மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

விமர்சனம்: பாகமதி!

விமர்சனம்: பாகமதி!

‘அமானுஷ்யத் திரைப்படங்கள் எல்லாம், அமானுஷ்யத்தைப் பற்றி மட்டுமே பேசுகின்றனவா? திகில் சம்பவங்களுடன், பிரமிக்க வைக்கும் கோட்டையும் கொடூரமான பேய்களும் மட்டுமே ரசிகர்களை இரண்டு மணி நேரம் தியேட்டரில் பயமுறுத்தி மகிழ்வித்துவிடுமா?’ என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியிருக்கிறது அனுஷ்கா நடித்து வெளியாகியுள்ள ‘பாகமதி’ திரைப்படம்.

படத்தின் தொடக்கத்திலேயே, அதிலும் குளோஸ்-அப் ஷாட்களில் தடுமாறிப்போகும் உச்சரிப்புடன் ஒத்துப்போகாத வசனங்கள், இது டப்பிங் படம் என்பதை உணரவைக்கின்றன. தமிழகத்தின் முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் சிபிஐக்கு ஒரு ரகசிய வேலையைக் கொடுக்கின்றனர். ஆளும்கட்சியின் அமைச்சரான ஜெயராம் எப்படியாவது கைது செய்யப்பட வேண்டும் என்பதுதான் அது. நாட்டில் நடைபெறும் சிலைக் கடத்தல் சம்பவங்களில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் பதவி விலகுவதோடு அரசியல் வாழ்விலிருந்தே ஒதுங்கிவிடுவேன் ஜெயராம் அறிவிப்பது ஆட்சியாளர்களுக்குச் சங்கடத்தை உருவாக்குகிறது. அவர் பதவி விலகினால், மக்களின் ஆதரவோடு முதலமைச்சராகிவிடும் வாய்ப்பு இருப்பதால் சிலை திருட்டு வழக்கில் அவரைச் சிக்கவைக்கக் கட்டளையிடுகிறார்கள்.

அமைச்சர் என்பதால் நேரடியாகக் கைவைக்காமல், அவருக்குப் பல வருடங்களாக செகரெட்ரியாகப் பணிபுரிந்து தற்போது சிறையில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுஷ்காவிடம் விசாரணை நடத்துகிறார்கள். சட்டத்துக்குப் புறம்பான விசாரணை என்பதால், மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து விசாரிக்க ஏற்பாடு செய்கிறார்கள். யாருடைய தம்பியைக் கொலை செய்துவிட்டு அனுஷ்கா சிறைக்குச் சென்றாரோ அந்த போலீஸ்காரரையே நியமிக்கிறார் சிபிஐ அதிகாரியாக வரும் ஆஷா சரத்.

மக்கள் நடமாட்டமில்லாத பாகமதி பங்களாவுக்கு அனுஷ்கா கடத்தப்படுகிறார். அத்தனை பெரிய பங்களாவில் தனியாகத் தங்கவைக்கப்படும் அனுஷ்காவைச் சில அமானுஷ்ய சக்திகள் அரட்டுகின்றன. அனுஷ்காவுக்கு நடைபெறும் அமானுஷ்யங்களின் தொந்தரவு அதிகமாகிக்கொண்டே செல்கிறது. ஒருநாள் பாகமதியாகவே மாறி அராஜகம் செய்கிறார்.

அனுஷ்காவுக்கு என்னதான் ஆயிற்று, ஜெயராம் கைது செய்யப்படுவாரா, சிலைகளைக் கடத்துவது யார் என்ற கேள்விகளுக்கான விடைகள் படத்தில்.

அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி போலவே இன்னொரு படமா என யோசித்தாலும், அனுஷ்காவின் ஆளுமைக்காகத் தியேட்டருக்குச் செல்பவர்களை ஏமாற்றாத வகையில் ஒரு கேரக்டரைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஷோக். திகில், காமெடி, அரசியல் த்ரில்லர் ஆகியவற்றை ரசிக்கும் விதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார். ஆஷா அனுஷ்காவை விசாரனை செய்யும் இடங்கள் நச்சென்று இருக்கின்றன. பேய்க் காட்சிகளில் காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் கலை இயக்கமும் அனுஷ்காவின் நடிப்பும் சேர்ந்து மிரட்டி எடுக்கின்றன. பேய் குறித்த கதையை ஃபிளாஷ்பேக்கில் அல்லாமல் கதைப்போக்கிலேயே புரியவைத்திருப்பது பாராட்டத்தக்கது.

