நீட்: அரசு அக்கறையுடன் செயல்பட வேண்டும்!


‘நீர் தேர்வு குறித்த விவகாரத்தில் தமிழக அரசு அக்கறையோடு செயல்பட வேண்டும்’ என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று (ஜனவரி 26) விடுத்துள்ள அறிக்கையில், “ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால், ஏழை, எளியத் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு விழுங்கிக் கொண்டிருக்கிறது” என்று வேதனைத் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு கேள்வித்தாள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தயாரிக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். ஆனால், சிபிஎஸ்சி பாடத் திட்டத்தின்படியே கேள்வித்தாள் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், “தமிழகத்தில் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யும் முயற்சியிலோ அல்லது விலக்கு பெறும் முயற்சியிலோ அல்லது நீட் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் முயற்சியிலோ அல்லது மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு என்கிற நிலையை ஏற்படுத்தும் முயற்சியிலோ அரசு ஈடுபடாமல் இருக்கிறது” எனத் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.