மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

நீண்ட தூரப் பேருந்துகள் குறுகிய தூரமாக மாற்றம்!

நீண்ட தூரப் பேருந்துகள் குறுகிய தூரமாக மாற்றம்!

பேருந்துக் கட்டணத்தைப் பெருமளவு உயர்த்தியதைத் தொடர்ந்து சென்னையில் நீண்ட தூரம் செல்லும் 300 பேருந்துகள் குறுகிய தூரப் பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

6 ஆண்டுகளாகக் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறித் தமிழக அரசு கடந்த வாரம் பேருந்துக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது பொதுமக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. இதனைத் திரும்பப் பெறக் கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். உயர் நீதிமன்றமும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் சென்னைப் போக்குவரத்து கழகம், நீண்ட தூரம் செல்லும் 300 பேருந்துகளின் சேவையைக் குறுகிய தூரப் போக்குவரத்துகளாக மாற்றியமைத்துள்ளது. இதனால் நீண்ட தூரம் பயணம் செல்லும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

ஒரே பேருந்தில் பயணம் செய்ய முடியாமல் 2 அல்லது 3 பேருந்துகளின் தேவையை நாட வேண்டியுள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அதிக நேரம் செலவிட நேரிடும். ஏற்கனவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இரு பேருந்துகளில் செல்லும்போது கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் 833 வழித்தடங்களில் மாநகரப் பேருந்துகளை இயக்கிவருகிறது. இதில் ஒவ்வொரு வழித்தடத்திலும் 12 முதல் 14 பேருந்துகள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன.

இதில், ஆவடி, திருமுல்லை வாயில், மதுரவாயல், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அம்பத்தூர், தாம்பரம், வண்டலூர், பாடி, பெருங்களத்தூர், மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த நீண்ட தூரப் பேருந்துகள் குறுகிய தூரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆவடி-வண்டலூர் (70 ஏ), சோழிங்கநல்லூர்- தாம்பரம் மேற்கு (91), செங்குன்றம்- தாம்பரம் (114), திருவேற்காடு -தாம்பரம் (111), கொளத்தூர்- தாம்பரம் (170), திருவான்மியூர்- தாம்பரம் (95) ஆகிய வழித்தடங்களில் சென்று வந்த பேருந்துகளும் இதில் அடங்கும்.

அதாவது திருவான்மியூர் முதல் தாம்பரம் வரை துரைப்பாக்கம் வழியாக இயக்கப்பட்டு வந்த பேருந்து தற்போது குரோம்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் குரோம்பேட்டையிலிருந்து தாம்பரத்திற்கு மாற்றுப் பேருந்தை நாட வேண்டியுள்ளது.

முதலில், குரோம்பேட்டை வரை செல்ல ரூ.24, அங்கிருந்து தாம்பரம் செல்ல ரூ.12 என தாம்பரம் செல்வதற்கு ரூ.36 செலவாகிறது. அதுவே சொகுசுப் பேருந்தில் சென்றால் ரூ.54 செலவாகிறது. கட்டண உயர்வுக்கு முன்பு ரூ.18 மட்டுமே செலவாகும்.

இதுபோன்று ஆவடி முதல் வண்டலூர் வரை இயக்கப்பட்ட நீண்ட தூர பேருந்து சேவையும் குறுகிய தூரமாக மாற்றப்பட்டுள்ளது. அவ்வழியே ரயில் வசதிகளும் இல்லாததால் பேருந்தை மட்டுமே பயன்படுத்திவந்த மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018