மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல்!

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல்!

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2014ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையின் பதவிக்காலம், 2019ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், வரும் நவம்பர் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு மாறாக, வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில்கூட நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரசாரத்துக்கு உதவிகரமாக இருந்தது நிதி டிஜிட்டல் எனும் நிறுவனம். இதனைச் சேர்ந்த ராஜேஷ் ஜெயின் என்பவர், இன்னும் 100 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளார். “வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருமென்று, யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள்.

அதனால், இந்த அறிவிப்பின் மூலமாக எதிர்கட்சிகளுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கவுள்ளது பாஜக” என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், சமாஜ்வாதி கட்சியினர் இந்த முடிவுக்கு தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கணித்தே, தங்களது கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடும் முடிவை தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், 2018ஆம் ஆண்டின் மத்தியிலேயே நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடும் என்று கருத்து தெரிவித்திருந்தார் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ். இதுபோலவே, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் தேர்தல் அறிவிப்பை முன்கூட்டியே அனுமானித்துள்ளதாகவும், அதற்கேற்பத் திட்டங்களைச் செயல்படுத்திவருவதாகவும் சொல்லப்படுகிறது.

”இன்னும் 20 மாதங்கள் காத்திருப்பதை விட, கடந்த மூன்றரை ஆண்டுகளில் கிடைத்த நற்பெயரை அறுவடை செய்வதே பாஜகவுக்கு நலம் பயக்கும். இல்லாவிட்டால், விவசாயிகள் போராட்டம், வேலையில்லாப் பிரச்சினை போன்றவை பெருமளவில் தலைதூக்கும் வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார் அரசியல் ஆய்வாளர் அமுல்யா கங்குலி.

விவசாயிகள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, பிப்ரவரியில் அமலாகும் பட்ஜெட்டில் நிறைய சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு குறித்தான சில அறிவிப்புகளும்கூட அதில் இடம்பெறலாம்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிலும் முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில், மத்தியிலும் மாநிலங்களிலும் அமையும் ஆட்சியை ஒரே நேரத்தில் தீர்மானிக்கும் விதமாகத் தேர்தல் நடத்தத் தயாராகி வருகிறது பாஜக.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 26 ஜன 2018