும் தனியாகச் செய்யவில்லை. தன்னைப் போன்ற ஏழைகளின் மனநிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உதவ இவர் மேற்கொண்ட ஒரு முயற்சியே சுபாஷினிக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்துள்ளது.

இளமையில் வறுமை

மேற்கு கொல்கத்தாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குல்வா என்னுமிடத்தில் 1943ஆம் ஆண்டு ஒரு விவசாயத் தொழிலாளியின் மகளாகப் பிறந்தவர் சுபாஷினி மிஸ்திரி. இவருடன் சேர்த்து குடும்பத்தில் 14 குழந்தைகள். மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி காரணமாக இவர்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பது சிரமமாக இருந்தது. இதனால் சுபாஷினியின் தாயார், கோயில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுக்கத் தொடங்கினார். பசி, பட்டினி காரணமாக ஏழு குழந்தைகள் இறந்தன.

அவரது பெற்றோர், 12ஆவது வயதில் சுபாஷினியை சந்திரா என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். ஆனால் அதன் பிறகும் சுபாஷினியின் வாழ்வில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வறுமையின் தாக்கம் அப்படியேதான் இருந்தது. சுபாஷினியின் கணவர் சந்திரா ஒரு விவசாயி. அவரது மாத வருமானம் ரூ. 200 மட்டுமே. இருப்பினும் சபாஷினி மனம் தளராமல் அக்கம்பக்கத்தில் வீட்டு வேலை செய்து வாழ்க்கை நடத்திவந்தார். ஆனால் அதுவும் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

ஒருநாள் சந்திரா வயிற்றுவலியால் துடிக்க, அவரை சுபாஷினி டோல்லிகுங்கே பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இவரது நோயின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர்கள், இவர்களிடம் வசதியில்லை என்பதை உணர்ந்து, சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை இலவசம் என்ற சட்டம் இருந்தாலும், அங்கு சிகிச்சை பெறப் பணமோ அல்லது சிபாரிசுக் கடிதமோ தேவைப்பட்டது. இதில் எதுவும் இல்லாத சந்திராவின் உயிர், மருத்துமனையிலேயே பிரிந்தது. கணவரின் இழப்பு சுபாஷினியின் வாழ்வில் வடுவாக மாறியது.

சோகத்தை மீறிய பரிவு

சுபாஷினிக்கு நான்கு குழந்தைகள். வசதி, கல்வி, நிரந்தர வேலை இவை எதுவும் இல்லாமல் கணவனை இழந்து, தனி ஆளாகக் குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் சவாலை உணர்ந்தார் சுபாஷினி. இவரது குடும்பத்தாரோ, சகோதரர்களோ இவருக்கு உதவ முன்வரும் நிலையில் இல்லை. இதற்கிடையே சுபாஷினி, தனக்கு நேர்ந்த கொடுமை இனி வேறு எவருக்கும் நேரக் கூடாது; தன்னைப் போன்று சிகிச்சைக்குப் பணமின்றித் தவிக்கும் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க மருத்துவமனை ஒன்று கட்ட வேண்டும் என்று தனக்குள்ளே உறுதிமொழி எடுத்தார்.

அவர் மகன் அஜய் கல்வியில் ஆர்வம் உள்ளவர். அவரைக் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துவிட்டு மற்ற மூன்று குழந்தைகளையும் தன்னுடன் வைத்துக்கொண்டார். பின்னர் தனக்குத் தெரிந்த வேலையான வீட்டு வேலை, ஷூ பாலிஷ், தோட்ட வேலை, கட்டடவேலை போன்ற பணிகளைச் செய்யத் தொடங்கினார். இதன் மூலம் மாதம் ரூ.100 வரை சம்பாதித்து குடும்பத்தை நடத்தத் தொடங்கினார். பின்னர் தாப்பா கிராமத்திலிருந்து காய்கறிகளை வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினார். அதில் நல்ல லாபம் கிடைக்கவே, குடும்பத்துடன் தாப்பா கிராமத்திற்குக் குடிபெயர்ந்தார். கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸுக்கு அருகாமையில் உள்ள பாலத்தின் அருகே காய்கறி விற்பனை மையம் ஒன்றைத் தொடங்கினார்.

நாட்கள் உருண்டோடின. 20 ஆண்டுகள் தன் கடின உழைப்பினால் சேமித்த பணத்தைக் கொண்டு தன் சொந்த ஊரில் மருத்துவமனை ஒன்றைக் கட்ட முடிவெடுத்தார். 1992ஆம் ஆண்டு ஹான்ஸ்புகுர் கிராமத்தில் ரூ.10 ஆயிரம் கொடுத்து ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கினார். பின்னர் அங்குள்ள மக்களிடம் தன் திட்டத்தை விவரித்து, நிதி உதவி அளிக்குமாறு கேட்டார். நல்ல உள்ளம் கொண்ட பலர் இவரது முயற்சியைப் பாராட்டி, தங்களால் முடிந்த தொகையை அளித்தனர். ஒரு சிலர் பொருளாகவும் தரச் சம்மதித்தனர். இதனைக் கொண்டு 1993ஆம் ஆண்டு வெறும் 400 சதுரடியில் தற்காலிகக் கூரையின் கீழ் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார்.

