மீனவர்களைப் புறக்கணிக்கும் மோடி


தமிழக மீனவர்கள் மீது மத்திய பாஜக அரசு சிறிதும் அக்கறை கொள்ளவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் அயல்நாட்டு மீன்பிடி படகுகள் தடைச் சட்டம் கடந்த 24ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இரண்டாண்டுகள் வரை சிறையில் வைக்கவும், கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யும். இதனை ரத்து செய்ய வேண்டுமெனத் தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இலங்கை அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதமும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (ஜனவரி 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய பாஜக அரசு தமிழக மீனவர்கள் நலனில் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. அதனால் துணிவுபெற்ற இலங்கை அரசு, தமிழக மீனவர்களுக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் மீனவர்களைக் கைது செய்து, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, 20 லட்சம் முதல் 7 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்தல், படகுகளைப் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறுகின்றது என்று குறிப்பிட்டுள்ள வைகோ, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் நான் பிரதமரை சந்திக்கும்போது, இலங்கை நாடாளுமன்றத்தில் நமது மீனவர்களுக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப் போகிறார்கள். இச்சட்டம் தமிழக மீனவர்களின் நலனுக்கு எதிரானது. எனவே, இந்திய அரசு உடனடியாக தலையிட்டு தடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.