மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

செங்கோட்டையில் கொடியேற்றினார் குடியரசுத்தலைவர்!

செங்கோட்டையில் கொடியேற்றினார் குடியரசுத்தலைவர்!

குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தும், சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் தேசியக் கொடியை ஏற்றினர்.

இந்தியாவின் 69ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று (ஜனவரி 26) உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஹுக், மலேசிய பிரதமர் முகம்மது நஜிப் அப்துல் ரசாக், தாய்லாந்து பிரதமர் ஜெனரல் சான் ஓ சா, மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ டடெர்டே, புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல் போல்க்யா வாதாதுலா, லாவோஸ் பிரதமர் தோங்லூன் சிஸோலித், கம்போடியாவின் பிரதமர் ஹன் சென் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. சுமார் 60 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ராஜ்பாத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்குத் தலைவர்களை குடியரசுத்தலைவரும் பிரதமர் மோடியும் வரவேற்றனர்.

தேசியக் கொடியை குடியரசுத்தலைவர் ஏற்றியதை அடுத்து, முப்படை வீரர்கள் மற்றும் சிறப்புப்படை வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியது. ராணுவ டாங்கிகள், பிரமோஸ் ஏவுகணை, விமானப்படை, கடற்படையில் உள்ள நவீன தளவாடங்கள் அணிவகுத்தன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் உள்ள ஹாஜின் என்ற பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் விமானப்படையைச் சேர்ந்த கமாண்டோ ஜே.பி. நிராலா, மூன்று தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்று தானும் வீர மரணம் எய்தினார். அவரது இந்த தியாகத்தைப் பாராட்டி இந்த ஆண்டுக்கான அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரிடம் குடியரசுத்தலைவர் இந்த விருதை வழங்கினார். அப்போது உணர்ச்சி பெருக்கில் அவர் கண்கலங்கினார்.

துணை குடியரசுத்தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தேசியக் கொடி ஏற்றிய ஆளுநர்

இதேபோல், சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். முன்னதாக மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்து ஆளுநர் மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து,விழா நடக்கும் இடத்திற்கு ஆளுநர் வந்தார். முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றிவைத்தார்.

பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், பல்வேறு துறைகளின் சார்பில் இடம்பெற்றுள்ள கண்காட்சி அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். திமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அக்கட்சியின் பேரைவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து காந்தியடிகள் காவலர் விருதுகள், அண்ணா விருதுகள், வேளாண் துறை சிறப்பு விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

விழாவையொட்டி மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குடியரசு தின விழாவையொட்டி, சென்னை முழுவதும் பத்தாயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 26 ஜன 2018