மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

சிறப்புச் செய்தி: இவர்தான் புதுக்கோட்டை எம்.பி!

சிறப்புச் செய்தி: இவர்தான் புதுக்கோட்டை எம்.பி!

69ஆவது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தக் குடியரசு தினத்திலாவது நமது எம்.பி யார் என்று கண்டுபிடித்து விடலாம் என்று காத்திருந்த புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த ஏமாற்றத்துக்குப் பின்னால் உள்ள சோகக் கதையை கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

நீண்ட நெடுங்காலமாகப் புதுக்கோட்டை மாவட்டமாகவும், நாடாளுமன்றத் தொகுதியாகவும் திகழ்ந்துவந்தது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வரை புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி நீண்டு பரவியிருந்தது. இவ்வளவு பெரிய புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி கடந்த 2009 தேர்தலோடு அடியோடு ஒழிக்கப்பட்டது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் புதுக்கோட்டை தொகுதி காணாமல் போனது. இந்த நாடாளுமன்றத் தொகுதி நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், கரூர் ஆகிய நான்கு எம்.பி தொகுதிகளோடும் பிய்த்துப் போடப்பட்டது. இதற்குக் காரணம், அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆகியோர்தான் என்று அப்போதே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அவர்கள் இதை மறுத்தார்கள். புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தங்களுக்கு ஒருங்கிணைந்த புதுக்கோட்டை தொகுதியே வேண்டும் என்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால் அரசியல்வாதிகளோ, ‘இனி உங்களுக்கு ஒன்றுக்கு நான்கு எம்.பிக்கள் வரப் போகிறார்கள். இதனால் நான்கு எம்.பிக்களின் நலத்திட்ட நிதியும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும்’ என்று மக்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். ஆனால், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி இவ்வாறு நான்காகக் கூறு போடப்பட்டதை எதிர்த்து 2009 நாடாளுமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் முழுதும் ’49 ஓ’வுக்கு சுமார் பத்தாயிரம் ஓட்டுகள் விழுந்தன. அதுதான் இப்போது நோட்டா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

2009 முதல் இப்போது வரை புதுக்கோட்டையில் இருந்த எம்.பி அலுவலகமும் செயல்படுவதில்லை. இவ்வளவு பெரிய மாவட்டத்தில் இருந்து எம்.பியான யாரும் இந்த மாவட்டத்தில் அலுவலகம் வைத்திருக்கவில்லை. கரூர், சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் பகுதிகளிலேயே எம்.பி. அலுவலகம் வைத்துள்ளதால் புதுக்கோட்டைக்குள் யாரும் எட்டிப்பார்ப்பதுகூட இல்லை.

இந்த நிலையில்தான் குடியரசு தின விழா நேற்று (ஜனவரி 26) புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப் படை மைதானத்தில் தொடங்கியது. கலெக்டர், மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஓர் எம்.பி அல்ல நான்கு எம்.பிக்கள் இருக்கிறார்களே... நான்கு பேரில் அனைவரும் வராவிட்டாலும், மூன்று பேராவது அல்லது இரண்டு பேராவது வருவார்கள் என்று நினைத்து பெரிய சோபா செட் ஒன்றை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கொண்டுவந்து போட்டனர். அதில் எம்.பி என்று எழுதி ஒட்டியும் வைத்தனர்.

திருச்சி குமார், கரூர் தம்பிதுரை, சிவகங்கை செந்தில்நாதன், ராமநாதபுரம் அன்வர் ராஜா ஆகிய நான்கு எம்.பிக்களும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றவர்கள். இதில் புதுக்கோட்டை நகரத்தை உள்ளடக்கிய பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார். அவராவது வருவார் என்று எதிர்பார்த்தனர் மக்கள்.

அந்த குஷன் சோபா செட்டை பார்த்த கட்சிக்கார்கள் சிலர் அதில் போய் உட்கார முனைந்தனர். அப்போது பி.ஆர்.ஓ சீனிவாசனும் அவரது உதவியாளர்களும், ‘அதுல உட்காராதீங்க. அது எம்.பி சீட்’ என்று விரட்டாத குறையாகத் தடுத்து அனுப்பினர்.

விழாவும் ஆரம்பித்தது. ஆனால், நான்கு எம்.பிக்களில் யாரும் வரவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஒரு சிறுமி, ‘நல்லா பஞ்சு மெத்த போட்டுருக்காங்க. உக்காந்து பார்ப்போம்’ என்று சொல்லி பி.ஆர்.ஓவையும் மீறி ஓடிப்போய் அந்த எம்.பி சோபாவில் உட்கார்ந்துவிட்டார். இந்தப் பிரச்னையின் பின்னணி அறிந்த பத்திரிகையாளர்கள், ‘நல்ல வேளைம்மா... நீயாவது எம்.பியாக வந்து உக்காந்தியே’ என்று அந்தச் சிறுமியை வாழ்த்தி புகைப்படமும் எடுத்தார்கள்.

அந்த நேரம் இது, சிலரைச் சிரிக்க வைத்தது என்றாலும் ஒட்டுமொத்த புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கோபக் கேள்வியாக, ‘எங்கள் எம்.பி யார்?’ என்ற கேள்வியையே கேட்பதாக அமைந்தது இந்தக் காட்சி.

நான்கு எம்.பிக்களே... உங்களைச் செங்கோட்டைக்கு அனுப்பி வைத்த புதுக்கோட்டையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன்!

- ஆரா

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 27 ஜன 2018