பத்ம விருதுகள்: உரிமையைக் காக்காத தமிழக அரசு!


அண்மைக் காலத்தில் இல்லாத அளவுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு மட்டுமே பத்ம விருதுகள் கிடைத்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது, இந்தியா முழுவதற்கும் மொத்தம் மூன்று பத்மவிபூஷண் விருதுகளையும், ஒன்பது பத்மபூஷண் விருதுகளையும், 73 பத்மஸ்ரீ விருதுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. விருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதும், தொல்லியல் ஆய்வாளர் நாகசாமிக்கு பத்மபூஷண் விருதும், மதுரையைச் சேர்ந்த ராஜகோபால் வாசுதேவன், நாட்டுப்புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், கோவையைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாள், கிண்டி பாம்பு பண்ணையை நிறுவிய ராமுலஸ் விட்டேகர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த் நிலையில் இதுகுறித்து ராமதாஸ் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் குடிமக்களுக்கான இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா, பத்மபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொல்லியல் வல்லுநர் நாகசாமி ஆகியோருக்கு வாழ்த்துகள்!
உலகின் தலைசிறந்த இசைக் கலைஞர் இளையராஜா பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது.
பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற இசைக்கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், சென்னை பாம்பு பண்ணை நிறுவனர் ரோமுலஸ் விட்டேகர், பிளாஸ்டிக் சாலை கண்டுபிடிப்பாளர் ராஜகோபாலன் வாசுதேவன், பழம்பெரும் யோகா ஆசிரியை 98 வயது ஞானம்மாள் ஆகியோருக்கு வாழ்த்துகள்!
அண்மைக் காலத்தில் இல்லாத வகையில் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகக் குறைந்த அளவில் ஆறு விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இதிலும் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கத் தவறிய பினாமி அரசுக்குக் கண்டனங்கள்.”