மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

பத்மாவத்: பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

பத்மாவத்: பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக சில அமைப்பினர் வன்முறையில் இறங்குவதன் பின்னணியில் பாஜக இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் திரைப்படம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை பிரச்னைகள் தொடர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு ராஜஸ்தானில் நடந்த படப்பிடிப்பின்போது, இந்தத் திரைப்படம் ராஜபுத்திரர்களை அவமதிப்பதுபோல இருப்பதாகப் புரளி கிளம்பியது. இதையடுத்து, படப்பிடிப்புத் தளத்திலேயே வன்முறையில் ஈடுபட்டனர் சில அமைப்பினர். அதன்பிறகு, வேறிடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு எதிர்ப்புகளால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதை மீறி படம் வெளியிடத் தயாரானபோது ராஜஸ்தான், குஜராத், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்கள் பத்மாவத் படத்துக்குத் தடை விதித்தன. இதைக் கண்டித்தது உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் படம் வெளியாக அரசு எந்த தடையும் விதிக்கக் கூடாது என்றது. அதன்பிறகே, நேற்று (ஜனவரி 25) ‘பத்மாவத்’ வெளியானது.

வட இந்தியாவில் இந்தப் படம் திரையிட்டுள்ள பெரும்பாலான தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஆனாலும், கர்னி சேனா உள்ளிட்ட சில அமைப்புகள் படத்தை திரையிடவிடாமல் தியேட்டர்களில் கலவரம் செய்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பத்மாவத்துக்கு எதிரான வன்முறை அதிகளவில் உள்ளது.

குறிப்பாக, ஹரியானா மாநிலத்தில் குழந்தைகளின் பள்ளி வாகனமொன்று வன்முறையாளர்களால் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பத்மாவத்துக்கு எதிராக சில அமைப்புகள் கலவரத்தில் இறங்குவதற்கு, அம்மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜக அரசுகள் மறைமுகமாக உதவுவதாகக் குற்றம்சாட்டியுள்ளன எதிர்க்கட்சிகள். வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் மாநில அரசுகள் எடுக்கவில்லை என்றும் குறை கூறியுள்ளன.

ஹரியானாவில் குழந்தைகள் வாகனம் தாக்கப்பட்டது தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்முறையையும் வெறுப்புணர்வையும் பயன்படுத்தி, பாஜக ஒட்டுமொத்த இந்தியாவையும் கொளுந்துவிட்டு எரிய வைக்கிறது” என்று தெரிவித்துள்ளார். அரசியலில் ஆதாயம் பெறுவதற்காக, பாஜக இப்படிப்பட்ட வேலைகளை செய்துவருவதாக விமர்சித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

இதேபோல, பத்மாவத்துக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் பாஜக உள்ளதாகக் கூறியுள்ளார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். “ஒருபக்கம் பாஜக போராட்டம் நடத்துகிறது; மற்றொருபக்கம் அதைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது போல பாசாங்கு செய்கிறது. மாநில தலைநகரங்களில் போராட்டம் நடந்த பகுதிகளின் வீடியோ காட்சிகளை ஆய்வுசெய்தால், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018