மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

ஹமீத் அன்சாரி, அருணா ராய்க்கு காயிதே மில்லத் விருது!

ஹமீத் அன்சாரி, அருணா ராய்க்கு  காயிதே மில்லத் விருது!

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரிக்கும் சமூக செயற்பாட்டாளர் அருணா ராய்க்கும் காயிதே மில்லத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசத்துக்காக இணையில்லா தியாகங்கள் செய்தவர் காயிதே மில்லத் என்று மக்களால் கொண்டாடப்படுபவர் முஹமது இஸ்மாயில் சாஹிப். தேச நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் பாடுபட்ட அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பில் அவரது பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விருது வழங்கப்பட்டு வருகிறது.

முதல் விருது 2015ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நல்லகண்ணு, குஜராத் படுகொலைகளில் பாதிக்கப்பட்டோருக்காகப் போராடிவரும் சமூக நீதிப் போராளி தீஸ்தா சிதல்வாத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

2016ஆம் ஆண்டுக்கான விருது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப். சையத் ஷஹாபுத்தீனுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலர் என். சங்கரய்யாவுக்கும் வழங்கப்பட்டது.

2017ஆம் ஆண்டுக்கான விருது, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார், மணிப்பூரின் மனித உரிமைப் போராளி ஐரோம் சர்மிளா, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காந்தியவாதியுமான பி. முகமது இஸ்மாயில் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

2018ஆம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் டாக்டர் முஹம்மது ஹமீது அன்சாரி, அரசியல் சமூக செயல்பாட்டாளர் அருணாராய் ஆகியோருக்கு காயிதே மில்லத் வருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் இவர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

சமூக செயல்பாட்டாளர் அருணா ராய்

அருணா ராய் (மே 26, 1946) சென்னையில் பிறந்தவர். ஊழலுக்கு எதிராகவும் வெளிப்படையான அரசு நிர்வாகத்துக்காகவும் போராடிக்கொண்டிருப்பவர். டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திரப்பிரஸ்தா கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்தார். அதே கல்லூரியில் ஓராண்டு ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு எழுதி 1968இல் வெற்றிபெற்றார். 1974இல் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து அவர் விலகினார். அவர் கணவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமப்புற மேம்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார். அருணா ராய் அதில் இணைந்து சமூக சேவையிலும் ஆய்வுப் பணியிலும் இறங்கினார்.

அரசாங்கத்தின் செயல்பாடு வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டியதற்கும், அரசின் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்குக் கிடைப்பதற்குமான போராட்டங்களை அருணா ராய் நடத்தியுள்ளார். அரசாங்க ஆவணங்களை பொதுமக்கள் பரிசோதிப்பதற்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான சட்டமாக தகவல் உரிமைச் சட்டம் (RTI) வருவதற்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார். தொழிலாளர்கள் - விவசாயிகளின் வலிமைக்கான சங்கத்தின் தொடர் பிரச்சாரம் தேசிய அளவில் நடந்ததன் விளைவாக, 2000இல் ஒன்பது மாநிலங்களில் தகவல் உரிமைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. 2005இல் தேசிய அளவில் தகவல் உரிமைச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

வேலை செய்யும் உரிமை, உணவுக்கான உரிமை, அனைவருக்குமான ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகளுக்காகவும் அவர் போராடிவருகிறார். தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் (National Rural Employment Guarantee Act, 2005) உருவாவதற்கு அவரது போராட்டங்கள் காரணமாக இருந்தன. ஊழலை வெளிப்படுத்துபவர்களைப் பாதுகாக்கும் சட்டம், குறைகள் தீர்ப்புச் சட்டம் உள்ளிட்டவை அரசு நிர்வாகம் வெளிப்படையானதாக மாறுவதற்குத் தேவை என்றும் கோரி அவர் போராடிவருகிறார்.

முஹம்மது ஹமீத் அன்சாரி

இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக 2007 முதல் 2017 வரை இரண்டுமுறை தொடர்ந்து பணியாற்றியவர் முஹம்மது ஹமீத் அன்சாரி, இந்திய வெளியுறவுப் பணியில் (IFS) 1961இல் சேர்ந்தார். யுனைடெட் அரபு எமிரேட், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர்.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியத் தூதராக பல ஆண்டுகள் பணி புரிந்து சிக்கலான பிரச்சினைகளைத் திறமையாகக் கையாண்டு உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர். எழுத்தாளர், அறிஞர், ராஜதந்திரி என பன்முகத் திறன் படைத்தவர், மேற்காசிய விவகாரங்களில் புலமை படைத்தவர். 1984 இல் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் (2000-2002) பணியாற்றியவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தேசிய சிறுபான்மையோர் ஆணையத்தின் தலைவராக 2006இல் பணியாற்றினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ‘பல்வேறு சமூகங்களுக்கிடையில் நன்னம்பிக்கை ஏற்படுத்தும் நடைமுறைகளை உருவாக்குவதற்கான’ முனைப்புக் குழுவின் தலைவராகப் (2006) பணியாற்றியவர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 27 ஜன 2018