மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: மோடியின் தோல்வியுற்ற திட்டங்கள்!

சிறப்புக் கட்டுரை: மோடியின் தோல்வியுற்ற திட்டங்கள்!

குர்தீப் சாப்பல்

பிரதமர் நரேந்திர மோடியால் நான் புண்படுத்தப்படுவதாக உணர்கிறேன். அண்மையில் மோடி, பகோடா விற்பவர்கூட ஒரு நாளைக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதாகக் கூறியுள்ளார். மோடி இந்த வகை தொழில்களை ஊக்குவித்தது முத்ரா கடன் திட்டத்தின் வெற்றி எனக் கொண்டாடுகிறார்.

ஒரு நாளைக்கு 200 ரூபாய் ஊதியம் என்பதில் கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை. இந்த ஊதியம் என்பது மிகவும் அற்பமான ஒன்று. சும்மா இருப்பதற்குப் பதிலாக 200 ரூபாய் வருவாய் என்று வேண்டுமானால் கொள்ளலாம். ஆனால், இதையும் பட்டியலில் இணைத்து வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது போன்ற தோற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்திக்கொள்கிறது. ஆனால், ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கு இந்த ஊதியம் நிச்சயமாகப் போதுமானதாக இருக்காது.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் மூன்று ஆண்டு திட்டத்தை செயல்படுத்தி முக்கிய கவலையாக உருவெடுத்துள்ள வேலைவாய்ப்பின்மைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியிருந்தது. இது நாட்டில் வேலைவாய்ப்பின்மை கடுமையாக இருப்பதையும், நாடு எதிர்கொண்டிருக்கிற முக்கிய பிரச்னைகளில் இதுவும் ஒன்று என்பதும் உறுதியாகிறது. அதேசமயம் வேலைவாய்ப்பை அதிகளவில் உருவாக்க என்ன தேவை, அதிக ஊதியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பனவற்றுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது. இதற்குப் பிரதமர் உரிய முக்கியத்துவம் அளிப்பார் என்றும் நிதி ஆயோக் கூறியுள்ளது. பிரதமர் மோடிதான் நிதி ஆயோக் அமைப்பின் தலைவராகவுள்ளார்.

முத்ரா திட்டத்தின் மூலம் பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு கடன் நிறுவனங்கள் தொழில் கடனை வழங்குகின்றன. இந்தக் கடன் திட்டத்தில் ரூ.10 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. ஆனால், 90 சதவிகிதம் கடன் பெறுபவர்களுக்கு சிசு திட்டத்தில்தான் வழங்கப்படுகிறது. அதிலும் ரூ.50,000 வரையில்தான் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கிட்டத்தட்ட 9 கோடிப் பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேலைவாய்ப்பின்மை முன்பை விட தற்போது அதிகமாக உள்ளது.

2015ஆம் ஆண்டு மார்ச் முதல் 2017 மார்ச் வரையில் ஐந்து வங்கிகளில் 47 சதவிகிதம் செயல்படாக் கல்விக் கடன் அதிகரித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை கூறுகிறது. இது இதற்கு முந்தைய காலங்களை விடக் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். கல்விக் கடன் செலுத்துவதில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது என்பது மிக மோசமான வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஆளும் அரசு கடந்த மூன்றாண்டுகளில் அளித்துள்ளது என்பதையே காட்டுகிறது. இதனால் படித்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட கடன் முறையாக வங்கிகளுக்கு வராமல் இருமடங்கு வரை தேங்கியுள்ளது. இளைஞர்களுக்கு வேலை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.

மேலும், படித்த முடித்த பட்டதாரிகளில் எவ்வளவு பேர் முத்ரா கடன் திட்டத்தில் தொழில் தொடங்கக் கடன் பெற்றார்கள் என்று அறிய எனக்கு ஆர்வமாக உள்ளது. அரசு இதுகுறித்து அறிக்கைகளை வெளியிட வேண்டிய தேவையுள்ளது. மேலும், எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் அரசாங்கம் அளிக்க வேண்டும். குறைந்தபட்ச முத்ரா கடனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

மத்திய மோடி அரசு அதிக அளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்காகப் பல்வேறு கொள்கை முடிவுகளை வகுத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளாக ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேன்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா ஆகியவற்றைச் செயல்படுத்தியது. இந்தத் திட்டங்களின் மூலம் நாட்டு மக்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை அளித்திருந்தது. இன்னும் சில நாள்களில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நடைபெறவுள்ளது. இந்நேரத்தில் வேலைவாய்ப்பின்மையைப் போக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்டார்ட் அப் இந்தியா மோடி அரசின் தலையாயக் கொள்கைகளில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தைக் கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவிட 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய நாள் வரை இத்திட்டத்தை 75 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளன. இந்த நிறுவனங்களின் நிதிப் பயன்பாட்டு மதிப்பு ரூ.605 கோடி மட்டுமே.

