புழல் சிறையில் நாதுராம் அடைப்பு!


ராஜஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட கொள்ளையன் நாதுராம் உட்பட 3 பேர் இன்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் மூன்றரை கிலோ தங்க நகைகள், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்தக் கொள்ளைs சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநிலத்தைச் சேர்ந்த நாதுராம் தலைமையிலான கும்பல் என்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த கொள்ளையர்களை கைது செய்ய தனிப்படை போலீசார், ராஜஸ்தான் விரைந்தனர். அந்தச் சமயத்தில் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
தப்பியோடிய நாதுராமை கைது செய்ய தமிழக போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். பின்னர் குஜராத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையர்களை ராஜஸ்தான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாதுராமை நீதிமன்ற அனுமதியுடன் அழைத்து வர 10 பேர் கொண்ட தனிப்படை இரு தினங்களுக்கு முன்பு .ராஜஸ்தான் விரைந்தன.
அதன்படி நேற்று நாதுராம் உட்பட அவரது கூட்டாளிகள் இரண்டு பேரையும் கைது செய்த தமிழக போலீசார் விமானம் மூலம் இன்று (ஜனவரி 26) அதிகாலை சென்னை அழைத்து வந்தனர்.
எழும்பூரில் உள்ள நீதிபதி குடியிருப்பில், மாஜிஸ்திரேட் முன்பு அவர்களை ஆஜர்ப்படுத்திய போலீசார், நாதுராம் உள்பட 3 பேரையும் புழல் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.