மீண்டும் இணையும் ‘இருவர்’ கூட்டணி!


இருபது வருடங்களுக்குப் பிறகு மோகன் லால், பிரகாஷ் ராஜ் இணைந்து நடிக்கவுள்ளனர்.
1997ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மோகன் லால், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், தபு இணைந்து நடித்த படம் ‘இருவர்’. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தாலும் தமிழக அரசியலில் முக்கியமான இரு ஆளுமைகளாக விளங்கிய எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவரது வாழ்க்கை வரலாற்றை அடியொற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. பிரகாஷ் ராஜுக்கு இந்தப் படத்தில் நடித்ததற்காகத் தேசிய விருது வழங்கப்பட்டது.
தற்போது இருபது வருடங்களுக்குப் பிறகு மோகன் லால், பிரகாஷ் ராஜ் இணைந்து மலையாளப் படம் ஒன்றில் நடிக்கின்றனர். ‘ஓடியன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஸ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிப்ரவரி மாதம் நடைபெறும் படப்பிடிப்பில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.