பின்னர் ஒரு ஆட்டோ ரிக்ஷா மூலம் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில், இங்கு இலவச மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இவர்களின் சேவை மனப்பான்மையை உணர்ந்த டாக்டர் ரகுபதி சாட்டர்ஜி, உதவ முன்வந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் ஐந்து மருத்துவர்களும் உதவினர். இலவச சிகிச்சை தொடங்கிய முதல் நாளே 252 நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டது.

மெய்ப்பட்ட கனவு

மழைக் காலங்களில் தற்காலிக ஓடுகளின் ஒழுகலுக்கு மத்தியில் நோயாளிகள் சிரமத்துடன் சிகிச்சை பெற்றுவந்தனர். இதனால் 1000 சதுரடி பரப்பளவில் கான்க்ரீட் கூரையில் மருத்துவமனையைப் புதுப்பிக்கத் தயாராகினர். இது தொடர்பாக சுபாஷினி தன் மகன் அஜய்யின் உதவியுடன் அப்பகுதி எம்.பி. மாலினி பட்டாச்சாரியாவைச் சந்தித்தபோது, ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்தாலும் பின்னர் இவர்களின் சேவை மனப்பான்மையை உணர்ந்து, முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார் மாலினி. இதனையடுத்து சுபாஷினியின் கனவுப்படி அங்கு கான்க்ரீட் கூரையுடன் மருத்துவமனை கட்டப்பட்டது. மேற்கு வங்க ஆளுநரை அழைத்து இந்த மருத்துவமனையைத் திறந்து வைத்தனர்.

அதே சமயம் படிப்பை முடித்த சுபாஷினியின் மகன் அஜய்யும் அதே மருத்துவமனையில் தனது இலவச சேவையைத் தொடங்கினார். அன்று மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, இன்று கார்டியாலஜி, இஎன்டி, யூரோலஜி, ஆங்காலஜி, நீரிழிவு, அறுவைச் சிகிச்சை ஆகிய துறைகளை உள்ளடக்கிய 9000 சதுரடி பரப்பளவு கொண்ட பெரிய மருத்துவமனையாக உருவெடுத்தது.

மருத்துவமனை வளர்ச்சியடைந்தாலும் சுபாஷினி, ஏழைகளுக்கு இலவச மருத்துவம் என்ற தன் கொள்கையின் மீது மாறாத தெளிவுகொண்டிருந்தார். மருத்துவமனையை இயக்கப் போதுமான வருவாய் இல்லாதபோதும் தன் கொள்கையின் மீது எந்த மாற்றமும் காட்டவில்லை. இன்றுவரை ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு ரூ.10 மட்டுமே வசூலிக்கின்றனர்.

அஜய், மருத்துவமனையைப் பார்த்துக்கொள்ள, சுபாஷினி பாலத்திற்கு அருகே உள்ள தனது காய்கறி கடையில் விற்பனை செய்துகொண்டு, அந்தப் பழைய வீட்டிலேயே வசித்துவந்தார். அவரது மற்ற பிள்ளைகள் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் முழங்கால் வலி காரணமாக சுபாஷினியால் காய்கறிக் கடையில் வேலைசெய்ய முடியவில்லை. அன்றிலிருந்து அவரைத் தன்னுடன் மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளித்து வருகிறார் அஜய். “இந்த மருத்துவமனைதான் எனக்கு எல்லாமே. எனது சொத்து, எனது சந்தோஷம் எல்லாமே இதுதான். இது 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக மாறிவிட்டால் நான் நிம்மதியாக இறந்துவிடுவேன்” என்ற அவரது கருத்து நம்மை நெகிழ வைக்கிறது.

புன்னகை ஒன்றே போதும்

சுபாஷினி நினைத்திருந்தால் அன்று தன் சேமிப்புத் தொகையைக் கொண்டு, பெரிய வீட்டில், இப்போது இருக்கும் வாழ்க்கையைவிட நல்ல நிலையில் வாழ்ந்திருக்கலாம். "பணம், நகை இருந்து என்ன பயன்? நாம் இறந்து போகும்போது நம்மிடம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. நோயாளிகளின் முகத்தில் சிரிப்பைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை" என்று பெருமையாகக் கூறுகிறார் சுபாஷினி.

அன்று தன் வாழ்வில் தனக்கு நேர்ந்த சோகம், இனி எவருக்கும் நேரக் கூடாது என்று, இவர் எடுத்த உறுதிமொழிக்குச் சான்றாக தன் வாழ்வையே அர்ப்பணித்த இவரைப் போன்ற ஒரு பெண்மணிக்கு இந்த விருதை வழங்குவதில் அந்த விருதே பெருமை கொள்ளும்!

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 27 ஜன 2018