இந்தியன் 2: ஷங்கரின் வித்தியாச அறிவிப்பு!

ரஜினியின் 2.0 படத்தின் டீசர் குறித்த தகவலைப் பகிர்ந்துகொண்ட ஷங்கர் அடுத்ததாக கமலின் இந்தியன் 2 படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
கமல்- ஷங்கர் கூட்டணியில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். 1996ஆம் ஆண்டு வெளியான இப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 20 வருடங்களைக் கடந்துவிட்டது. இதில் சேனாதிபதி, சந்திரபோஸ் என்ற இரண்டு கேரக்டர்களில் கமல் நடித்திருந்தார். 70 வயதான சேனாதிபதி கேரக்டரில் ஊழலுக்கு எதிராகப் போராடும் சுதந்திரப் போராட்டத் தியாகியாக கமல்ஹாசன் நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் நடிக்கவுள்ளதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசியலில் கமல் தீவிரமாக இயங்கத் தொடங்கியிருப்பதால் இந்தப் படம் எடுக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இந்தியன் 2 படம் எடுப்பதை, அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘இந்தியன் 2’ என்று எழுதப்பட்டிருக்கும் ஹீலியம் பலூன் ஒன்றை தைவான் நாட்டில் தனது டீமுடம் ஷங்கர் பறக்கவிடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
2.0 படத்தை ஏப்ரலில் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஷங்கர் அந்தப் படத்திற்கான கிராஃபிக்ஸ் பணிகளில் வேகம் காட்டிவருகிறார். அந்தப் பணிகள் முடிந்ததும், மார்ச் மாதத்தில் கமலுடன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.