மத்திய அரசின் ஸ்டார்ட் அப் திட்டம் மட்டுமின்றி, தனியார் துணிகர முதலீட்டு நிறுவனங்களின் மதிப்பும் கடந்த மூன்று ஆண்டுகளில் சரிவைக் கண்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் 8,000 ஆக இருந்த புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 800ஆக சரிந்துவிட்டது. ஸ்டார்ட் அப் டிரேக்சன் நிறுவனம் 2014-16 வரையிலான காலத்தில் 1,700 நிறுவனங்களுக்குக் கடனுதவி வழங்கியிருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தில் 482 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே கடன் பெற்றுள்ளன. அதேசமயம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலீடானது 4.6 பில்லியன் டாலரிலிருந்து 8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் பேடிஎம் ஆகிய இரண்டு நிறுவனங்களில் மட்டும் முதலீட்டு மதிப்பு 4.4 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்திய ஸ்டார்ட் அப் துறையின் வளர்ச்சி அபரிமிதமானது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் பேடிஎம், அர்பன் லேடர், பாலிசி பஜார், ஜஸ்ட் டயல், பிக் பேஸ்கட், ரெட்பஸ் மற்றும் ஜோமாடோ ஆகிய இன்றைய முன்னணி நிறுவனங்கள் பல உருவாகின.

ஸ்டேன்ட் அப் இந்தியா பாஜக அரசின் மற்றொரு கொள்கைத் திட்டம் போல கொண்டுவரப்பட்டது. பிரதமர் மோடி 2015ஆம் ஆண்டில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியின (எஸ்.சி. மற்றும் எஸ்.டி) பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதாகும். இவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் தொழில்முனைவுக்கு ஒரு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வழங்கப்படும். லட்சக்கணக்கான வங்கிகள் மற்றும் 17,000 உதவி மையங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற எஸ்.சி மற்றும் எஸ்.டி பெண்களின் எண்ணிக்கை 35,000 மட்டுமே ஆகும். இவர்கள் பெற்ற கடன் தொகையின் மதிப்பு ரூ.5,658 கோடி மட்டுமே. ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு எஸ்.சி / எஸ்.டி பெண் தொழில் முனைவோர்கூட இந்தத் திட்டத்தால் பயன்பெறவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

நாட்டின் உற்பத்தித் துறையை வளர்க்க மேக் இன் இந்தியா திட்டத்தை பாஜக அரசு பெருமிதத்தோடு அறிவித்தது. மற்ற இரண்டு திட்டங்களை விட இந்தத் திட்டத்துக்கு பெரும் பிரசாரத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்தத் திட்டத்தின் இலக்கே உற்பத்தித் துறையின் வளர்ச்சியை 16 சதவிகிதம் முதல் 25 சதவிகிதமாக அதிகரிப்பதுதான். மேலும், இத்திட்டத்தின் மூலம் தனியார் துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக உற்பத்தித் துறையின் வளர்ச்சி பெருமளவில் வளரவில்லை. மாறாக 3.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் மட்டுமே நடந்தன. அவற்றிலும் பல இன்னமும் முடிவடையாமல் நீடித்துள்ளன.

உற்பத்தித் துறையின் ஜிடிபி மதிப்பு 2017 ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.5,355.42 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு இரண்டாம் காலாண்டில் ரூ.5,131.39 பில்லியன் ரூபாயாக இருந்தது. இதில் மொத்த உற்பத்தியில் 25 சதவிகித உற்பத்தி முடங்கியுள்ளது. செப்டம்பர் 2017ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் முடங்கியிருந்த ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் மதிப்பு ரூ.13.22 லட்சம் கோடியாகும். பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டியும்தான் உற்பத்தித் துறையின் முடக்கத்துக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

இந்தத் திட்டங்களின் தோல்வி பிரதமரை இவற்றிலிருந்து மீண்டுவர மாற்று இலக்கு நோக்கித் தள்ளுகிறது. இந்தக் கவலைகள் குறித்து எந்தவொரு வழியையும் இந்த அரசு கண்டுபிடிக்கவில்லை. தனிநபர் ஊதிய உயர்வை அளித்தாலும், அது வேலையற்றவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. பணமதிப்பழிப்பு, சர்வதேச பொருளாதார அழுத்தம், உற்பத்தித் துறை முடக்கம், வேளாண் துறை வளர்ச்சியில் பின்னடைவு என இப்படிப்பட்ட சூழலில் கிடைக்கும் எந்த வருமானத்தையும் தாங்கிக்கொண்டு உணவு உண்ணுவதே ஆறுதலான ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால், பிரதமர் இத்தகைய வளர்ச்சியைக்கொண்டு பெருமைக்கொள்வது அர்த்தமற்றது.

வேலைவாய்ப்பு என்பது சமூக மற்றும் குடும்பப் பொருளாதாரச் செலவுகள், சுகாதாரப் பிரச்னைகள் மற்றும் கல்வி பாதிப்புகள் போன்ற பலவற்றோடு தொடர்புடையது. பிரதமர் அரசாங்கத்தின் தலைவராக இதை ஒருபோதும் அணுகவில்லை என்பது நமக்குப் புரிகிறது. அவரது பார்வையில் பொருளாதாரச் செலவுகள் குறித்த வேலைவாய்ப்பின்மை பற்றியும் அறிய வேண்டும். எனவே, முத்ரா திட்டத்தை ஒருபோதும் வெற்றிகரமான திட்டமாகக் கருத முடியாது. பகோடா விற்பதன் மூலம் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதன் மூலம் மகிழ்ச்சியோடு வாழ முடியும் என்று ஒருபோதும் கூற இயலாது.

நன்றி: தி வயர்

தமிழில்: பிரகாசு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 27 ஜன 2018