மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

அசோக் சக்ரா: கண் கலங்கிய குடியரசுத் தலைவர்!

அசோக் சக்ரா: கண் கலங்கிய குடியரசுத் தலைவர்!

தீவிரவாதிகளுடனான தாக்குதலின்போது வீர மரணமடைந்த கமாண்டோ ஜெ.பி. நிராலாவின் குடும்பத்தினரிடம் அசோக் சக்ரா விருதை வழங்கிய பின்னர் உணர்ச்சிப் பெருக்கில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லி செங்கோட்டையில் இன்று (ஜனவரி 26) காலை தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர், காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுண்டரில் வீர மரணமடைந்த இந்திய விமானப் படையைச் சேர்ந்த கமாண்டோ ஜோதி பிரகாஷ் நிராலாவின் மனைவி சுஷ்மானந்த், தாயார் மாலதி தேவி ஆகியோரிடம் அசோக் சக்ரா விருதை வழங்கினார். அவர்கள் சோகத்துடன் அந்த விருதைப் பெற்றுக்கொண்டனர். இதைப் பார்த்ததும் உணர்ச்சிப் பெருக்கால் குடியரசுத் தலைவரும் கண் கலங்கி, தனது கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

பிரதமர் மோடி, குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னர் பிரகாஷ் ஜோதி நிராலாவின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

யார் இந்த நிராலா?

பிகாரின் ரோட்டாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி பிரகாஷ் நிராலா. 2005ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்த அவர், பின்னர் விமானப் படையின் கருடா பிரிவில் இடம்பெற்றார். 2017 நவம்பர் 18ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வடக்கில் உள்ள பன்டிப்போரா மாவட்டத்திற்குட்பட்ட சன்டர்கீர் கிராமத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் கிராமத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் கிராமத்துக்குச் செல்லும் நாற்புறச் சாலைகளையும் சுற்றி வளைத்தனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை நெருங்கி அவர்களைச் சரணடையுமாறு எச்சரித்தனர். எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கிகளால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் 6 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலில் நிராலாவும் வீர மரணமடைந்தார். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரருக்கு வழங்கப்படும் அசோக் சக்ரா விருது, மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. இந்த விருது இதுவரை இந்திய ராணுவ வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. தற்போது முதன்முறையாக இந்திய விமானப் படையைச் சேர்ந்த நிராலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018