மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

மமக புகார்: சங்கர மட வாசலில் கெடுபிடி தளர்வு!

மமக புகார்: சங்கர மட வாசலில் கெடுபிடி தளர்வு!

தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காத சர்ச்சை காஞ்சிபுரம் போக்குவரத்து வரை பாதித்துள்ளது. காஞ்சி சங்கர மடம் காஞ்சிபுரம் வேலூர் சாலையில் உள்ளது. இந்தச் சாலையில் போக்குவரத்து பொதுவாகவே அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதித்ததாகச் சொல்லிப் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் சங்கர மடத்தை முற்றுகையிட்டுவருகின்றன. நேற்று முன் தினம் காஞ்சி மக்கள் மன்றம், நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற பல அமைப்புகள் காஞ்சி சங்கர மடத்தை முற்றுகையிட வந்தன. அதனால் காஞ்சி மடத்தைச் சுற்றி முன்னூறு போலீஸார் குவிக்கப்பட்டனர். மடத்து வாசலிலும் அருகிலும் தடுப்புகள் போடப்பட்டு, போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. நடந்து செல்வோர்கூட அவ்வழியாகச் செல்லும்போது பலத்த கெடுபிடிகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

மடத்துக்குச் சுமார் 300 அடி அருகிலேயே மசூதி ஒன்றும் இருக்கிறது. மடத்துக்கு பாதுகாப்பு என்ற பெயரில் போலீஸாரின் கெடுபிடியால் இந்த மசூதிக்குத் தொழுகைக்கு செல்ல முடியாமல் முஸ்லிம் மக்களும் சிரமப்பட்டனர். இந்நிலையில் காஞ்சி மாவட்ட மமக தலைவர் ஷாஜஹான் இதுபற்றி மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானிக்கு வாட்ஸ் அப் மூலமாக ஒரு புகாரை அனுப்பினார். மமக பிரதிநிகள் டி.எஸ்.பி.யையும் சந்தித்து முறையிட்டனர்.

‘மடத்துக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களுக்கும், மசூதிக்கு செல்லும் முஸ்லிம்களுக்கும் சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே சாலையை அடைக்காமல் போக்குவரத்துக்குத் திறந்துவிடுங்கள்’ என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் முஸ்லிம்கள் மசூதிக்குச் செல்வதும் அதிகமாக இருந்தது.

இதை உணர்ந்த எஸ்.பி. உடனடியாக பாதுகாப்பு போலீஸாரிடம் பேசி சாலைத் தடுப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இப்போது மடத்து வாசலில் போலீஸ் இருக்கிறதே தவிர சாலைத் தடுப்புகள் அகற்றப்பட்டுவிட்டன.

இதுபற்றி நாம் மமக காஞ்சி மாவட்டத் தலைவர் ஷாஜஹானிடம் பேசினோம்.

“காஞ்சி ஜெயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதித்தது கண்டிக்கத் தக்கது. அதற்காக போராட்டங்கள் நடத்தலாம். ஆனால் அந்தப் போராட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் நாங்கள் கவனமாக இருக்கிறோம். கடந்த சில தினங்களாகவே இந்த சர்ச்சை காரணமாக போலீஸ் குவிக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டதால் மக்கள் சிரமப்பட்டார்கள். இப்போது நாங்கள் இப்பிரச்னையை எஸ்பி வரை கொண்டுசென்றதை அடுத்து மக்களுக்கான நெருக்கடிகள் குறைந்திருக்கின்றன. மடத்துக்குப் பாதுகாப்பு கொடுக்கட்டும். ஆனால் அது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் அமைந்திருக்க வேண்டும்” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018