பேயாக வரும் பாகமதி கதை வெளிப்படும் விதமும் புலனாய்வில் மர்ம முடிச்சுக்கள் அவிழும் விதமும் இரண்டும் இணையும் புள்ளி திரைக்கதையின் சிறப்பம்சம்.

பாகமதி... என்று அடிக்குரலில் பேசிக்கொண்டே அனுஷ்கா தன் முகவாயைத் தானே உயர்த்திக் காட்டும் தோரணையில் பார்ப்பவர்களுக்குள் ஓர் அதிர்வு பாயத்தான் செய்கிறது. காதல் என்றால் பசுவாகவும், துரோகம் என்றால் புலியாகவும் அவர் கொடுக்கும் ஆக் ஷன்களும் ரியாக் ஷன்களும் கிளாசிக். பத்துக்கும் மேற்பட்ட மனநிலைகளில் வருகிறார். ஒவ்வொன்றிலும் தனித்துவத்துடன் தன்னை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார். நாயகியை மையமாகக்கொண்ட கதையை உருவாக்கி வெற்றி பெறக்கூடிய இரண்டு தென்னிந்திய நடிகைகளில் ஒருவராகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டிருப்பதற்குப் பாராட்டுகள்.

ஜெயராம், ஆஷா ஆகியோரின் நடிப்பு கச்சிதம். மதியின் ஒளிப்பதிவு நுணுக்கமான வேலைகளைச் செய்திருக்கிறது. கோயில் வாசலில் கிடக்கும் குழந்தைக்குப் பின்னால் தெரியும் தெய்வ ரூபத்தைக்கூட பயமுறுத்தக்கூடிய விதத்தில் படமாக்கியிருக்கிறார். கேமரா வைக்கப்பட்டிருக்கும் கோணத்திலேயே ‘ஏதோ நடக்கப்போகுது’ என்ற உள்ளுணர்வை உருவாக்குவது அத்தனை எளிதானதல்ல. எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். எடிட்டிங் கொஞ்சம் பிசகியிருந்தாலும் கதைக்கு நடுவிலேயே சுபம் போட்டிருப்பார்கள் ரசிகர்கள்.

இசையமைப்பாளர் தமனுக்குத் தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். பாகமதி தீம் பாடலுக்கு உழைத்த அளவுக்கு இன்னொரு தீம் பாடலிலும் உழைத்திருக்கலாம். ஆனால், அலாவுதீன் அனிமேஷன் நாடகத்தின் டைட்டில் பாடல் இசையை சுட்டு, பட்டி-டிங்கரிங் பார்த்திருப்பதை மன்னிக்கவே முடியாது. இதைத் தாண்டியும் இசை அவ்வளவாக அதன் பங்கைச் செலுத்தவில்லை. படத்தில் வரும் பேயைப் பார்த்துக்கொண்டே பின்னணி இசை சேர்த்தபோது, பயத்தில் அனைத்து இசைக் கருவிகளையும் தள்ளிவிட்டு ஓடி ஓடி இசையமைத்ததுபோல தடபுடலாகவே இருக்கிறது.

இயக்குநர் அஷோக் திரைக்கதையில் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். எங்கு முடிப்பது என்று முடிவெடுக்க முடியாத அளவுக்கு மெனக்கெடல். இதனால், க்ளைமாக்ஸை அவசரமாக முடிக்கிறார். பேய், புலனாய்வு, ஜெயராமுக்கும் அனுஷ்காவுக்கும் இடையே நடக்கும் ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் திரைக்கதை தன் ஜீவனைத் வைத்திருக்கிறது. பேய்க் காட்சிகள் அசத்துமளவுக்கு ஒப்பந்தங்கள் நம்மைக் கவரவில்லை. படத்தின் மர்ம முடிச்சுக்கள் அவிழும்போது எல்லாக் கேள்விகளுக்கும் திருப்திகரமான பதில்கள் கிடைத்ததாகச் சொல்ல முடியவில்லை. க்ளைமாக்ஸை நெருங்கும் காட்சிகளில் கூடுதல் தெளிவும் வலுவும் இருந்திருக்கலாம்.

துருத்திக்கொண்டிருக்கும் தவறுகளைச் சாதகமாக்கித் திரைக்கதையின் ஓட்டைகளை அடைப்பது ஒருவகை என்றால், அஷோக் போல வேண்டுமென்றே சில காட்சிகளை ஒளித்துவைத்து அதில் ட்விஸ்ட் வைப்பது இன்னொருவகை. அஷோக் இரண்டாவது வகையைப் பின்பற்றுகிறார்.

பேயை வைத்தும் அரசியல் செய்யலாம் என்பதற்குச் சிறந்த உதாரணம் பாகமதி.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 27 ஜன 2018